வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்விற்காக கடலூர் மாவட்டம் வருகை தருவதற்கான வரவேற்பு போஸ்டர்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. Digital thinnai Stalin tour
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திமுகவில் எதிர்பார்த்து கிடந்த மாவட்ட செயலாளர்கள் மாற்றம், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோருக்கே தெரியாமல் இந்த அதிரடி மாற்றத்தை அரங்கேற்றினார் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.
இந்த வகையில் அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலம், தற்போதைய விழுப்புரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், தேமுதிகவில் இருந்து வந்த திருப்பூர் மேயர் தினேஷ் உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன.
அடுத்த லிஸ்ட் எப்போது, அதில் என்னென்ன மாற்றங்கள் இருக்கப் போகின்றன என்கிற விவாதங்கள் திமுகவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களுக்கு கள ஆய்வுக்கு வந்து செல்கிறாரோ… அந்தந்த மாவட்டங்கள் அடுத்தடுத்து மாற்றங்களுக்கு உள்ளாகின்றன என்ற பகீர் சென்டிமென்ட்டும் திமுகவினரிடையே பகிரப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த ஜனவரி இறுதி வாரத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு விசிட் அடித்தார் ஸ்டாலின். சமூக நீதி போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்த ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அடுத்தது பிப்ரவரி முதல் வாரத்தில் நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார்.
இந்த பின்னணியில் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்ட மாற்றப்பட்டியலில் விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெற்றன. இந்த வரிசையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 21, 22 தேதிகளில் கடலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதனால் அடுத்த கட்டமாக கடலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏற்படுமா என்ற விவாதம் வட மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல மூத்த அமைச்சர்கள் கூட இது பற்றி விவாதிக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இப்போது கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய ஐந்து தொகுதிகள் அடங்கிய கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இருக்கிறார்.
அதேபோல பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.கணேசன் இருக்கிறார்.
மொத்தம் ஒன்பது தொகுதிகளுக்கு இரண்டு மாவட்ட செயலாளர்கள் தான் இருக்கிறார்கள். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வரும் மாற்றப்பட்டியலின்படி கடலூர் மாவட்டமும் மாற்றத்திற்கு உள்ளாகும் என அழுத்தமாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பது தொகுதிகளை மூன்று பேருக்கு மூன்று தொகுதிகளாக பிரித்து வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

இது மட்டுமன்றி விழுப்புரத்தோடு கடலூர் ஒருவகையில் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. அதாவது விழுப்புரம் மாவட்ட தலைநகரான விழுப்புரம் சட்டமன்ற தொகுதியை எவ்வாறு மூத்த அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணியிடம் இருந்து முதலமைச்சர் பறித்து டாக்டர் லட்சுமணனுக்கு கொடுத்தாரோ.. அதேபோல கடலூர் மாவட்ட தலைநகரான கடலூர் சட்டமன்றத் தொகுதி யாருக்கு போகப்போகிறது என்று விவாதமும் தொடங்கிவிட்டது.
மாவட்டங்களில் இவ்வாறு என்றால் தலைநகரான சென்னையும் மாற்றத்திற்கு உள்ளாகும் பட்டியலில் இருக்கிறது. சென்னையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் இப்போது அதிகாரமிக்கவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களில் சேகர்பாபு முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை கவனித்து வருபவர் என்பதால் அவர் மீது பெரிய அட்டாக் நடத்தப்படாது என்கிறார்கள் வடசென்னை திமுக நிர்வாகிகள். அப்படி சேகர்பாபுவின் தொகுதிகள் பிரிக்கப்பட்டாலும் சேகர்பாபு சொல்கிற நபருக்கே கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
அதே நேரம் சேகர்பாபுவுக்கு நேரடி எதிர் அரசியல் செய்துவரும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் முழு ஆதரவு இருக்கிறது. எனவே இந்த மாற்றம் எப்படி இருக்க போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதேநேரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை எந்த விதத்தில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என தலைமையிடம் மனப்பூர்வமாக தெரிவித்துவிட்டார் என்கிறார்கள் சைதாப்பேட்டை திமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப். Digital thinnai Stalin tour