வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தொடர்பான படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இப்போது தூண்களாக இருக்கும் நிதிஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் இந்தியா கூட்டணி பக்கம் கொண்டு வர முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் வெளிப்படையாக இவ்விரு தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார்கள். அதனால்தான் பாஜக அவசரமாக அடுத்தடுத்த நகர்வுகளை முடுக்கிவிட்டிருக்கிறது. கூட்டணி விவகாரத்தில் நாயுடு, நிதிஷ் ஆகியோர் பாஜகவுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாலயோகி நாடாளுமன்ற சபாநாயகராக இருந்தார். அதேபோல இப்போதும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கேட்கிறது. மேலும், முக்கியமான துறைகளையும் அக்கட்சி கேட்கிறது. நிதிஷ் குமாரும் ஆட்சியில் பங்கேற்க சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மோடியுடன் முரண்பட்டு கூட்டணியில் இருந்து வெளியே வந்தவர்கள்தான். அந்த வகையில் அவர்களை இந்தியா கூட்டணிக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாயுடுவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல புரிதல் உண்டு. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியே வந்த நாயுடு, நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். 2019 இல் பாஜக தலைவராக இருந்த அமித் ஷா, ‘இந்தியாவிலேயே யு டர்ன் அரசியல்வாதி என்றால் அது சந்திரபாபு நாயுடுதான்’ என்று கடுமையாக விமர்சித்தார். இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவுக்கு கதவு நிரந்தரமாக அடைக்கப்படுகிறது என்றும் வெளிப்படையாக அறிவித்தார் அமித் ஷா.
அப்போது சென்னைக்கு வந்த சந்திரபாபு நாயுடு, திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு வந்து ஈவிஎம் வாக்கு எந்திரங்கள் மூலம் மோசடி செய்கிறார்கள் என்று மோடியை கடுமையாக விமர்சித்தார்.
இந்த பின்னணியில் சந்திரபாபு நாயுடுவை ஸ்டாலின் தரப்பு உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சியினர் தொடர்புகொண்டு, இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் இதற்கு விளக்கம் அளித்தபோது சில முக்கிய காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.
‘‘என்.டி.ஏ. கூட்டணியில் நாயுடுவும், நிதிஷும்தான் முக்கியமான நபர்கள். ஆனால் இந்தியா கூட்டணியில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அதனால் என்.டி.ஏ.தான் இப்போதைக்கு சிறந்தது. கூட்டணிக் கட்சிகளின் 10% தேவைகள்தான் பொது வெளியில் பேசப்படுகின்றன. ஆனால் 90% பேசப்பட வாய்ப்பில்லை.
ஆந்திராவில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்காக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சுமார் நாலாயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இதில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் கடனாகவே வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு போய் ரிஸ்க் எடுத்திட நாயுடு இப்போது தயாராக இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இன்று நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் பற்றி விவாதிக்கபப்ட்டிருக்கிறது. அப்போது, ‘மோடி சுதந்திரமாக செயல்படும் கேரக்டர் கொண்டவர். இதுவரை அவரது தடாலடி நடவடிக்கைகள் அப்படித்தான் அமைந்தது. ஆனால் இப்போது நிதிஷ், நாயுடு என்ற இரு பெரும் சீனியர் தலைவர்களின் கட்டுப்பாட்டுக்குள் மோடி ஆட்சி நடத்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இது அவருக்கு பொருந்தாத முறையாகத்தான் இருக்கும், அதிகபட்சம் ஆறு மாதத்துக்குள் நாயுடுவுக்கும் மோடிக்கும், நிதிஷுக்கும் மோடிக்கும் இடையே முரண்பாடுகள் நிச்சயம் மூளும், அந்த சந்தர்ப்பம் வரை இந்தியா கூட்டணி இதே ஒற்றுமையை பேணி காத்து வர வேண்டும்’ என்று பேசப்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிதிஷ், நாயுடு தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்
மோடி தார்மீக தோல்வி : இந்தியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு!