டிஜிட்டல் திண்ணை: உதயநிதி இல்லாத கேபினட் கூட்டம்! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! 

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  தமிழ்நாடு அமைச்சரவை  கூட்டம்  பற்றிய புகைப்படங்களும்  அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு வீடியோவும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.  அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்ய  தொடங்கியது.

“ஆகஸ்ட் 13ஆம் தேதி  முற்பகல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்  இளைஞர் நலன் விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி  கலந்து கொள்ளவில்லை.   அவர்  பாரிஸ் பயணம்  மேற்கொண்டு இருப்பதால்  இந்த கூட்டத்தில்  அவரால்  பங்கேற்க இயலவில்லை.

கடந்த சில வாரங்களாகவே உதயநிதி துணை முதலமைச்சர் ஆவார் என்று  அமைச்சர்களே கூட  அரசு விழாக்களில் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்கள்.  ராமநாதபுரம்  மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு  துணை முதலமைச்சர் உதயநிதி என அழைக்கலாம்’ என்று பேசினார். அதன் பிறகு அமைச்சர் கீதா ஜீவனும்  உதயநிதியை துணை முதலமைச்சர் என்று அழைத்தார்.

இப்படி அமைச்சர்களே பகிரங்கமாக உதயநிதியை துணை முதலமைச்சர் என்று அடைமொழியிட்டு வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்ட நிலையில்தான்… இன்றைய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கக்கூடிய 44 ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பிலான  தொழில் திட்டங்களுக்கு  நிர்வாக ரீதியான  ஒப்புதல்கள் அளிக்கப்பட்டது. அதன் பிறகு  அதிகாரிகள் சென்ற பின்னர்  அமைச்சர்களோடு சுமார் பத்து நிமிடங்கள் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்போது  இந்த மாத கடைசியில்  தான்  மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க பயணத்தை பற்றி  குறிப்பிட்ட ஸ்டாலின்,  ‘நான்  அமெரிக்கா சென்றாலும்  உங்களை, உங்களது செயல்பாடுகளை  தொடர்ந்து  கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.  எந்த  முக்கியமான விஷயமாக இருந்தாலும்  எனது கவனத்திற்கு நீங்கள் கொண்டு வரலாம்.

அதே நேரம்  நீங்கள் மிக எச்சரிக்கையாகவும் கவனமாகவும்  நடந்து கொள்ள வேண்டும்.   ஒன்றிய அரசு  நம்மை  தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நம்மைப் பற்றி அவதூறு செய்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கிறார்கள்.  அதை  கருத்தில் கொண்டு  மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு  பணியாற்ற வேண்டும்’  என்று  கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில்  உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி  என்பது பற்றிய எந்த ஒரு விவாதமும்  நடக்கவில்லை.   இன்னும் சொல்லப்போனால்  துணை முதல்வர் என்ற வார்த்தை கூட இந்த அமைச்சரவை கூட்டத்தில் உச்சரிக்கப்படவில்லை என்கிறார்கள்.

ஜூனியர் அமைச்சர்கள் இது பற்றி  நேரடியாக முதலமைச்சரிடம் பேச  தயங்கி இருக்கலாம்.   சீனியர்கள் அமைச்சர்கள் கூட பேசவில்லையா என்று விசாரித்த போது…

‘சீனியர் அமைச்சர்கள் ஏற்கனவே தனிப்பட்ட முறையில்  முதலமைச்சரிடம்,   ‘எல்லாருமே விருப்பப்படுறாங்க…  தம்பிக்கு  துணை முதலமைச்சர் பதவி கொடுத்து விடலாமே’   என்று நேரடியாகவே  கேட்டிருக்கிறார்கள்.  அதற்கு முதல்வர் ஸ்டாலின்,   ‘நானும் அவர்கிட்ட இதப் பத்தி கேட்டேன். அவர் தான் கொஞ்சம் தயங்குறாரு’  என்று பதில் சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து  அந்த சீனியர் அமைச்சர்கள் உதயநிதியிடமே  இது குறித்து   பேசியிருக்கிறார்கள். அப்போதும் உதயநிதி தனது தயக்கத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  ஆனால்,  மூத்த அமைச்சர்கள், ‘உங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதை எல்லாரும் விரும்புகிறோம்.  இது  அனைவரும்  ஏற்றுக் கொண்டிருக்க கூடிய முடிவு தான்’  என்று எடுத்துச் சொல்ல…. ‘நான்  பாரிஸ் போயிட்டு வந்துடறேன். அப்புறம் முடிவெடுத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டார் உதயநிதி.

இவ்வாறு  உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளிப்பது பற்றி  சீனியர் அமைச்சர்கள்  முதல்வரிடமும்  உதயநிதியிடமும்  ஏற்கனவே  தனிப்பட்ட முறையில்  விவாதித்து விட்ட காரணத்தினால் தான்…  இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அது பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லை  என்கிறார்கள் மூத்த அமைச்சர்கள் வட்டாரத்தில்” என்ற  மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

”1.50 கோடி ரூபாய் பெற்றேனா? உண்மை தெரியாம எழுதாதீங்க” : பாரிஸ் ஒலிம்பிக்கில் தோற்ற பிரபல வீராங்கனை ஆதங்கம்!

அடுத்த ஒலிம்பிக் குள்ளயாவது தீர்ப்பு வந்துருமா? : அப்டேட் குமாரு

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel