வைஃபை ஆன் செய்ததும் சென்னை ஃபார்முலா கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி பச்சைக் கொடி காட்டி துவக்கி வைக்கும் போட்டோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஃபார்முலா 4 கார் ரேஸ் தெற்காசியாவிலேயே முதல் முறையாக இன்றும் நாளையும் சென்னையில் நடக்கிறது. விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி பச்சைக் கொடியசைத்து ஃபார்முலா கார் பந்தயத்தை இன்று மாலை தொடங்கி வைத்திருக்கிறார்.
2023 ஆம் ஆண்டே டிசம்பர் 9, 10 தேதிகளில் இந்த கார் பந்தயம் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் விளையாட்டுத் துறை குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் எனப்படும் கார் ரேஸ் துறையில் தமிழ்நாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்த பந்தயம் திட்டமிடப்பட்டது.
ஆனால், அப்போது டிசம்பர் மழைவெள்ளத்தால் இது தள்ளிப் போடப்பட்டது. இதற்கிடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார். சமூக தளத்தில் சிலர் கார் பந்தயத்தையும் உதயநிதியையும் வேறு வகையில் தொடர்புபடுத்தி விமர்சனங்களை வைத்தனர்.
அப்போதே கார் பந்தயத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் மகாதேவன் அமர்வு இது தொடர்பான சில வழிகாட்டும் நெறிமுறைகளை பிறப்பித்தது.
இந்நிலையில், மீண்டும் மழைக் காலத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம், அதற்கு முன்பே ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்தலாம் என்று திட்டமிட்ட அமைச்சர் உதயநிதி ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடத்த முடிவு செய்தார்.
இதற்கான ஏற்பாடுகள் வேகவேகமாக நடந்தன.
உலகளாவிய தரத்தில் நடக்கும் ஃபார்முலா கார் ரேஸ் தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுவதால், அது தொடர்பான எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. பிரபல கார் கம்பெனிகள், சர்வதேச கார் பந்தயத்துக்கான விளம்பர கம்பெனிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தோடு தொடர்புகொண்டு இதுகுறித்து விவாதித்தனர். ரேசிங் ப்ரமோஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தோடு இணைந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடுகளை தீவிரமாக செய்தது.
இந்த நிலையில்தான் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இந்த ஃபார்முலா கார் ரேஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இது மாதிரி பந்தயங்கள் வெளிநாட்டில் நடக்கும்போது பின்பற்றப்படும் விதிமுறைகள் இதில் பின்பற்றப்படவில்லை. மேலும், கார் ரேஸ் நடக்கும் பகுதிகளுக்கு மிக அருகே முக்கியமான மருத்துவமனைகள் இருக்கின்றன. பந்தயத்தால் ஏற்படும் அளவுக்கு அதிகமான சத்தம் மருத்துவமனை உள் நோயாளிகளை பாதிக்கும். பொது மக்களையும் இது பாதிக்கும்.
மேலும், தேர்ந்தெடுத்துள்ள கார் ரேஸ் பாதை (டிராக்) உரிய சோதனைகளுக்குப் பின் சான்றளிக்கப்பட்டுள்ளதா? பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு சான்றளிக்கவேண்டும். அது இன்னமும் அளிக்கப்படவில்லை.
ஆனால், பெண் பார்ப்பதற்கு முன்பே கல்யாண மண்டபத்தை அலங்கரிப்பது போல, முக்கியமான அந்த அனுமதி வாங்காமலேயே கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்’ என்று ஏ.என்.எஸ்.பிரசாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி கூறினார்.
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், ‘பொதுவாக FIA (சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு) ரேஸ் தொடங்கும் சில மணிகளுக்கு முன்பாகத்தான் அந்த அனுமதியை வழங்கும்’ என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, ‘கார் பந்தயத்தை ஒட்டி மிக விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வாகனங்களை பார்க்கிங் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் பாதிக்காத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்று பட்டியலிட்டார்.
இதேபோல, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனரும் தனியாக ஒரு அபிடவிட் தாக்கல் செய்து மருத்துவமனைகளில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன், போக்குவரத்து மாற்றங்கள் பற்றியும் விரிவான அபிடவிட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து ஏற்கனவே உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த நெறிமுறைகளோடு ஃபார்முலா கார் ரேஸுக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், FIA அனுமதியை ஆகஸ்டு 31 ஆம் தேதி பகல் 12 மணிக்கோ அதற்கு முன்போ நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும், மனுதாரர் வழக்கறிஞருக்கு மெயில் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கிடையில், ஆகஸ்டு 30ஆம் தேதி இரவு கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி. அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதியைத் தொடர்புகொண்டு, கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகள், அதில் ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான பிரச்சினைகள் பற்றி கேட்டிருக்கிறார்.
அதற்கு உதயநிதி, ‘நீதிமன்றத்தில் தேவையான தகவல்களைக் கொடுத்து அனுமதி பெற்றிருக்கிறோம். கவலைப்படத் தேவையில்லை’ என்று அப்பாவான முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அந்த தனியார் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில், ‘FIA அனுமதி பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நீதிமன்றமும் அவகாசம் அளித்தது. இன்று மாலை வாக்கில் FIA அனுமதி அளித்தது. இதையடுத்து ஃபார்முலா கார் ரேஸ் இன்று மாலை பயிற்சி ஆட்டத்துடன் முறைப்படி தொடங்கியது.
‘இதற்கு முன்பாக பெரும் சட்டப் போராட்டத்தை சந்தித்திருக்கிறார் உதயநிதி. முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும் இந்த நிலையில், இப்படி ஒரு சட்டப் போராட்டம் மற்றும் மழை ஆகியவற்றை எதிர்கொண்டு… அதோடு நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு சாதித்திருக்கிறார் உதயநிதி.
நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய தகவல்கள் பற்றி உரியவர்களோடு விவாதித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து ரேஸ் கார் வேகத்தில் உதயநிதி செயல்பட்டிருக்கிறார். இதில் அரசுத் தரப்பில் சிறு தவறு நிகழ்ந்திருந்தாலும் அது உதயநிதியின் இமேஜுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையின் இமேஜுக்கும் கரும்புள்ளியாகியிருக்கும். முதல்வர் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், உதயநிதி இதை கையாண்ட விதம் இப்போது நிர்வாக வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது’ என்கிறார்கள் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள்.
இதற்கிடையே பாஜக சார்பில் வழக்கு போட்ட பிரசாத்துக்கு அக்கட்சியைச் சார்ந்த முக்கியஸ்தர்களே உறுதியான உதவிக் கரம் நீட்டவில்லை என்ற குமுறலும் பாஜகவுக்குள்ளேயே கேட்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் ஏஐ ஆய்வகங்கள்… கூகுளுடன் கைகோர்த்த தமிழக அரசு!
திருச்சிக்கு மெட்ரோ: கார்த்தி சிதம்பரம் Vs அருண் நேரு… காரசார விவாதம்!