வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைன் வந்தது. லொக்கேஷன் அறிவாலயம் காட்டியது. ட்விட்டர் சில புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்க அதைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் திருவிழாக் கோலம் பூண்டுவிட்டது. மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தனது மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளோடு கூட்டம் கூட்டமாக அறிவாலயத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 7 ஆம் தேதி தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மீண்டும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். அதற்காக ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஸ்டாலின் பெயரில் மூன்று மனுக்களும், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு தலா ஒரு மனு என்றும் மொத்தம் ஐந்து மனுக்களை கொடுத்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து அக்டோபர் 9 ஆம் தேதி பொதுக்குழு கூட இருக்கிறது. இதனால் வழக்கமான தீபாவளிக்கு முன்பே திமுகவினருக்கு இதுதான் தீபாவளியாக மாறியிருக்கிறது.
இந்த உற்சாகத்தில் திமுகவின் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிர்வாகிகளையும் நேற்று (அக்டோபர் 5) அறிவாலயத்துக்கு அழைத்து வந்து சந்தித்தனர். திமுகவில் 71 மாவட்ட அமைப்புகள் இப்போது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மாசெக்களும் அவர்களுடைய பேனல் நிர்வாகிகளும் கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். யாரிடமும் தனிப்பட்ட முறையில் பேச நேரம் இல்லாத நிலையில் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளோடும் க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டார் ஸ்டாலின். நேரம் ஆக ஆக வேகம் அதிகரித்தது.
வரிசை வரிசையாக வந்துகொண்டே இருந்தனர் நிர்வாகிகள். அவர்களை தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒழுங்குபடுத்திக் கொண்டே இருந்தனர். ‘இருங்க… இப்பதான் அவங்க போயிருக்காங்க. வரட்டும்’ என்றும் ‘அப்படி தள்ளிப் போய் நில்லுங்கய்யா… இங்க கூட்டத்தைக் கூட்டாதீங்க’ என்றும் பூச்சி முருகனும் மற்ற நிர்வாகிகளும் காத்திருந்த நிர்வாகிகளிடம் சத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தலைவரைப் பார்த்து வேட்டி கொடுக்கவேண்டும், துண்டு கொடுக்க வேண்டும், புத்தகம் கொடுக்க வேண்டும் என்று அவற்றை பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர் புதிய நிர்வாகிகள். நிர்வாகிகளோடு சென்றால்தான் தலைவரை அருகே பார்க்க முடியும் என்று ஆதரவாளர்களும் சேர்ந்துகொண்டனர்.
வரிசையாக ஸ்டாலினை சென்று பார்த்துவிட்டு வேகவேகமாக செல்லும் நிலையிலும் மாவட்ட எண்ணிக்கை நிறைய இருப்பதால் வெளியே ஸ்டாலினைப் பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் கூட்டமும் வற்றாமல் சேர்ந்துகொண்டே இருந்தது. கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், ‘ஏப்பா தலைவரை எல்லாரும் இன்னிக்கேதான் பார்க்கணுமா? மாவட்டச் செயலாளர், முக்கிய நிர்வாகிகள் மட்டும் பாத்துட்டு மத்தவங்க அப்புறம் பாத்துக்கக் கூடாதா?’ என்றெல்லாம் தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுப் பார்த்தனர். ஆனால் நிர்வாகிகளோ அதையெல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளவே இல்லை. ‘ஏங்க இவ்ளோ பேரு நிக்கிறோம். ஒரு டீக்கு வழியில்லை, டீ கூட வேணாம் குடிக்க தண்ணியாவது இருக்கா?’ என்று புதிய நிர்வாகிகள் சிலர் சத்தம் போட்டபடியே நகர்ந்து சென்றனர்.
இதேநேரம் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை சந்திக்க வந்தவர்களை எல்லாம் வாழ்த்தி அவர்களோடு போட்டோ எடுத்து எடுத்து களைத்துப் போய்விட்டார், நீண்ட நேரம் நின்றுகொண்டே இருந்ததாலும் முதல்வரை களைப்பு வாட்டியது. திடீரென ஓய்வெடுக்க நினைத்த முதல்வர், ‘கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். தொடர்ந்து நின்ற நிலையில் மயக்கம் ஏற்பட்டதால் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தார். உடனடியாக ஸ்டாலினுக்கு பிரஷர் செக்கப் செய்யப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு சில நிமிடங்களில் மீண்டும் உற்சாகம் குறையாமல் வந்து நின்று புதிய நிர்வாகிகளை பார்த்து வாழ்த்துகளை தெரிவித்தார் ஸ்டாலின். நேற்று பார்க்க முடியாத மாவட்டங்களை இன்றும் பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார் முதல்வர்.
இதனால் அறிவாலயம் முழுதும் எங்கு பார்த்தாலும் கூட்டமாகவே இருந்தது. 15 ஆவது கட்சித் தேர்தல் மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஸ்டாலின் அக்டோபர் 9 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு பொதுக்குழுவுக்கு ஆறாயிரத்து ஐநூறு பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி பேசிக் கொண்டிருந்த மாவட்ட நிர்வாகிகள், ‘இந்தக் கூட்டத்தையே இங்க தாங்க முடியல, அவ்ளோ கூட்டத்தை தாங்காதுன்னுதான் பூந்தமல்லி ரோட்டுக்கு மாத்திட்டாங்களா?’ என்று கேட்கிறார்கள்” என்ற மெசேஜூக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
முட்டி மோதியும் கிடைக்காத மாசெ பதவி: பிடிஆர் விரக்தி பின்னணி!
அதிமுகவில் இணைந்த திமுகவினர்: எடப்பாடி ட்விஸ்ட்!
Comments are closed.