வைஃபை ஆன் செய்ததும், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அரசு விழா போட்டோவும் செய்திக் குறிப்பும் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்து சட்டென வாட்ஸ் அப் சில போன் அழைப்புகளை மேற்கொண்டுவிட்டு, பின் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,

“கடந்த ஜனவரி 2 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கலைஞர் திறன் மேம்பாட்டு மையத்தைத் திறந்து வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மா.சு. பற்றி புகழ்ந்து பேசினார். ‘சைதை தொகுதியாகட்டும்.., சென்னை தெற்கு மாவட்ட கழகமாகட்டும்… அதிலிருந்து மா.சு. அவர்களை பிரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு உங்களோடு இரண்டறக் கலந்தவர் மா.சு.’ என்று புகழ்ந்து பேசிய முதல்வர், மறு நாள் ஜனவரி 4 ஆம் தேதி இந்த வார்த்தைகளை முரசொலியின் முதல் பக்கத்தில் தனி வண்ணத்தில் இடம்பெறவும் செய்தார்.
அந்த அளவுக்கு அமைச்சர் மா.சு.வை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… இன்று (ஜனவரி 9) காலை சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மேயர் பிரியா, எம்பி. தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் , சென்னை கலெக்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
‘ஆனால் இந்த கூட்டம் எங்கே நடக்கிறதோ அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஏன் சென்னையின் முக்கிய அமைச்சருமான, சைதையில் இருந்து பிரிக்க முடியாது என்று ஏழு நாட்களுக்கு முன் முதல்வரால் பாராட்டப்பட்டவருமான மா.சுப்பிரமணியன் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.
இந்த விழா நடக்கும் நேரம் மா.சு. சட்டமன்றத்தில் இருந்தார். முதலமைச்சரின் விழா தனது தொகுதியில் நடக்கும்போது அமைச்சர் எப்படி சட்டமன்றத்தில் இருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்து விசாரித்தபோது… ஸ்டாலின் சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருப்பது தெரியவந்தது.
இன்று காலை சீக்கிரமே அமைச்சர் மா.சு. முதல்வரின் வீட்டுக்குச் சென்று சைதாப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடப்பதை சொல்லி, முதல்வர் வரும் நேரம் குறித்தும் வரவேற்பு அளிப்பது குறித்தும் கேட்டிருக்கிறார் மா.சு.
அப்போது ஸ்டாலின், ‘எனக்கு சைதாப்பேட்டைக்கு வழி தெரியும்… நீ அசெம்பிளிக்கு போ…’ என்று சொல்லிவிட்டார். அப்போதே பக் என்று ஆகிவிட்டது மா.சுப்பிரமணியனுக்கு. சில நாட்களுக்கு முன்பு தான் எழுதிய, ‘கின்னஸ் கலைஞர்’ என்ற புத்தகத்தைக் கொடுப்பதற்காக குறிஞ்சி இல்லத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது துணை முதல்வரும், ‘இதை எடுத்துட்டு வாங்கனு நான் கேட்டேனா?’ என சற்று கடுமையாகவே கேட்டாராம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் மாசுவின் தொகுதியில் அவர் மந்திரியாக இருந்தபோதும் அவர் இல்லாமலேயே பொங்கல் தொகுப்பு விழாவை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
எல்லாவற்றுக்கும் காரணம் அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை விவகாரம்தான். இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டாசும் போடப்பட்டது. நேற்று சட்டமன்றத்தில் கூட முதல்வர், ‘அந்த நபர் திமுக உறுப்பினர் அல்ல,. ஆதரவாளர் அனுதாபி., அவர் அமைச்சர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டிருக்கலாம்’ என்று பேசினார்.
இந்த நிலையில் முதல்வருக்கு கிடைத்த ரிப்போர்ட்டுகள் மா.சு., மீது கடும் கோபம் கொள்ள வைத்திருக்கின்றன என்கிறார்கள்.

இதுகுறித்து விசாரித்தபோது… ‘அண்ணா பல்கலை மாணவி விவகாரம்தான் முதல்வருக்கு மா.சு. மீது கடும் கோபம் ஏற்படக் காரணம். அந்த சம்பவம் நடந்த உடனேயே சம்பந்தப்பட்ட ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையத்துக்கு திமுக பகுதி நிர்வாகிகள்தான் கொண்டு விட்டிருக்கிறார்கள். ஆனால் சில மணி நேரத்தில் அவர்களே ஞானசேகரனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மாணவியின் புகார் வலுவாக இருந்ததால் போலீசார் அவனை கைது செய்தார்கள். மேலும் இவ்விவகாரம் விஸ்வரூபமெடுக்கக் கூடும் என்பதை உணர்ந்த போலீஸ் உயரதிகாரிகள் சிலர், பாலியல் கொடுமை செய்த ஞானசேகரனை என்கவுன்ட்டரில் போட்டுவிடலாமா என்பது வரைக்கும் ஆலோசித்தார்கள். ஆனால் அந்த ஆலோசனையை முதல் கட்டத்திலேயே அமைச்சர் தரப்பு தடுத்து நிறுத்திவிட்டது.
மேலும் இப்போது உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ஞானசேகரனின் போனில் இருந்த கான்டாக்ட்டுகள் யார், அவன் அதிகமாக யாரோடு தொடர்புகொண்டிருக்கிறான் என்பது உள்ளிட்ட விவரங்களை எடுத்து… அதிலே இருக்கக் கூடிய திமுக புள்ளிகளிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றியெல்லாம் அதிர்ச்சியும் அதிருப்தியும் அளிக்கும் விவரங்கள் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் சென்று சேர்ந்திருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம்’ என்று உறுதிபட சொல்லி வருகிறார். அதற்குக் காரணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக தாய்மார்கள் ஆதரவு பெருமளவு தனக்கு இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கையில்தான். நம்பிக்கை மட்டுமல்ல, பெண்களின் ஆதரவு பெருமளவு திமுக அரசுக்கு இருக்கிறது என்ற ரிப்போர்ட்டும் முதல்வருக்கு தொடர்ந்து கிடைத்து வந்தது.
ஆனால் அவ்வாறு சேகரித்து திரட்டி வைத்த பெண்களின் பேராதரவை, அண்ணா பல்கலை மாணவி விவகாரம் அசைத்துப் பார்த்திருக்கிறது, பெண்களிடம் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என முதல்வருக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது.
இந்த நிலையில்தான் ஞானசேகரன் பற்றிய விவரங்களும் முதல்வருக்கு கிடைக்க அது அமைச்சர் மா.சு. மீதான கோபமாக மாறிவிட்டது. அதனால்தான் மா.சு.வின் சொந்தத் தொகுதியில் முதல்வர் பங்கேற்ற நிகழ்விலேயே அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வரின் இந்த கோபம், இத்தோடு முடியுமா அல்லது அடுத்தடுத்த நடவடிக்கைகள் வழியாகவும் வெளிப்படுமா என்பது சென்னை மட்டுமல்ல தமிழகம் பூராவும் திமுகவுக்குள் பேச்சாக இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் ரிலீஸ்… ஜெயிக்கப் போவது யாரு?
ஒருநாள் போட்டியில் 96 ரன்கள் அடித்தால்… விராட் கோலி படைக்கப் போகும் சாதனை!