வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் களத்தின் வேட்பு மனுக்கள் பரிசீலனை பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று (ஜனவரி 18) நடைபெற்றது.
மொத்தம் 55 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், போட்டியில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் திமுக மற்றும் நாம் தமிழர் மட்டுமே. அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் புறக்கணித்து விட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி களம் காண்கிறார்.
முக்கிய எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் வழக்கமான இடைத்தேர்தல் ஃபார்முலாவை இந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பின்பற்ற வேண்டாம் என திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது குறித்து மின்னம்பலத்தில் ஸ்டாலின் முடிவு அமைச்சர்கள் நிம்மதி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதாவது கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகட்டும், சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகட்டும்… அங்கே அமைச்சர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என திமுக நிர்வாகிகள் தொகுதியை தங்களது பண பலத்தால் குளிப்பாட்டினார்கள். கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் களத்தில் பிற கட்சியினருக்கு வாக்கு சேகரிக்க கூட மக்களை விடாமல் பட்டியில் அடைத்து வைத்திருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இந்தப் பின்னணியில் இப்போது திமுகவுக்கு இணையான அரசியல் சக்தி எதுவும் போட்டியில் இல்லாததால், வழக்கமான இடைத்தேர்தல் பாணி வேண்டாம் என முதலமைச்சர் கூறிவிட்டார்.
இதனால் கடந்த ஒரு வாரமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் பிரச்சாரம் மிக வித்தியாசமாக நடந்து வருகிறது. அதாவது மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி, ஈரோடு திமுக எம்பி பிரகாஷ் இவர்கள் வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் உடன் கிளம்புகிறார்கள். ஈரோடு மாநகரத்தில் இருக்கும் 34 வார்டுகளை உள்ளடக்கியதுதான் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி. இவர்கள் எந்தெந்த பகுதிக்கு செல்கிறார்களோ அந்தந்த பகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆகியோர் மட்டுமே பிரச்சாரத்துக்கு வருகிறார்கள்.
காலை 7:30 லிருந்து 11:30 மணி வரை, மாலை 4:30 மணியில் இருந்து 9 மணி வரை என ஒவ்வொரு வார்டிலும் வீடு வீடாக சென்று முத்துசாமி குழுவினர் திமுகவுக்கு வாக்கு கேட்டு வருகின்றனர். ஜனவரி 18ஆம் தேதி வரை இவ்வாறாக மொத்தம் பத்து வார்டுகளை சேர்ந்த அனைத்து வீடுகளுக்கும் சென்று ஓட்டு கேட்டு விட்டனர்.

சந்துக்கு சந்து அமைச்சர்கள் டீ குடித்துக் கொண்டும் வடை சுட்டுக் கொண்டும் இருக்கும் இடைத்தேர்தல் களம் இப்படி ஆகிவிட்டதே என திமுகவினர் பேசிக்கொண்டிருக்கும் இந்த நிலையில்… திமுக தலைமை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இன்னொரு வியூகத்தை வகுத்திருக்கிறது என்கிறார்கள் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
இது பற்றி விசாரித்த போது, ‘ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் திமுகவுக்கு போட்டி என்று சொல்லிக்கொண்டு நாம் தமிழர் கட்சி தான் களத்தில் இருக்கிறது.
சமீபத்தில் கட்சியின் தலைவர் சீமான் தந்தை பெரியாரை பற்றி மிக அவதூறாக பேசியிருந்தார் இதற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் பெரியார் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்… தமிழகம் முழுவதும் 70 இடங்களில் சீமானுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் எப்படியாவது இந்த இடைத் தேர்தலில் கடந்த முறை வாங்கியதை விட மிக அதிக ஓட்டுகளை ஈரோட்டில் வாங்கிக் காட்ட வேண்டும் என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். இதற்காக ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிடாத அதிமுகவின் லோக்கல் முக்கிய நிர்வாகிகளிடமும் நாம் தமிழர் சார்பில் சீமான் பேசி வருகிறார்.

இதற்கிடையேதான்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அமைச்சர்களை தீவிரமாக ஈடுபடுத்த வேண்டாம் என்ற தனது முந்தைய உத்தியில் சில மாற்றத்தை செய்கிறது திமுக தலைமை என்கிறார்கள் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள்.
அதாவது ஈரோடு இடைத் தேர்தல் தேர்தல் களத்தை கவனிக்க அமைச்சர் எ.வ.வேலு வர இருக்கிறார். அவர் ஈரோட்டுக்கு வந்து கள நிலவரங்களை கவனித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் தருவார். அதன் அடிப்படையில் திமுகவின் இடைத் தேர்தல் வியூகத்தில் மேலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என்கிறார்கள் ஈரோடு தேர்தல் பணிமனையில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
- முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த பெங்களூரு… கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி!
- டிஜிட்டல் திண்ணை: மோடி என்ன முடிவெடுத்தாலும்… ஸ்டாலின் அடித்த வரலாற்று சிக்சர்!
- டிலிமிட்டேஷன்… “யாருக்கு வலிக்குமோ அவர்கள்தான் கேட்க முடியும்” – கனிமொழி காட்டம்!
- ‘ஈ சாலா கப் நமதே’ – அப்டேட் குமாரு
- அடுத்த டார்கெட் நான் தான்… ஜாகிர் உசேன் மகன் பகீர் வீடியோ!