டிஜிட்டல் திண்ணை: பங்குபோடும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்… ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய South

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை தேர்தலுக்குப் பின்னர் மாவட்ட வாரியாக தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்தித்து வரும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுக தலைவரும் முதலமைச்சருமான  ஸ்டாலினை தேர்தல் முடிந்ததிலிருந்து பல்வேறு தொகுதிகளின் வேட்பாளர்கள் அந்த தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் சந்தித்து வருகிறார்கள். அவர்கள் தன்னை சந்திப்பதற்கு முன்பே அந்த தொகுதியின் வாக்குப் பதிவு பற்றிய பல்வேறு கோணங்களின் அடிப்படையிலான விவரங்களை ஸ்டாலின் பெற்று விடுகிறார். அதாவது திமுக தனிப்பட்ட முறையில் எடுக்கும் சர்வே, மாநில அரசின் உளவுத்துறை மூலம் எடுக்கப்பட்ட சர்வே ஆகியவை ஸ்டாலின் டேபிளுக்கு போய்விடுகின்றன.

இந்த வகையில் தமிழகம் முழுதும் 39 மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்ற ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு மகிழ்வைத் தந்தாலும் சில தொகுதிகளில் இருந்து சென்றிருக்கும் ரிப்போர்ட் அவரை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

ஏனென்றால் வெற்றி என்பதை விட மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்திலான வெற்றி என்பதைத்தான் ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். அதனால்தான், தன்னை சந்திக்கும் அமைச்சர்கள், வேட்பாளர்களிடம், ‘எவ்வளவு வித்தியாசத்துல ஜெயிப்போம்’ என்றே கேள்வியைத் தொடங்குகிறார்.

இந்த வகையில் ஸ்டாலினை டென்ஷனாக்கிய தொகுதி தென்காசி. இங்கே திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் வேட்பாளராக போட்டியிட்டார். அதிமுக சார்பில் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி சார்பில் ஜான் பாண்டியனும் போட்டியிட்டனர்.

தேர்தலுக்குப் பின் ஸ்டாலினுக்கு சென்றுள்ள ரிப்போர்ட்டில்… தென்காசியில் 2019 இல் திமுக சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போது அந்த அளவுக்கு பெரிய வித்தியாசத்திலான வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை திமுகவோடு டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் பலமாக பங்கு போட்டுள்ளனர். முக்குலத்தோர், நாடார், நாயக்கர், யாதவர், தறிமுதலியார் என்று தென்காசி தொகுதியில் அடுத்தடுத்த வரிசையில் அடர்த்தி மிக்க சமுதாய ஓட்டுகளும் அவர்களால் பலமாக பங்கிடப்பட்டுள்ளன.

2019 இல் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. இதுமட்டுமல்லாமல்… தென்காசி தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் அடிப்படை ஆயத்த செலவுகளை கூட திமுக நிர்வாகிகளுக்கு முறையாக செய்யவில்லை என்றும் தலைமைக்கு தகவல் சென்றிருக்கிறது. 20 கோடி ரூபாய் வரை செலவழிப்பதாக சீட்டு வாங்கும் முன்னர் ராணி ஸ்ரீகுமார் சொன்னார். ஆனால், அதில் பாதியளவுக்கு கூட அவர் செலவழிக்கவில்லை என்று நிர்வாகிகள் இப்போது வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

4 பேர், மருத்துவமனை மற்றும் மேடை இன் படமாக இருக்கக்கூடும்

 

அதேநேரம் வேட்பாளரோ தனக்கு சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான ராஜா முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கனிமொழியிடமும், ஸ்டாலினிடமும் முறையிட்டிருக்கிறார்.

இந்த தகவல்களை எல்லாம் அறிந்த நிலையில்தான் தன்னை சந்தித்த தென்காசி தொகுதி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் டென்ஷனை காட்டியிருக்கிறார். குறிப்பாக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா மீது ஸ்டாலின் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால் மாசெ தரப்பினரோ, ‘வேட்பாளர் பணத்தைப் பார்த்து பார்த்து செலவு செய்ததால் நிர்வாகிகள் சுணங்கிவிட்டனர்’ என்று வெளியே வந்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் நலம் குன்றிய நிலையிலும் தேர்தல் பணியாற்றிய பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.,ஆர். ஆரும் வருத்தத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். ‘ பொறுப்பு அமைச்சர் தன் சொந்தப் பணத்த நிறைய செலவு செய்திருக்கிறார். வாக்குக்கு கொடுப்பதற்காக வந்த பணத்தை அனுமதித்தால்… அது கடைசி வரைக்கும் முழுமையாக சென்று சேராது, நிர்வாகிகளால் பங்குபோடப்படும் என்ற சூழல் நிலவியதால் தலைமையிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்’ என்கிறார்கள் பொறுப்பு அமைச்சரை அறிந்தவர்கள்.

5 பேர் மற்றும் மேடை இன் படமாக இருக்கக்கூடும்

ஸ்டாலினுக்கு சென்றுள்ள  ரிப்போர்ட்டில்…  தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவிலில் திமுக கடுமையான போட்டியை சந்தித்திருக்கிறது. தென்காசியில் சம அளவிலான பலத்தைப் பெற்றிருக்கிறது. கடையநல்லூர், வாசுதேவல்லூர் தொகுதிகளில் திமுக தெம்பாக இருக்கிறது. எனவே வெற்றி வித்தியாசம் சுமாராகவே இருக்கும், கொண்டாட்டத்துக்குரிய வெற்றியாக தென்காசி இருக்க வாய்ப்பில்லை. இது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் அவர் வெற்றியை விட அந்த வெற்றி வரும் விதம் பற்றிய டென்ஷனில் இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

இனிமே விஜய் இப்படித்தான்: அப்டேட் குமாரு

பரம்பரை வரி… மக்களின் சொத்துக்களை பறிக்கும் காங்கிரஸ்: மோடி தாக்கு!

 

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0