டிஜிட்டல் திண்ணை: உத்தரவை மதிக்காத அதிகாரிகள்… இளைஞரணியை மதிக்காத மா.செ.க்கள் – உடைத்துப் பேசிய உதயநிதி

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி சேலத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதற்காக அவரை வாழ்த்துவதற்கு  பல்வேறு மாவட்டங்களில் இருந்து  கட்சி நிர்வாகிகள் சென்னையை நோக்கி திரண்ட வண்ணம் இருந்தனர்.

துணை முதலமைச்சர் ஆக்கப்பட்ட பிறகு கூடுதல் பொறுப்புகளும் உதயநிதிக்கு அளிக்கப்பட்டதால் அரசு பணிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருந்தது.

இதனால் என்னை பார்ப்பதற்காக வாழ்த்துவதற்காக சென்னைக்கு கஷ்டப்பட்டு வர வேண்டாம். நானே உங்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறேன் என்று ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தார் உதயநிதி.

இந்த நிலையில் இளைஞர் அணி முக்கிய நிர்வாகிகள் உதயநிதியிடம்,’நீங்கள் துணை முதலமைச்சர் ஆன பிறகு  இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும்  துணை அமைப்பாளர்களை  பிரத்தியேகமாக ஒருமுறை சந்திக்க வேண்டும்.  அதற்கான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தனர். உடனடியாக இதை ஏற்றுக் கொண்ட உதயநிதி  சென்னையில் தனது அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்திலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார்.

ஆனால், அதற்குள் வானிலை மாற்றம் சென்னைக்கு ரெட் அலர்ட் என்றெல்லாம் தகவல்கள் வர அரசுத் துறைகள் சார்ந்த பணிகளில் மும்முரமானார் உதயநிதி. இந்த நிலையில் தான் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கேயே வைத்து இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து விடலாம் என திட்டமிட்டார்.

ஆனால் அங்கும் முடியாததால்  இனியும்  தள்ளிப் போட வேண்டாம் என அக்டோபர் 20ஆம் தேதி சேலத்தில் அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை சந்திப்பதற்கான  நிகழ்ச்சியை உறுதி செய்தார் உதயநிதி.

உதயநிதி தலைமையில் இளைஞர் அணியின்  இரண்டாவது மாநில மாநாடு சமீபத்தில் சேலத்தில் தான் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பிறகுதான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்றன. இதனால் சேலத்துக்கும் திமுக இளைஞரணி  நிர்வாகிகளுக்கும் இடையில் சென்டிமென்டாகவே ஒரு  பிணைப்பு உருவானது.

இந்நிலையில், திட்டமிடப்படாமல் எதேச்சையாக சேலத்தில் நடந்திருக்கிறது துணை முதல்வர் உதயநிதி தலைமையிலான இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம். இந்தக் கூட்டத்துக்கு மதியமே அனைவரையும் அரங்கத்துக்கு வரச் சொல்லிவிட்டார்கள்.,

மதியம் மட்டன் பிரியாணி, குடல் கறி, எலும்பு குழம்பு, சிக்கன் 65 மற்றும் சாப்பாடு, ரசம், கத்திரிக்காய் தொக்கு, ஐஸ்க்ரீம், வாழைப் பழம் என்று விருந்து வைத்து அசத்தினார்கள்.

சில மணி நேரத்துக்குப் பின் மாலை  4.30   மணிக்கு கூட்டம் தொடங்கியது. இளைஞரணி மாநாட்டுக்குப் பின் துணை முதல்வராக முதன்முதலில் உதயநிதி சேலம் வருவதால் இளைஞரணியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இந்தக் கூட்டம் என்பது இளைஞரணியினருக்கானது மட்டுமே என்பதால் உங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்னிடம் சொல்லுங்க… குறிப்பிட்ட சிலர்தான் பேச முடியும், மற்றவர்கள் என்ன பிரச்சினை என்பதை என்னிடம் எழுதிக் கொடுத்துவிடுங்கள் என்று ஏற்கனவே உதயநிதி அறிவுரை கூறியிருந்தார்.

அதன்படியே இன்றைய கூட்டத்தில் சிலர் மட்டுமே பேசினர்.

நெல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரவீந்தர் பேசும்போது, ‘அரசு அதிகாரிகள் இளைஞரணியினரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நியாயமான வேலையாக இருந்தால் கூட அதை செய்துகொடுப்பதே இல்லை. அப்படி செய்துகொடுப்பதாக இருந்தாலும் அலையவிட்டு மிக தாமதமாகவே செய்துகொடுக்குறாங்க’ என்று கூறினார்.

