Digital Thinnai: Uday's pressure! Thiruma agrees..

டிஜிட்டல் திண்ணை:  உதய் போட்ட ப்ரஷர்! ஒப்புக் கொண்ட திருமா… சஸ்பெண்டுக்குப் பின் டெல்லியில் திருமாவை சந்திக்கும் ஆதவ்

வைஃபை ஆன் செய்ததும் விசிகவில் இருந்து துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்த அறிவிப்பும், அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்த படமும்  இன்பாக்சில் வந்து விழுந்தது.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஒரு வழியாக விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆறு  மாதங்களுக்கு கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்திருக்கிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.

டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசிய மன்னராட்சி பேச்சுதான், இப்போது ஆதவ் அர்ஜுனாவை சஸ்பெண்ட் வரை தள்ளியிருக்கிறது.

ஆதவ் குறிவைத்து துணை முதல்வர் உதயநிதியைதான் தாக்குகிறார் என்பது எல்லாருக்கும் தெளிவாக தெரிந்ததுதான். மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், 2026 இல் பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூடாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து மறுநாள் டிசம்பர் 7 ஆம் தேதி வேலூரில் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

’யாரு பிறப்பால முதல்வர் ஆனது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுதான் ஆகியிருக்காங்க. அந்த அறிவு கூட அந்தாளுக்கு இல்ல’ என்று கோபமாக பேசினார்.

அதற்கு முன்பே உதயநிதி   கூட்டணிக் கட்சிகளுடனான விவகாரங்களைக் கையாளும் அமைச்சர் எ.வ.வேலுவிடம் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

‘என்ன நினைச்சுக்கிட்டிருக்காங்க அவங்க…  திருமா அண்ணன்கிட்ட பேசினீங்களா? ஏற்கனவே இப்படித்தான் ஒரு முறை பேசினாங்க. நாம பொறுமையா போனோம். இப்ப இன்னும் அதிகமாக பேசியிருக்காரு. திருமா அண்ணன்கிட்ட பேசுங்க’ என்று கூறியுள்ளார்.  இதே வருத்தத்தையும் ஆதங்கத்தையும் தனது தந்தையும் தலைவருமான முதல்வர் ஸ்டாலினுடமும் தெரிவித்துள்ளார் உதயநிதி.

அதாவது உதயநிதியின் கோபத்தின் பின்னணி ஆதவ் மீது திருமாவளவன் ஆக்‌ஷன் எடுக்க வேண்டும் என்பதுதான்.

உதயநிதியிடம் இருந்து அமைச்சர் எ.வ.வேலுவுக்கு இது தொடர்பாக மீண்டும் மீண்டும் போன் அழைப்புகள் சென்றிருக்கின்றன. இதையடுத்து திருமாவிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ‘நிலைமை கை மீறி போயிட்ட மாதிரி இருக்கு. எங்க கட்சி நிர்வாகிகளே வேற மாதிரி கோரிக்கை வைக்கிறாங்க.  முடிவு உங்க கையிலதான் இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில்தான்  டிசம்பர் 7 ஆம் தேதி விசிக தலைமை அலுவலகத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, உயர் நிலை நிர்வாகக் குழு கூட்டம் நடந்திருக்கிறது.

அதில் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளார்கள் ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் ‘ஆதவ் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியது தெளிவாக தெரிகிறது. தலித் அல்லாத நிர்வாகி என்ற அடிப்படையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு பல வாய்ப்புகள் கொடுத்தாகிவிட்டது. ஆனால் அவர் கூட்டணிக்கு மட்டுமல்ல நம் கட்சிக்கும் எதிரான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறார். இப்படியே விட்டால் நாம் திமுகவோடு கூட்டணி வைத்தால் கூட,  கிரவுண்ட் லெவலில் திமுகவினர் நமக்கு வேலை செய்ய மாட்டார்கள். எனவே அவர் மீது கட்சி விதிப்படி ஒழுங்கு நடவடிக்கை அவசியமாகிறது’ என்று கூறியிருக்கிறார்கள்.

