வைஃபை ஆன் செய்ததும், “ தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் ஆளுநர் தமிழிசை ஆகியோரின் வீடுகளில் இதுவரை இருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பையும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கான பாதுகாப்பையும் விலக்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு” என்ற செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது.
இது தொடர்பாக சிலரிடம் விசாரித்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த ஆகஸ்டு 16 மாலை தொடங்கி ஆகஸ்டு 17 அதிகாலை வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
அரங்கிலும் அரங்கத்தைச் சுற்றிலும் இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்புக்காக போலீஸார் ஆங்காங்கே நின்றிருந்தனர். கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், வாழ்த்தரங்கம், திருமாவின் ஏற்புரை எல்லாம் முடிந்த பிறகு, அதிகாலை 4 மணிக்கு மேடையில் இருந்த திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக கூட்டத்தினர் மேடையேறினர்.
திருமாவளவனைச் சுற்றி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆளுயர மாலை, பண மாலை, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றோடு முற்றுகையிட்டனர். சுமார் பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் இந்த முற்றுகையில் திக்குமுக்காடிப் போனார் திருமா. அந்த முற்றுகையோடே வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது காருக்குச் சென்றார்.
அங்கேயும் அப்படித்தான் அவர் கார் கதவைத் திறந்து ஏறுவதற்குள் மீண்டும் அவருக்கு மாலை, கேக், பரிசுப் பொருட்கள் என்று விசிகவினர் சுற்றி வளைத்துவிட்டனர். கதவைத் திறந்து கொண்டு கொஞ்ச நேரம் நின்றபடியே வாழ்த்துகளை பெற்றுக் கொண்டு… மிகுந்த சிரமத்தோடு காருக்குள் உட்கார்ந்துகொண்டார்.
அப்போது காமராஜர் அரங்கத்தில் திரண்டிருந்த விசிக நிர்வாகிகள், ‘தலைவருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? அவருக்குனு ஸ்பெஷல் பாதுகாப்புப் படை இருந்தா எல்லாரும் வரிசையா வந்து வாழ்த்து தெரிவிச்சு பரிசுப் பொருள் கொடுத்துட்டு போவாங்க.
இப்ப பாருங்க,.. பாதி பேரு நெருக்கியடிச்சு கொடுத்துட்டாங்க. மீது பேரு நெருங்க முடியாமலே போயிட்ட்டாங்க. அவர் எப்படி கஷ்டப்பட்டு மேடையிலேர்ந்து காருக்கு வந்தாரு பாத்தீங்களா? தலைவருக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தா இப்படியெல்லாம் நடக்குமா?” என்று கேட்டனர். அங்கே இருந்து இதையெல்லாம் கண்ட நிலையில், இதுகுறித்து விசிக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது அவர்கள் புலம்பிக் கொட்டினார்கள்.
“தலைவர் பாத்ரூம் செல்லும் நேரங்களைத் தவிர அனைத்து தருணங்களிலும் அவரோடு எப்போதும் நிர்வாகிகள் தொண்டர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு தலைவர் பட்ட பாட்டை பார்த்ததிலிருந்து அவருக்கு சிறப்புப் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்ற கவலை எங்களுக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்று நேற்றல்ல… கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்தே இதற்கான சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். கௌரி லங்கேஷ் கொலையாளிகள் மூலமாக விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக 2018 இல் அப்போதைய முதல்வர் எடப்பாடியிடம் மனு கொடுத்தோம். புதுச்சேரி முதல்வரிடமும் மனு கொடுத்தோம்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது திருமாவளவன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கடலூர் எஸ்பி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவர் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும் போலீஸார் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லாததால் நிரந்தர பாதுகாப்பு வழங்க இயலாது’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதற்கிடையே திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் திருமாவளவன் போலீஸ் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தில் இருந்து இங்கே வந்து அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனாலும் திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றி திமுக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.
ராமதாஸ் அத்வாலேவின் கோரிக்கைக்குப் பிறகு திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் அடிபட்டன.
அப்போது இதுகுறித்த கேள்விக்கு திருமாவளவனே பதிலளித்தார். அவர் கூறும்போது, ‘எனக்கு பந்தோபஸ்துக்கு வர்ற போலீஸ் ரெண்டு மூணு பேர் டூவீலர்ல போவாங்க. என் வண்டிக்கு முன்னால போவாங்க. ரவுடி எலிமென்ட்ஸ்டுக்கு முன்னால ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ், பின்னால ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ்னு போவாங்க.
அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை இன்னின்னாருக்கு இப்படி பாதுகாப்பு கொடுக்கணும்னு அவங்க ஒரு முடிவு பண்ணி வச்சிருக்காங்க. சில தலைவர்கள் போனாங்கன்னா முன்னால ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ், பின்னால ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ், முன்னும் பின்னும் ஜீப்புகள், எஸ்.பி. அல்லது டி.எஸ்.பி. தலைமையில பாதுகாப்பு கொடுப்பாங்க.
நான் பேசக்கூடிய அரசியல் எனக்கும் பகைய உருவாக்கி வச்சிருக்கு. நான் சனாதனத்தை கடுமையா எதிர்த்து பேசறேன். சனாதன ஆதரவு சக்திகளால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கு. ஆனால், எனக்கு தமிழ்நாட்ல எந்த ஆட்சிக் காலத்திலும் முன்னால பின்னால பாதுகாப்புல்லாம் இல்ல.
தேர்தல் போன்ற டென்ஷனான காலத்தில கூட வேன்ல வுமன் போலீஸ் வருவாங்க. சில நேரம் பேட்ரல் போலீஸை அனுப்புவாங்க. போலீசைக் கேட்டா… சில லீடர்ஸுக்கு மட்டும்தான் சார்னு சொல்லுவாங்க’ என்று வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாமல் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார் திருமாவளவன்.
இதுபோன்ற பேட்டிகளின் வழியாக மட்டுமல்லாமல் முதல்வரிடமே நேரடியாகவும் இப்பிரச்சினையை எடுத்துச் சென்றிருக்கிறார் திருமாவளவன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்.’
அப்போது தன்னை மதுரையில் குறிவைத்து இரு முறை திட்டம் தீட்டப்பட்டதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
மேலும், ஒரு முறை சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தபோது உளவுத்துறை போலீஸார். ‘அங்கே செல்ல வேண்டாம்’ என எச்சரித்ததால் அங்கே செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார் திருமா.
முதல்வரிடமே நேருக்கு நேராக தெரிவித்துவிட்ட பிறகும் திருமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
பொதுக்கூட்டங்களில் இதுபற்றி பல முறை பேசிவிட்டார் திருமா. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக் கட்சித் தலைவருக்கு உரிய அச்சுறுத்தல்களை ஆராய்ந்து அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிறார்கள் சிறுத்தை நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை: சிறுவன் கால் அகற்றம்… மருத்துவமனை அங்கீகாரம் ரத்து!
முதலீட்டாளர்களின் பெஸ்ட் சாய்ஸ் தமிழ்நாடு… ஏன்? – லிஸ்ட் போட்ட செயின்ட் கோபைன் சிஇஓ
நெல்சன் மனைவி அனுப்பிய ரூ75 லட்சம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்!