டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் – திருமா அரியலூர் கெமிஸ்ட்ரி! ஆட்சியில் பங்கு… பிராக்டிகல் பின்னணி!

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் அரியலூரில் முதலமைச்சர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பியும் கலந்து கொண்ட அரசு விழா வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக்கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“அரியலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை தொடக்கவிழா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரசு திட்டங்கள் கள ஆய்வு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக நேற்றே (நவம்பர் 14) ஜெயங்கொண்டம் சென்றுவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

‘இன்று (நவம்பர் 15) அரசு விழாவில் , ’விசிக தலைவர் திருமாவளவன் காலையில் என்னிடம் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்களுக்கான கோரிக்கைகளை வைத்தார். 101 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதை இப்போதே அறிவிக்கிறேன்’ என்று அறிவிப்பை வெளியிட்டு திருமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் ஸ்டாலின்.

முன்னதாக, விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான திருமா பேசும்போது, ‘பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொடங்கும்போதே, அரியலூர் மாவட்டத்திற்கும் இதேபோல தொடங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று இன்று தொடங்கியுள்ளீர்கள். தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது.

உங்களது ஆட்சியில் தான் அரசின் அதிக  கவனிப்புக்கு அரியலூர் ஆளாகியிருக்கிறது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் மண்ணின் மைந்தனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று பேசினார்.

சமீபத்திய மாதங்களில் நடந்த ஸ்டாலின், திருமா சந்திப்புகளில் மிகவும் சுமூகமான சந்திப்பாக இது அமைந்தது என்று இரு கட்சி வட்டாரத்திலும் தெரிவிக்கிறார்கள்.

thirumavalavan stalin ariyalur

இதற்கு ஒரு பின்னணியும் இருக்கிறது. திருமாவளவனின் நீண்டகால முழக்கமான ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை சமீபத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முழக்கமாக தீவிரமாக முன்வைத்தார்.

இதற்கு திமுகவின் துணை பொதுச்செயலாளரான ஆ.ராசாவும் பதிலளித்தார். இதனால் திமுக – விசிக உறவில் ஒரு தொடர் குழப்பம் சில மாதங்களாகவே நிலவியது.

இந்தநிலையில், தான் திமுக மூத்த தலைவர்கள் சிலர் திருமாவளவனிடம் சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.

‘தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் ஒரு கூட்டணி, ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தால் அதுவே அந்த கூட்டணிக்கு மிகப்பெரிய பலவீனமாக ஆகியிருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு மாவட்டத்தில் திமுக வேட்பாளரும் போட்டியிடுவார், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். அப்போது ஆட்சி அமைக்கும் பட்சத்தில் யார் அமைச்சராவது என்ற போட்டியில் தேர்தல் வெற்றியையே தடுக்கும் உள்குத்து வேலைகள் அனைத்து தரப்பிலும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் ஆனால் தானே அமைச்சராக முடியும் என்ற கேள்வியால் கூட்டணி வெற்றியே குலைந்து போகும் வாய்ப்பு உள்ளது. அதுவும் குறிப்பாக விசிகவுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கிறோம் என்று சொல்லி தேர்தலை சந்திக்கும் போது சமுதாய ரீதியிலான எதிர்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்த காரணத்தால் தான் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி கூட வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் அரசியல் ரீதியாக தனக்கு வாழ்வா சாவா என்ற நிலை இருந்தாலும் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை வெளிப்படையாக வைக்க தயங்குகிறார்.

உங்களை ( திருமா) எங்கள் தலைவர் மத்திய அமைச்சர் என்ற உயரத்தில் வைத்து அழகுபார்க்க    நினைக்கிறார்.  2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், உங்களை தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சராக்க தலைவர் திட்டமிட்டிருந்தார்.

அடுத்து மத்தியில் நமக்கு சாதகமான ஆட்சி வரும் பட்சத்தில் நீங்கள் உறுதியாக மத்திய அமைச்சர் ஆவீர்கள். அதற்கு திமுக அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கும். இந்தநிலையில், உங்கள் எல்லையை நீங்கள் ஏன் சுருக்கிக்கொள்கிறீர்கள்’ என்று திருமாவிடம் கூட்டணி ஆட்சி என்ற அறிவிப்பின் நடைமுறை சிக்கல்கள் குறித்து விளக்கியிருக்கிறார்கள்.

திருமாவும் நடைமுறை ரீதியிலான இந்த சிக்கல்களை உணர்ந்திருப்பதாகவும், அதனால் திமுக கூட்டணியில் மேலும் உறுதியாக பயணிப்பார் என்றும் விசிக மூத்த நிர்வாகிகளே கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை பீச் டூ தாம்பரம்… நவம்பர் 17-ல் ரயில் சேவையில் மாற்றம்!

ரூ. 6,000 கோடிக்கு ரூ.60 கோடி கூட வரல: ஸ்டாலினை டேக் செய்து அண்ணாமலை பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share