வைஃபை ஆன் செய்ததும் உதயநிதி இளைஞரணிச் செயலாளர் ஆக பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆனதற்காக அவரை கட்சியினர் வாழ்த்தும் செய்திகள் இன்பாக்சில் வந்தது.
“2019 ஜூலை 4 ஆம் தேதிதான் உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் திமுக இளைஞரணிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பை உதயநிதி ஏற்று இன்று 4 ஆண்டுகள் ஆகி ஐந்தாம் ஆண்டு தொடங்குவதை ஒட்டி கட்சி நிர்வாகிகள் பலரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கட்சிக்குள் இளைஞரணிச் செயலாளர் மூலம் தனது செல்வாக்கை செலுத்தி வரும் அமைச்சர் உதயநிதி, அமைச்சரவையிலும் சீனியர் அமைச்சர்கள் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கிறார். இந்த வரிசையில் அரசு உயர் அதிகாரிகள் நியமனத்திலும் உதயநிதியின் கொடியே பறக்கிறது. இதுகுறித்து நேற்று (ஜூலை 3) டிஜிட்டல் திண்ணையில் ‘கோட்டையின் மாமன்னன் உதயநிதி- குழப்பத்தில் அதிகாரிகள்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஐ.ஏ.எஸ். உயரதிகாரிகளைத் தொடர்ந்து ஐபிஎஸ் உயரதிகாரிகள் மாற்றத்திலும் உதயநிதி முக்கிய பங்கு வகிக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை சந்திக்கும் உயர் அதிகாரிகளிடம், ‘தம்பிய பாத்துடுங்க’ என்று ஒரு சில வார்த்தைகளில் சொல்லி உத்தரவிட… அதன்படியே பல அதிகாரிகளும் உதயநிதியை அவரது குறிஞ்சி பங்களாவுக்கு சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான் உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு தலைமையிடத்துக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரது பொறுப்பையும் சேர்த்து உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உளவுத் துறை ஐஜி செந்தில்வேலன் குறிஞ்சி இல்லம் சென்று தம்பியை சந்திப்பதில் தயக்கம் காட்டுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முறையான நிர்வாக பதவியில் இருப்பவரிடம்தான் ரிப்போர்ட் செய்யலாம்… அமைச்சராக இருப்பவரிடம் எப்படி ரிப்போர்ட் செய்ய முடியும்? நாளைக்கு இதில் வேறு சிக்கல்கள் ஏதும் எழுந்தால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தானே எதிர்கொள்ள வேண்டும் என்று சில அதிகாரிகள் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் தனக்கு தோதான தனக்கு விசுவாசமாக தன் அலை நீளத்தோடு ஒத்துப் போகும் அதிகாரிகளை உயர் பதவியில் நியமிக்க முடிவு செய்திருக்கிறார் உதயநிதி. அதன்படி தற்போதைய உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்படலாம். உளவுத்துறை ஐ.ஜி. பொறுப்புக்கு தற்போது வடக்கு மண்டல ஐஜியாக இருக்கும் கண்ணன் நியமிக்கப்படலாம் என்றும் ’தம்பி’ படை வட்டாரங்களில் பேசப்படுகிறது. உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை ஏற்கனவே டிஜிபி ராமானுஜம் பாணியில் தானே கவனித்துக் கொள்ளவும் சங்கர் ஜிவால் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் தென் மண்டல ஐஜியாக தற்போது இருக்கும் அஸ்ரா கார்க் சென்னையில் முக்கிய பதவியில் அமர்த்தப்படுவார், அதேபோல தற்போதைய மேற்கு மண்டல ஐஜி சுதாகர் சென்னை மாநகர கூடுதல் கமிஷனராக மாற்றப்படுவார் என்றும்… இந்த வரிசையில் தற்போதைய தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு ஆயுதப்படை பிரிவில் ஏடிஜிபியாக இருக்கும் ஹெச். எம். ஜெயராமனை நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இதுமட்டுமல்ல சட்டம் ஒழுங்கு துறையில் மாநகர அளவில் ஏ.சி, டி.சி.க்களையும் உளவுத்துறையில் இன்ஸ்பெக்டர், ஏசிக்களையும் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
உதயநிதியிடம் அதிகாரம் குவிந்து வருவதை உணர்ந்து… போலீஸ் வட்டாரத்தில் நல்ல பதவியை கேட்டும், இருக்கும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் பல அதிகாரிகள் குறிஞ்சி பங்களாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பொன்முடி வழக்கு : ஜூலை 6ல் தீர்ப்பு!
திமுக எம்பி ஞான திரவியம் விவகாரம்: என்னதான் நடக்கிறது?