வைஃபை ஆன் செய்ததும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்தும் ஆலோசனைப் புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
கூடவே ஒரு கேள்வியும் வந்து விழுந்தது. “திமுக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்களே…ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடக்க வேண்டுமே… அதுபற்றிய அப்டேட் என்ன?” என்பதுதான் அந்த கேள்வி.
இதற்கு பதிலை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 99,327 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவிகள், 6471 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 38 மாவட்ட சேர்மன் பதவி மற்றும் 655 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2019 டிசம்பர் மாதம் ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்கள் அனைத்திலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
விழுப்புரம்-கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு, வேலூர்-ராணிப்பேட்டை-திருப்பத்தூர், திருநெல்வேலி-தென்காசி ஆகிய மாவட்டங்கள் பாகப் பிரிவினை ஆனதால் இந்த மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யாத நிலை நிலவியது. அதனால் இந்த 9 மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 2021 ஆம் ஆண்டு மீதி ஒன்பது மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
2019 இல் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் 2024 டிசம்பரோடு முடிகிறது. எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும். முதலில் அந்த 9 மாவட்டங்களுக்கும் சேர்த்து 2024 டிசம்பரிலேயே ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையறிந்த 9 மாவட்ட திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ‘நாங்க பதவிக்கு வந்தே 3 வருசம்தான் ஆகுது. கோடிக்கணக்குல லட்சக் கணக்குல செலவு பண்ணி பதவிக்கு வந்திருக்கோம். போட்டதையே இன்னும் எடுக்கலை. அதுக்குள்ள எங்களுக்கும் எலக்ஷனா?’ என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவின் இந்த 9 மாசெக்கள் மூலமாக இது தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
அப்படியென்றால் அந்த 9 மாவட்டங்களை விட்டுவிட்டு மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாமா என்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போதுதான் மேலும் சில பரிந்துரைகள் முதல்வருக்கு சில மாசெ.க்களால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது, ஊரக ஊராட்சி உள்ளாட்சித் தேர்தலை தனியாக இந்த ஆண்டு நடத்தினால் கட்சிக்குள் நெருக்கடியும் குழப்பமும் ஏற்படும். மேலும் கூட்டணியில் குழப்பமும் அதிருப்திகளும் ஏற்படும்.
2021 இல் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களிலும் திமுகவே போட்டியிட்டதை கடுமையாக வெளிப்படையாக எதிர்த்தனர்.
திருமா, சிபிஐ, சிபிஎம், மதிமுக தலைவர்கள் அப்போது வெளிப்படையாக தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தினார்கள்.
அதேபோல் உட்கட்சியிலும் தலைமை அறிவித்த சேர்மன் வேட்பாளர்களை ஓரம்கட்டிவிட்டு அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
இந்த வருட இறுதியில் நாம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் மீண்டும் உட்கட்சிப் பிரச்சினைகள், கூட்டணிப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அதோடு கடுமையான மழைக் காலத்தில் தேர்தலை நடத்தினால் அரசு மக்களின் அதிருப்திக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
இதெல்லாம் சேர்த்து 2026 இல் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் பாதிப்பை உருவாக்கும். அதனால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கலாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா செல்வதற்கு முன்பே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் சில அமைச்சர்களிடமும் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இப்போதைய நிலவரப்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டிய 27 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஸ்பெஷல் ஆபீசர்களை நியமிக்கும் கோப்பு தயாராகி வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பியதும், தனி அதிகாரிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.
2026 இல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், ஊரக ஊராட்சி மற்றும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒன்றிணைத்து நடத்தலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஸ்டாலின்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுப முகூர்த்தம் : பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு!
கோட் முதல்நாள் வசூல் : கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த இந்தி!