வைஃபை ஆன் செய்ததும் நெல்லை எக்ஸ்பிரஸில் கைப்பற்றப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் பற்றிய போட்டோக்கள், வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இடச் சென்றனர். அப்போது அங்கே திமுக கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பண விநியோகம் செய்யப்படுகிறது என்ற தகவல் கிடைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் அங்கே சென்று மூன்று மணி நேரம் சோதனையிட்டனர். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார். இந்த சம்பவம் பரபரப்பாகிய நிலையில் அடுத்த நாள் 6 ஆம் தேதி இரவு அதே நெல்லையை மையமாக வைத்து இன்னொரு பரபரப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இது நடந்தது சென்னையில்.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸில் மூன்று பேர் கத்தை கத்தையாக கோடிக்கணக்கான பணத்தை நெல்லைக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்ற தகவல் சென்னை சிட்டி உளவுத்துறைக்கு ஏப்ரல் 6 மாலை வாக்கில் கிடைத்தது. உடனடியாக இந்த தகவல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு பாஸ் செய்யப்பட்டதோடு தாம்பரம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தாம்பரம் காவல்துறை உதவி ஆணையர் நெல்சனும் எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனை செய்தனர். அப்போது மூன்று பேர் சுமார் 4 கோடி ரூபாயை கட்டுக்கட்டாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமாக சென்னையில் இருக்கும் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் என்றும் தெரியவந்தது.
இதனால் அவர்கள் நயினார் நாகேந்திரனுக்காகத்தான் இந்த பணத்தை எடுத்து சென்றிருக்கிறார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது. 10 லட்ச ரூபாய்க்கு மேல் பிடிபட்டால் அதை வருமான வரித்துறை தான் விசாரிக்கும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரசாத் சாகு தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை வருமானவரி துறையினர்தான் இனி விசாரிக்க வேண்டும். இந்த சூழலில் தான் தமிழ்நாட்டில் இருக்கும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கிடையே இரு பிரிவாக இந்த விவகாரம் பற்றி விவாதம் நடந்து வருகிறது.
அதாவது டெல்லி தலைமை என்ன உத்தரவிட்டாலும், அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிந்திருந்தும் அதை தட்டிக் கழிக்காமல் 100% செவ்வனே செய்து முடிப்பவர்கள் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் ஒரு பிரிவாக இருக்கிறார்கள்.
அதேநேரம் டெல்லி தலைமை இதை அரசியல் உள்நோக்கத்தோடுதான் செய்யச் சொல்கிறது என்று அறிந்து அதை 100% நிறைவேற்றாமல் ஒரு விதமான நெருடலோடு பணியாற்றும் அதிகாரிகளும் தமிழ்நாட்டில் வருமான வரி துறையிலும் அமலாக்கத் துறையிலும் இருக்கிறார்கள்.
இப்படி இரண்டு பிரிவாக இருக்கும் இந்த அதிகாரிகளிடையே, ‘நெல்லை எக்ஸ்பிரஸில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான விசாரணை எந்த பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது’ என்பதுதான் முக்கியமான விவாத பொருளாக இருக்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தேர்தலில் அதிக அளவு பணத்தை செலவு செய்ய தயாராக உள்ளன என்றும், அதனால் அவர்களை கைது செய்து முடக்கினால் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும் சென்ற ஒரு ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து தான் கடந்த சில நாட்களாக திமுக, அதிமுக இரு தரப்பையும் குறி வைத்து வருமானவரித்துறை ரெய்டுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பாஜக வேட்பாளருக்கு சம்பந்தப்பட்டவர்களே பெருந்தொகையோடு பிடிபட்டிருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த விவகாரத்தை அமுக்குவதற்காக தமிழக பாஜக தரப்பில் இருந்தும் கோவையிலிருந்தும் டெல்லிக்கு அழுத்தங்கள் சென்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இது ஒருபக்கம் என்றால்… நயினார் நாகேந்திரனுக்கு இவ்வளவு கோடிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் வழியாக வருகிறது என்ற தகவலை சென்னையில் இருக்கும் உளவுத்துறை போலீசாருக்கு போட்டுக் கொடுத்தது யார் என்ற விவாதம் நெல்லையில் தனியாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக தரப்பில் நயினார் நாகேந்திரனின் மூவ்மென்ட்டுகளை ஸ்மெல் செய்து இந்த விவகாரத்தை மேலே தெரிவித்துவிட்டார்கள் என்று ஒரு தரப்பு சொல்கிறார்கள்.
ஆனால், நெல்லை பாஜகவிலோ இது முழுக்க முழுக்க லோக்கல் பாஜகவினரின் வேலை தான் என்று அடித்து சொல்கிறார்கள். அதாவது நெல்லை மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் தயா சங்கர் கட்சியில் நயினாரை விட சீனியர். அவருக்கு மக்களவைத் தொகுதிக்கான வாய்ப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே எம்எல்ஏவாக இருக்கிற நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை பாஜகவில் நயினார் நாகேந்திரனுக்கும் தயார் சங்கருக்கும் இடையே இணக்கமான போக்கு இல்லை.
இந்த சூழலில் பாஜகவில் இருந்தே நயினார் நாகேந்திரனின் கரன்சி இறக்குமதி பற்றி சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லப்பட்டிருக்கலாம், அதனால்தான் சென்னையில் மட்டுமல்ல, இன்று நெல்லையிலும் நயினாருடைய ஆதரவாளர்களிடம் இருந்து வரிசையாக பரிசுப் பொருட்கள், பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது என்ற விவாதமும் நெல்லை அரசியல் வட்டாரத்தில் சூடாக நடந்துகொண்டிருக்கிறது.
கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தோடு பிடிபட்ட அந்த நபர்கள் நயினாரிடம் நீண்ட காலமாக வேலை பார்ப்பவர்கள் என்று நெல்லை முதல் கன்னியாகுமரி வரை சொல்கிறார்கள்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது இதே போல வேலூரில் பணம் கைப்பற்ற போட்டபோது, வழக்குப் பதிவு செய்து தேர்தலை நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம். அதே போல இப்போது நெல்லை தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்படுமா என்ற படபடப்பும் அதிகரித்துள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒன்னு ஜெயில் இல்லனா பெயில்… : எதிர்க்கட்சியினரை தாக்கிய ஜே.பி.நட்டா
மாநிலத்துக்கு எதிரான சட்டங்களை அதிமுக எதிர்க்காதது ஏன்? : எடப்பாடி ஓபன் டாக்!