அப்போது திருமாவளவன், ‘சரி… நாம் ஃபெஞ்சல் வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சரை சந்தித்துக் கொடுக்க வேண்டும். அவரை சந்தித்த பிறகு ஆதவ் மீதான நடவடிக்கையை அறிவிக்கலாம். முன்பே அறிவித்தால்,  ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுத்துவிட்டுதான் முதல்வர் வரச் சொன்னார் என்று செய்திகள் கிளம்பும் அதனால் முதல்வரை சந்தித்துவிட்டு அவர் மீதான நடவடிக்கையை அறிவிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு  நிர்வாகிகள், ‘முதல்வரை சந்தித்துவிட்டு வந்து நடவடிக்கையை அறிவித்தால், முதல்வர் நேருக்கு நேராக சொல்லிய பிறகு திருமா செய்தார் என்பார்கள். பேசுகிறவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால்  விரைவில் அறிவிப்பை வெளியிட்டால்தான் கட்சிக்குள் இயல்பு நிலைமை வரும்’ என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதன் பின் 7 ஆம் தேதி நடந்த கூட்டத்திலேயே ஆதவ் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது விசிக நிர்வாகிகள் சிலர் மூலமே திமுகவுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பேரில்தான் டிசம்பர் 8ஆம் தேதி அறிவாலயத்தில் இருந்து, ‘விஜய், ஆதவ் அர்ஜுனா பற்றி எதுவும் பேசி அவர்களுக்கு ஊடக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பப்பட்டது.   

பொதுவாக விசிக கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின், அவர்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்கப்படும். அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கம் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிசீலிக்கப்படும். விளக்கம் சரியாக இருந்தால் நடவடிக்கையை ரத்து செய்ய ஒழுங்கு நடவடிக்கை குழு பரிசீலிக்கும். அதன்படி தலைவர் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வார்.

மாவட்ட நிர்வாகிகள் மீது கூட சமீபத்தில் 3 மாத சஸ்பெண்ட்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடலூர் மாவட்ட விசிக நிர்வாகி வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியை வெட்டுவேன் என்று பேசியிருந்தார். அதற்காக அவர் மீது நவம்பர் 8ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.   

அதில், ‘வ.க. செல்லப்பன் மற்றும் செல்வி முருகன் ஆகிய இருவரும் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும் இந்நாளிலிருந்து பதினைந்து நாள்களில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்னர், இது குறித்த விசாரணையில் இருவரும் உரிய விளக்கமளிக்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நவம்பர் 23 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலும் 3 மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு, 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென அறிவித்தார் திருமாவளவன்.

ஆனால் ஆதவ் அர்ஜுனா மீது 6 மாத சஸ்பெண்ட் என்று அறிவித்த அதேநேரம், அந்த அறிவிப்பில்  இத்தனை நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏதும் குறிப்பிடவில்லை.

உதயநிதியின் உறுதியான அழுத்தம் அமைச்சர் எ.வ.வேலு மூலமாக தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் ஆதவ் அர்ஜுனாவின் சஸ்பெண்ட் அறிவிப்பில் அவரிடம் விளக்கம் கேட்கும் குறிப்பு கூட சேர்க்கப்படவில்லை என்ற பேச்சும் சிறுத்தைகள் மத்தியில் நிலவுகிறது.

இந்த பின்னணியில்தான் இன்று காலை சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போதே ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட  திருமா, அடுத்த சில நிமிடங்களில் தலைமைச் செயலகத்துக்கு பயணப்பட்டார். ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு காகிதத்தை தன் கையோடு தலைமைச் செயலகத்துக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கிருந்த விசிக எம்.எல்.ஏ.க்களிடம் அறிவிப்பையும் கொடுத்திருக்கிறார்.

அதன் பின் முதல்வரை சந்தித்து ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக விசிக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமான பத்து லட்சம் ரூபாயை அளித்தார். இந்த சந்திப்பு மூலம் ஆதவ் புயலுக்கு ஒரு தற்காலிக தீர்வு கண்டிருக்கிறார் திருமா.

இந்த நிலையில்தான் ஆதவ் அர்ஜுனா இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், ’நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்’ என்று கூறியுள்ளதோடு… மீண்டும் வலிமையாக உதயநிதியை விமர்சித்திருக்கிறார்.

தன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உதயநிதியின் அழுத்தம்தான் என்பதை அறிந்து புரிந்துகொண்டதால்தான் சஸ்பெண்டுக்கு பிறகான தனது அறிக்கையிலும்,

‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த மக்களுக்கான அதிகாரத்தைத்  தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில்  அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

ஆதவ் அர்ஜுனா தரப்பில் பேசியபோது, ‘நேற்று இரவே ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமா இந்த அறிவிப்பு பற்றியும் முடிவு எடுக்க வேண்டிய சூழல் பற்றியும் தெரிவித்துவிட்டார்.  முதல்வரை சந்தித்துவிட்டு திருமா இன்று டெல்லி புறப்பட்டார். அதற்கு முன்பே ஆதவ் டெல்லி சென்றுவிட்டார். டெல்லியில் திருமாவும் ஆதவ்வும் சந்திக்கவும் வாய்ப்புகள் உண்டு’ என்று கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்  லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆதவ் நீக்கம்… யார் கொடுத்த அழுத்தம்? – ஸ்டாலினை சந்தித்த பின் திருமா பேட்டி!

அப்படியெல்லாம் வர முடியாது: இளையராஜா

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts