டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திருமா அழைப்பு… மாநாட்டை  திமுக புறக்கணிப்பு: கொந்தளிக்கும் அமைச்சர்கள்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் விசிக தலைவர் திருமாவளவனின் பிரஸ்மீட் காட்சிகளும், அதற்கு திமுக அமைச்சர்கள், அதிமுக  முன்னாள் அமைச்சர்களின் ரியாக்‌ஷனும் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறது. அக்கட்சியின் மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சியில் இம்மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தொழிலாளர்கள் 69 பேர் மரணம் அடைந்தனர். இது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.

கூட்டணிக் கட்சியாக இருக்கும் விசிக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவை கண்டித்தும், தேசிய அளவில் மதுவிலக்கு கோரியும்  ஆர்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்பாட்டத்தில்தான் விசிக மகளிரணி சார்பில் மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார் திருமாவளவன்.

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நடத்தும் முதல் மாநாடு என்பதால் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் திருமா முனைப்பு காட்டி வருகிறார். மண்டல வாரியாக தமிழகம் முழுதும் பயணம் செய்து மாநாட்டுக்கான கூட்டம், நிதி திரட்டுதல் உள்ளிட்ட விஷயங்களை நிர்வாகிகளோடு ஆலோசிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் தான் இன்று (செப்டம்பர் 10) சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘மது ஒழிப்பு என்பதில் திமுகவும் உடன்படுகிறது, அதிமுகவும் உடன்படுகிறது, இடது சாரிகளும் உடன்படுகிறார்கள்.  எனவே இந்த மாநாட்டில் கட்சி கடந்து அனைவரும் பங்கேற்கலாம். அதிமுகவும் கூட பங்கேற்கலாம். சாதிய, மதவாத சக்திகளை தவிர அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கலாம்’ என்று அறிவித்தார் திருமா.

இதுதான் தமிழ்நாடு அரசியல் அரங்கில் விவாதப் பொருளானது. திருமா அறிவித்தது பற்றி சிவகங்கையில் இருந்த அமைச்சர் உதயநிதி, ‘அதிமுகவை திருமா அழைப்பது அவரது விருப்பம். இதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்’ என்று பதிலளித்தார்.

அமைச்சர் மா.சு,  ‘திமுக கூட்டணியில் ஒரு பிசிறு கூட இல்லாமல் முதல்வர் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்’ என்று கூறினார். இன்னொரு பக்கம் அமைச்சர் ரகுபதி, ‘திருமாவும் முதல்வரும் நெருங்கிய நண்பர்கள். எங்கள் கூட்டணியை விட்டு அவர் எங்கேயும் போக மாட்டார்’ என்று கூறினார்.

இப்படி திமுக அமைச்சர்கள் ரியாக்ட் செய்துகொண்டிருந்த நிலையில் விசிக வட்டாரத்தில் விசாரித்தபோது,

‘விசிக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  மூன்று எம்பி தொகுதிகள் கேட்டது, அதில் ஒரு பொதுத் தொகுதி கேட்டது. ஆனால் திமுகவோ 2019 இல் போட்டியிட்ட  2 தொகுதிகள்தான் என்பதில் உறுதியாக இருந்தது. அதனால் கூட்டணி ஒப்பந்தம் தாமதமாகத்தான் கையெழுத்தானது. எனினும் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தங்களது சொந்த சின்னமான பானை சின்னத்தில் விடாப்பிடியாக நின்று வென்றது விசிக.

இதேபோன்ற குறைவான இடங்களில் போட்டியிடும் நிலைமை 2026 சட்டமன்றத் தேர்தலில் வரக் கூடாது என்று கருதுகிறார் திருமா. வரும் சட்டமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சியான விசிகவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

அதேநேரம் திமுகவோ கூட்டணிக் கட்சிகளிடம் ஓரளவுக்குத்தான் விட்டுக்  கொடுத்து செல்ல வேண்டும், அவர்கள்  அளவுக்கு மீறி நெருக்கடி கொடுத்தால்  வருகிறவர்கள் வரட்டும், போகிறவர்கள் போகட்டும் என்ற ஆலோசனையில் இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தேர்தலுக்கு 20 மாதங்களுக்கு முன்பே சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழு அமைத்து தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகிறது. இதை அறிந்த திருமாவளவன் தங்களது  பேர சக்தியை அதிகமாக்க வேண்டும் என்றுதான் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அறிவித்துள்ளார்.

அதாவது,  ‘எங்களுக்கு திமுக மட்டும் அல்ல, அதிமுக என்ற சாய்ஸும் இருக்கிறது’ என்ற சமிக்ஞைதான் இது.  திமுக கூட்டணிக் கட்சிகளில் வலுவாக இருக்கும் விசிக வெளியேறினால்  திமுக கூட்டணியின் இமேஜ் போய்விடும், அதனால் அவ்வளவு சீக்கிரம் திமுக நம்மை விடாது, எனவே இப்போதிருந்தே  2026 தேர்தலில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்ற  காய் நகர்த்தலின் ஒருகட்டம்தான் அதிமுகவுக்கும் அழைப்பு.

இதுமட்டுமலல்… சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை  சென்னையில் பாஜகவின் மூத்த தலைவர் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் வெளியிட்டாரே… அப்போது என்ன திமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணியா வந்துவிட்டது?  அது அரசு விழா… விசிகவின் இந்த ஆர்பாட்டம் மக்களுக்கான ஆர்பாட்டம். எனவே இதில் அதிமுக கலந்துகொண்டாலும் அதில் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்கிறார்கள் விசிகவினர்.

அதேநேரம் திமுகவில் மூத்த அமைச்சர்கள் திருமாவின் அறிவிப்பால் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.  திருமாவின் அறிவிப்புக்குப் பின் திமுகவின் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் போனில் கலந்துரையாடியிருக்கிறார்கள்.

அப்போது, ‘திருமாவளவன் நமது கூட்டணிக்குள் இருந்துகொண்டே தொடர்ந்து  சர்ச்சைகளை கிளப்பும் வகையில்தான் பேசி வருகிறார். முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் நேரமாக பார்த்து இப்போது இப்படிப் பேசியிருக்கிறார். ஒருவேளை கள்ளக்குறிச்சியில் அவர்கள் நடத்தும் மாநாட்டில் அதிமுக பங்கேற்பது உறுதியானால்… திமுக சார்பில் அதில் யாரும் பங்கேற்கக் கூடாது என்று நாம் தலைவரிடம் சொல்லுவோம்.  அதுதான் திமுகவின் இமேஜை காட்டுவதாக இருக்கும். திருமா இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நாம் செல்லக் கூடாது.

ஒருவேளை தலைவர் இதற்கு சம்மதிக்காமல் யாராவது ஒருத்தரை அனுப்பி வைப்போம் என்று பெருந்தன்மையோடு முடிவெடுத்தால்… அரசில் அமைச்சர்களாக இருக்கும் யாரும் கலந்துகொள்ள இயலாது. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களை அனுப்பி வைக்குமாறு தலைவரிடம் கேட்கலாம்.  அவர் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு இதில் முடிவெடுக்கட்டும்’ என்று விவாதித்திருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இது என்னடா பிள்ளையாருக்கு வந்த சோதனை? – அப்டேட் குமாரு

புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது ஏன்? – மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதில்!

+1
0
+1
2
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *