வைஃபை ஆன் செய்ததும் சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பு வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“டிசம்பர் 31ஆம் தேதி முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ‘டெல்லி செல்கிறேன். கட்சி விஷயமாகத்தான் செல்கிறேன். பாஜகவின் உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் பத்து நாட்களுக்குள் மாநில தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதில் அந்தமான் மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு சிறப்பு அதிகாரியாக நான் செல்கிறேன். அது தொடர்பாக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை சந்திக்கிறேன்.
அப்போது தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை பற்றியும் நட்டாவிடம் பேச இருக்கிறேன். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் பற்றியும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றியும் நட்டாவிடம் பேசுவேன்’ என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லிவிட்டு விமானம் ஏறினார் தமிழிசை.
செய்தியாளர்களிடம் இப்படி என்றால் தனது ஆதரவாளர்களிடம் கிட்டத்தட்ட சபதம் இடும் அளவுக்கு நம்பிக்கையாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் டாக்டர் தமிழிசை.

அதாவது ஓரிரு தினங்களுக்கு முன்பு நடந்த பாஜகவின் அகில இந்திய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி தேர்தல் ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை மிக குறைவாக இருப்பதாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. மொத்தமே 9 லட்சம் புதிய உறுப்பினர்கள் தான் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இதில் சென்னை, கன்னியாகுமரி, கோவை ஆகிய பகுதிகளிலேயே 70% உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மீதி இருக்கிற அத்தனை மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை மிகவும் மெத்தனமாக இருக்கிறது என்றும் தேசிய தலைமை அறிந்துள்ளது.
கோவை, குமரியில் எப்போதுமே பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள் அதிகம். இந்த முறை சென்னையில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதில் தமிழிசையின் பங்கு கணிசமானது என்றும் தேசிய தலைமை அறிந்துள்ளது.
இதே நேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கியமான ஒருவரி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதாவது உங்களால் தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணிக் கதவுகள் எந்த கட்சியுடனும் மூடப்பட்டு விடக்கூடாது. கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் உத்தரவு. அதையடுத்துதான் திடீரென, அதிமுகவின் ’யார் அந்த சார்?’ போராட்டத்தைப் பாராட்டிப் பதிவிட்டார் அண்ணாமலை. இதுபற்றி, ‘அமித் ஷாவின் ஒருவரி உத்தரவு… அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை’ என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியானது.

ஏற்கனவே 2021 இல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாக 2023 செப்டம்பரில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, ‘கூட்டணி விசயத்தில் ஒரு தவறு செய்து விட்டோம். மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டோம். புதிய பாதை நோக்கி பயணிப்போம். கூட்டணி பற்றி இனி நான் முடிவெடுத்து அறிவிப்பேன்’ என்று பேசினார். அப்படியானால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இப்போது இல்லை என்பதைத்தான் டாக்டர் ராமதாஸ் வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாகவே தமிழக பாஜகவின் உட்கட்சி சூழலும், கூட்டணி சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என புகார்கள் டெல்லிக்கு சென்றுள்ளன. இதையெல்லாம் டெல்லி நன்றாக உணர்ந்திருப்பதாகவும், அண்ணாமலையை வளர்த்தெடுத்த சந்தோஷே இதை உணர்ந்திருப்பதாகவும்… அதனால் தை பிறந்தால் தனக்கு வழி பிறக்கும் என மிகுந்த நம்பிக்கையோடு தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் டாக்டர் தமிழிசை. டெல்லி சென்று தனக்கு ராசியான சாய்பாபா கோவிலிலும் வழிபட்டுள்ளார்.

அதேநேரம் அண்ணாமலை ஆதரவாளர்களோ, ‘சமீப காலமாக அண்ணாமலை மன உளைச்சலில் இருக்கிறார் என்பது உண்மைதான். இப்போது கூட அவர் கேரளாவில் இருக்கும் அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். ஆனாலும் பி. எல். சந்தோஷ் டெல்லியில் அண்ணாமலைக்கு உறுதியாக ஆதரவு கரம் நீட்டுகிறார். மோடியும் அண்ணாமலையை நம்புகிறார். கடந்த சில நாட்களில் மட்டும் அண்ணாமலை தமிழக ஆளுநரை இருமுறை சந்தித்து பேசி உள்ளார். அண்ணாமலையும் ஆளுநரும் தேர்தல் வரை தொடர்வார்கள் என்பது தான் எங்கள் நம்பிக்கை’ என்கிறார்கள்.
தமிழக பாஜகவில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரு குறித்து அவதூறு: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட காமெடியன்
அரசுப்பள்ளியில் ஜாதி கொடுமை… புத்தாண்டில் திமுக அரசுக்கு நெருக்கடி!
எப்.ஐ.ஆர் லீக்… மத்திய அரசு விளக்கம் அளித்தால் நம்பனுமா? : சீமான் கேள்வி!