Udhayanidhi next level in dmk party

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி கூட்டிய தலைமைக் கழகம்… திமுகவின் ‘குறிஞ்சி’ மெசேஜ்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் உதயநிதியின் அரசு இல்லமான சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள குறிஞ்சி இல்லத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியின் ஃபோட்டோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்தபடியே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

“மின்னம்பலத்தில் இன்று (பிப்ரவரி 22) மாலை 4.42க்கு  உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் மாசெக்கள் கூட்டம் என்ற தலைப்பில் செய்தி முதன் முறையாக வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படியே இன்று மாலை ஆறு மணி அளவில் அமைச்சர் உதயநிதியின் அதிகாரபூர்வ இல்லமான குறிஞ்சி இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தொடங்கி,  பொருளாளர் டி. ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் அமைச்சர்  கே. என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்களோடு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மேடையில் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு உழைத்தவர்களுக்கு நன்றி என்று எழுதப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி மாநில மாநாடு உதயநிதி தலைமையில் சேலத்தில் நடைபெற்றது. இதற்காக உழைத்த திமுக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கு ஜனவரி 26 ஆம் தேதி தனது குறிஞ்சி இல்லத்தில் பாராட்டு விழா நடத்தி விருந்து கொடுத்து பரிசும் கொடுத்தார் உதயநிதி.

இந்த நிலையில்தான் இன்று திமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து இளைஞரணி மாநாட்டுக்கு உழைத்தமைக்காக நன்றி தெரிவித்து… கலைஞர் சிலையை அனைவருக்கும் வழங்கி, விருந்தும் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

Udhayanidhi next level in dmk party

உதயநிதி இப்போது திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இருக்கிறார். அவர் அழைத்தால் திமுகவின் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் வரலாம். ஏனென்றால் அந்த அணிக்கு அவர்தான் செயலாளர். ஆனால் உதயநிதி அழைப்பின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலினை தவிர ஒட்டுமொத்த திமுக தலைமை கழகமும் மாவட்ட செயலாளர்களும் இன்று குறிஞ்சி இல்லத்தில் திரண்டனர்.

கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார், பொறுப்பு முதல்வராகிறார் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன. ஆனால் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் ஈரோடு பிரகாஷ், ’நமது இளைஞரணி செயலாளருக்கு அரசு ரீதியான பதவிகள் பதவி உயர்வுகள் கொடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரை கட்சி ரீதியாக அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

கிட்டத்தட்ட அந்த கோரிக்கையை அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிறைவேற்றி விட்டது போலத்தான் இன்றைய நிகழ்ச்சி நடந்தது.

Udhayanidhi next level in dmk party

உதயநிதியின் அழைப்பை ஏற்று ஸ்டாலினை தவிர அனைத்து நிர்வாகிகளும் குறிஞ்சி இல்லத்துக்கு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே. என். நேரு, சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கு தானும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதியும் எவ்வாறு ஒன்றுபட்டு உழைத்தோம் என்பதை விளக்கினார்.

தான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சியின் புரோட்டோகால் விதிகளை மீறாத வகையில் உதயநிதி, முன்கூட்டியே பேசி விட்டார். இந்த நிகழ்வில் பேசிய பொருளாளர் டி.ஆர்.பாலு இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார். உதயநிதி இந்த தேர்தலில் முக்கியப் பங்காற்றுவார் என்றும் கூறினார்.

நிறைவுறையாற்றிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 2006- 11 திமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து உதயநிதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றிய மெசேஜை வெளியிட்டார்.

Udhayanidhi next level in dmk party

அவர் பேசுகையில்,  ‘2006 இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது கோபாலபுரம் இல்லத்தில் தினமும் அவரை சந்திக்க கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், டெல்லியில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் வந்துகொண்டிருந்ததால் இட நெருக்கடி அதிகமானது.

இதனால் அப்போது கலைஞரிடம் நீங்கள் நன்றாக வசதியாக அரசு பங்களாவில் குடியேறலாமே என்று நாங்கள் யோசனை சொன்னோம். முதலில் ஏற்க தயங்கியவர் பிறகு சம்மதித்தார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக நான் இருந்ததால் கலைஞர் குடியேறுவதற்காக இந்த குறிஞ்சி இல்லத்தின் புனரமைப்பு வேலைகளை முன் நின்று கவனித்தேன்.

எல்லா வேலைகளும் நிறைவுற்ற  பிறகு கலைஞரை அழைத்துக் கொண்டு இங்கே வந்தேன். அப்போது குறிஞ்சி இல்லத்தை பார்த்து இது என்ன இவ்வளவு பரந்து விரிந்திருக்கிறது… சின்ன சின்ன இட நெருக்கடிகள் இருந்தாலும் கோபாலபுரமே போதும் என்று கூறிவிட்டார். அதன்பிறகு குறிஞ்சி இல்லம் அப்போது துணை முதல்வரான ஸ்டாலின் வசிக்கும் இல்லமாக மாறியது.

கலைஞருக்காக நான் ஏற்பாடு செய்த குறிஞ்சி இல்லத்தில் இன்று தம்பி உதயநிதியை பார்க்கும் போது மிகவும் பொருத்தமாக இருக்கிறது’ என்று துரைமுருகன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

அதாவது கலைஞர் வருவதாக இருந்து வராமல் விட்டுவிட்ட குறிஞ்சி இல்லத்துக்கு இப்போது உதயநிதி வந்திருப்பதை பொருத்தமான செயல் என்று கூறினார் துரைமுருகன்.

இந்த நிகழ்ச்சி மூலமாக திமுக இளைஞரணி மாநாட்டுக்கு உழைத்த மாவட்ட செயலாளர்களுக்கு உதயநிதி நன்றி சொல்வது என்பது வெளிப்படையான மெசேஜாக இருந்தாலும் திமுக தலைவரை தவிர மற்ற அனைத்து நிர்வாகிகளும் உதயநிதியின் அழைப்பின் பேரில் குறிஞ்சி இல்லத்துக்கு திரண்டதால் கட்சி ரீதியாக உதயநிதிக்கு அடுத்த கட்ட உயர்வு அளிக்கப்பட இருப்பதைத்தான் இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு : மகா பஞ்சாயத்துக்கு தயாராகும் விவசாயிகள்!

“ED, சிபிஐ வைத்து கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்”: அமைச்சர் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *