வைஃபை ஆன் செய்ததும் பாமகவினரின் ட்விட்டுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“அதானி விவகாரம் நாடாளுமன்றத்தை நான்காவது நாளாக இன்று உலுக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் அதானி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அதானி மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றம் கூடுவதும் ஒத்தி வைக்கப்படுவதுமாகவே இருக்கிறது.
இந்த சூழலில்தான், தமிழ்நாடு சட்டமன்றம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கூடுகிறது. சட்டமன்றத்தில் இதே விவகாரத்தை எழுப்ப தயாராகி வருகிறது பாமக. நேற்று (நவம்பர் 28) பாமகவின் சமூக ஊடக கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில். ‘அதானி ஸ்டாலின் சீக்ரெட் மீட்’ என்ற ஹாஷ்டேக்கை டிரண்ட் செய்யுமாறும், அதானி விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பதிவுகளை வைரல் ஆக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நவம்பர் 21 ஆம் தேதி, அமெரிக்காவில் அதானி மீதான வழக்கு ஆவணத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதுகுறித்து தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதுமட்டுமல்ல, 2024 ஜூலை 10 ஆம் தேதி அதானி சென்னை வந்தபோது தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக தகவல் வந்தது என்றும் அந்த சந்திப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் இப்போதாவது விளக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘தமிழ்நாடு அரசு அதானி நிறுவனத்தோடு எந்த ஒப்பந்தமும் செய்து கொண்டதில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.
இதன் பின் நவம்பர் 25 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது டாக்டர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து கேட்டனர். அதற்கு ஸ்டாலின் கோபமாக, ‘அவருக்கு வேற வேலையில்லை. டெய்லி ஏதாவது அறிக்கை விட்டுக்கிட்டிருப்பாரு’ என்று பதிலளித்தார். இதற்கு டாக்டர் அன்புமணி கண்டனம் தெரிவித்தார். பாஜக தலைவர் அண்ணாமலையும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். பாமக பல்வேறு இடங்களில் முதல்வரை கண்டித்து போராட்டமும் நடத்தியது.
இந்த பின்னணியில்தான் அதானி விவகாரம் குறித்து வரும் சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்ப பாமக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் இது ஒரு பிர்ச்சினையாக எழுப்பப்படும் என்பதை எதிர்பார்த்தே இருக்கும் திமுக அரசும் இதற்கான பதில் அளிக்க தீவிரமாக இருக்கிறது.
இது தொடர்பாக திமுக தரப்பில் விசாரித்தபோது, ‘அதானி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது என்பது திமுக ஆட்சிக்கு முன்பே அதிமுக ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. அதுவும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே தமிழ்நாட்டில் அதானிக்கு பெரிய முக்கியத்துவம் அளித்தார்.
2013 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா 2013 ஜனவரி 7 ஆம் தேதி ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அதாவது மீனவர்களின் நலன் காப்பதற்காக தமிழக அரசும் எல்.அன்ட் டி நிறுவனமும் இணைந்து கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு செய்திருப்பதாக முதல்வரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் உடனடியாக இதற்கு பதிலளித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘2006-11 இல் திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த என்னுடைய முன்னிலையில் 15-4-2008 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், காட்டுப் பள்ளியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துக்கும் இடையில் கையெழுத்தானது. இந்தத் திட்டம் 3,068 கோடி ரூபாய் முதலீட்டில் அந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. அதைத்தான் இப்போது ஜெயலலிதா தனது ஆட்சியில் அமைந்ததைப் போல அறிக்கை விடுகிறார்’ என்று கூறியிருந்தார் கலைஞர்.
இதன் பின் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு கட்டத்தில் காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளத்தை அதானி குழுமம் வாங்குவதாக ஆங்கில நாளிதழான தி இந்துவில் 2015 செப்டம்பர் 27 ஆம் தேதி ஒரு செய்தி வெளியானது.