சேலம் மாவட்ட அமைப்பாளர் வீரபாண்டி பிரபு பேசும்போது, ‘நீங்க இப்ப துணை முதலமைச்சராக ஆகிட்டீங்க. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நீங்க சுற்றுப் பயணம் வரும்போது மாவட்டச் செயலாளர், அமைச்சர்கள்தான் உங்களைச் சுற்றி நிற்கிறாங்க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளரையும் உங்க பக்கத்துல வச்சுக்கிட்டீங்கன்னா இளைஞரணிக்கு மரியாதையா இருக்கும், கட்சிக்குள்ள எங்களுக்கும் கௌரவமா இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்.

இதுபோல சிலர் பேச திண்டுக்கல் செல்ல வேண்டிய அவசரத்திலும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு பேசினார் துணை முதலமைச்சர் உதயநிதி.

இளைஞரணியினரின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய உதயநிதி அரசு அதிகாரிகள் பற்றிய பிரச்சினைக்கு பதிலளித்தார்.

‘இளைஞரணித் தம்பிமார்கள் சொன்னால்  அரசு அதிகாரிகள்  கேட்பதில்லை என்று ஜான் ரவீந்தர் சொன்னாரு. இதை நானே களத்தில் நேரில் பாத்திருக்கேன். கடந்த 4 மாதமாகவே மழை வரும், கன மழை அபாயம் இருக்கும் என்ற  எச்சரிகையோடு பணிகளை செய்யச் சொல்லி 5 முறை ஆய்வுக் கூட்டம் நடத்தியும்… மழை வருவதற்கு முதல் நாள் வரை வேலைகள் நடக்கவில்லை.

நானே முதல் நாள் இரவு 12 மணிக்கு களத்தில் இறங்கிய பிறகுதான் சில பணிகள்  ஆரம்பிக்கப்பட்டன.  இது கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியின் அவலம்’ என்று அதிமுக ஆட்சியையும் அதிகாரிகளையும் கடுமையாக தாக்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி.

இதைக் கேட்ட இளைஞரணி நிர்வாகிகள், ‘அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்று துணை முதல்வர் சொல்கிறார் என்றால், அதிகாரிகளை மட்டுமா சொல்கிறார்? அவர்களை வேலை வாங்காமல் இருந்த அமைச்சர்களையும் சேர்த்துதானே சொல்கிறார்?’ என்று அங்கேயே  விவாதிக்கத் தொடங்கினர்.

அடுத்து வீரபாண்டி பிரபுவின் கோரிக்கைக்கு பதிலளித்த உதயநிதி, ‘நான் சேலம் வந்தபோது எல்லா மாவட்டச் செயலாளர்களையும் முந்திக் கொண்டு எனக்கு முதல் வரவேற்பு அளித்தவர் பிரபுதான். அவர் கவனிச்சாரானு தெரியலை, அவர் எப்படி என்னை நோக்கி வந்தார்னு நான் நல்லா கவனிச்சேன். நான் இன்னிக்கு இந்த மாவட்டத்துல இருக்கேன், நாளைக்கு வேறொரு மாவட்டத்துக்கு போயிடுவேன். ஆனா நீங்க இந்த மாவட்டத்துலதான் இருந்து அரசியல் செய்யணும் பாத்துக்கங்க. பிரபுவுக்கு இருக்கும் துணிச்சல் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் இருக்குமா?’ என்று கேட்டதுதான் தாமதம் கூட்டமே ஆரவாரித்தது.

அதாவது மாசெக்களுக்கு இணையாக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் தைரியமாக செயல்பட வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் உதயநிதி.

மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை நாம் கைப்பற்ற வேண்டும். இளைஞரணி நிர்வாகிகளுக்கான உயர் பொறுப்புகள், வாய்ப்புகளுக்கு எப்போதும் நான் இளைஞரணியினருக்கு உறுதுணையாக இருப்பேன்’ என பேசியிருக்கிறார்.  இதிலிருந்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக இளைஞரணியினர் பலருக்கு எம்.எல்.ஏ. சீட் உறுதி என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தீபாவளி… எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? – வெளியான முக்கிய அறிவிப்பு!

விஜய் உத்தரவு… வேகமெடுத்த மாநாட்டு பணிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel