வைஃபை ஆன் செய்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் நடத்தி வரும் முக்கிய ஆலோசனை பற்றிய ’வாய்ஸ் நோட்’ சோர்ஸிடம் இருந்து இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைக் கேட்டு விட்டு, மேலதிக தகவல்களை விசாரித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட முக்கியமான நிர்வாக அதிகாரிகள் நேற்று (ஜூலை 16) மாற்றப்பட்டனர். இதையடுத்து அதிகாரிகள் வட்டாரத்தில் ஏற்பட்ட மாற்றம் அமைச்சரவை வட்டாரத்திலும் நடக்கும் என்ற தகவல்கள் திமுகவில் விவாதமாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவங்களின் போதே உள்துறை செயலாளர் அமுதாவை மாற்ற முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியாகியிருந்தது.
முதல்வர் அவ்வாறு ஆலோசித்தபோது, முதல்வர் அலுவலக அதிகாரிகள் வேண்டுகோளின்படி அந்த நடவடிக்கையை அப்போதைக்குத் தள்ளிப் போட்டார் ஸ்டாலின். ஆனாலும் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பற்றிய புகார்கள் தேசிய அளவில் விவாதமானது. இதையடுத்து ஜூலை 16 ஆம் தேதி உள்துறை செயலாளர் அமுதா மாற்றப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே போலீஸ் தரப்பில் இருந்து குறிப்பாக டிஜிபி சங்கர் ஜிவாலே முதல்வரிடம் உள்துறை செயலாளர் அமுதாவை பற்றி புகார்களை நேரடியாகவே கூறியிருக்கிறார் என்கிறார்கள்.
அதாவது என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டான ஏடிஎஸ்பி வெள்ளதுரை கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் பணியாற்றியபோது ஒரு லாக் அப் டெத் தொடர்பான வழக்கு விசாரணை இருப்பதாக காரணம் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் ஊடகங்களில் பூதாகரமானது. போலீஸ் தரப்பில் இருந்து முதல்வருக்கு சொல்லப்பட்டு முதல்வர் தலையிட்ட பிறகு சில மணி நேரங்களில் வெள்ளதுரை மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, அவர் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார்.
இது இப்படி என்றால் ஜூலை 1 ஆம் தேதி பெண் எஸ்.பி.யாலேயே பாலியல் புகார் கூறப்பட்டு வழக்கை எதிர்கொண்டிருக்கும் ஐஜி முருகன் எந்தத் தடையும் இன்றி ஓய்வு பெற்றார். அவர் தடையேதும் இல்லாமல் ஓய்வுபெற சில லாபிகள் நடந்ததாகவும் அதற்கு அமுதா ஐ.ஏ.எஸ். உடன்பட்டதாகவும் புகார்கள் முதல்வருக்கு சென்றன. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றிய விமர்சனங்கள் தேசிய அளவில் எழுந்தன.
இவ்வாறு காரணங்கள் அதிகமாகிக் கொண்டே வர, உள்துறைச் செயலாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் அமுதா ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகள் வட்டாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கும் நிலையில், அடுத்து அமைச்சரவையில்தான் மாற்றம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். அதற்கான சமிக்ஞைகள் நேற்று முதல் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.
நேற்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் சீனியர் அமைச்சருமான ஐ.பெரியசாமி முதல்வர் ஸ்டாலின் அழைப்பின் பேரில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கே ஐ.பியுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதேபோல இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட சுமார் பத்து அமைச்சர்கள் முதல்வர் அழைப்பின் பேரில் அவரது சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கு சென்றுள்ளனர். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின், ‘2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த அடிப்படையில் சில முக்கியமான முடிவுகளை எடுக்கப் போகிறேன். அதற்கு நீங்க ஒத்துழைப்பு தரணும்’ என்று நேருக்கு நேராக கூறியிருக்கிறார். முதல்வரே அழைத்துப் பேசிய நிலையில் அந்த அமைச்சர்களும் ஒருவித டென்ஷனில்தான் இருக்கிறார்கள்.
அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நடந்துவிடும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இலாகா அளவிலான மாற்றமாக மட்டுமே நடக்குமா அல்லது சிலர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டு சில புதிய அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அழைத்துப் பேசிய அமைச்சர்களுக்கு மட்டும் இலாகாக்கள் மாறுமா என்றும் விவாதம் நடந்து வருகிறது.
இதற்கிடையே ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்து அதை இழந்த ஆவடி நாசர் போன்றவர்களும், சில புதியவர்களும் அமைச்சர் பதவியை அடைய கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். இலாகாக்கள் மாற்றப்படும் என்ற டென்ஷனில் இருக்கும் அமைச்சர்கள் தக்க வைக்கவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சரவை மாற்றம் என்றாலே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவாரா என்ற கேள்வியும் சேர்ந்து எழுவது இப்போது அரசியல் வட்டாரத்தில் இயல்பாகிவிட்டது. அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும்போது உதயநிதிக்கும் வலுவான துறைகள் அளிக்கப்பட்டு, அவர் துணை முதல்வராக ப்ரமோட் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் திமுகவில் அதிகமாகவே இருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமரன் ரிலீஸ்: சிவகார்த்திகேயனின் தீபாவளி ட்ரீட்!
எம்.ஆர்.விக்கு உடந்தை… இன்ஸ்பெக்டருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!