இந்த செய்தியை மேற்கோள் காட்டி 2015 செப்டம்பர் 28 ஆம் தேதி கலைஞர் மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், ‘இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் இரண்டாவது பெரியதும், மூன்றாவது பழையதுமான துறைமுகம் தான் சென்னைத் துறைமுகம். 2008-2009இல் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் இந்தியாவில் 17 சதவிகிதம் சென்னைத் துறைமுகத்தில் தான் கையாளப்பட்டது. திமுக ஆட்சியில் சென்னைத் துறைமுகத்தின் கையாளும் திறன் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் சென்னைத் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருள்களின் அளவும், செயல்திறனும் குறைந்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம், புதியதாக காட்டுப்பள்ளி என்ற இடத்தில் கட்டப்பட்ட தனியார் துறைமுகம் எல் அண்ட் டி நிறுவனத்திற்கு உரிமை உடையதாக இருந்தது. இந்தக் காட்டுப் பள்ளி துறைமுகத்தைத் தான் இந்தியப் பிரதமருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் மிகவும் நெருக்கமான குஜராத் அதானி குழுமம் எடுத்துக் கொள்ளப் போவதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் அதற்கான மாற்றங்கள் பற்றி முடிவு தெரிய வரும் என்றும், நேற்று (27-9-2015) “இந்து” ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த அதானி குழுமத்திற்குத் தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா அரசினால் அவசர அவசரமாக சூரிய மின்சக்தி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதிலும் கூட, மற்ற தனியாரிடம் குறைந்த விலையில் சூரிய மின் சக்தி கிடைக்கும்போது, அதிக அளவுக்கு விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டது. அதானி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் பத்து துறைமுகங்களைக் கையாண்டு வருகிறது. அவற்றில் ஒன்று தான் எண்ணுர் காமராஜர் துறைமுகம். அந்தத் துறைமுகத்திற்கு மிக அருகிலே தான் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்திருக்கிறது.
தற்போது அதே அதானி குழுமம் தான், காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எடுத்துக் கொள்ளப் போவதாக வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது, மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு, முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தை நலிவடைந்திடச் செய்ததே அதானி குழுமத்திற்கு உதவிடும் உள்நோக்கத்தோடு தானா என்ற சந்தேகம் அனைவருடைய மனதிலும் எழத் தான் செய்கிறது. இது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத் தான் போகின்றன’ என்று அந்த அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தார்.
கலைஞரின் இந்த அறிக்கையைக் குறிப்பிடும் திமுகவினர், ‘2008 இல் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க திமுக அரசுக்கு அப்போதைய மத்திய அமைச்சர் சிதம்பரம் உதவினார். இந்த துறைமுகத்தின் மூலம் ஹேண்டிலிங் சார்ஜ் என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு வருமானம் வரும் சூழல் இருந்தது. ஆனால் அதானி குழுமத்தினரின் வற்புறுத்தலாலோ, அல்லது எல்.என்.டி. நிறுவனத்தின் முடிவாலோ அதை அதானியிடம் 30 வருட லீசுக்கு ஒப்படைக்க அதிமுக ஆட்சிக் காலத்தில் முடிவெடுத்தது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மட்டுமல்ல… எடப்பாடி பழனிசாமியும் அதானி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.
2015 இல் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானியிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் வேண்டும் எனவும் எல்.என்.டி. தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒப்புதல் அளித்தார். ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களால் காட்டுப்பள்ளி துறைமுகம் முழுமையாக அதானி கையில் வந்தது 2018 எடப்பாடி ஆட்சியில்தான். எனவே அதானிக்கும் அதிமுக ஆட்சிக்கும்தான் அதிக தொடர்பு. முதல்வர் ஜெயலலிதாவையே அதானி தலைமைச் செயலகத்தில் சந்தித்திருக்கிறார்.
ஆனால் திமுக ஆட்சியில் அதானி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம், தொழில் நிமித்தம் அரசு அதிகாரிகளை சந்தித்திருக்கலாம். காரணம் அவர் கடந்த ஜனவரியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் தமிழ்நாட்டில் 42, 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்தான் கையெழுத்தானது. இந்த அடிப்படையில் அதானி சென்னை வந்து அதிகாரிகளை சந்தித்திருக்கலாம். ஆனால் முதல்வரை சந்திக்கவில்லை, முதல்வரை சந்தித்திருந்தால் அந்த சந்திப்பு முதலீட்டாளர் மாநாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போல வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் பதிலளிக்கவும் முதல்வர் தயாராக இருக்கிறார்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிவேகத்தில் ஃபெஞ்சல் புயல் : 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
உயர்நீதிமன்றத்தில் நயன்தாரா பதிலடி… அதிர்ச்சியில் உறைந்த தனுஷ் தரப்பு!