வைஃபை ஆன் செய்ததும் அமெரிக்காவில் இருந்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினரோடு நடத்திய காணொளி ஆலோசனைக் கூட்ட படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அரசுப் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர், தனது செயலாளர்கள், அமைச்சர் உதயநிதி ஆகியோரோடு அடிக்கடி அலைபேசியில் பேசி விவாதித்து வருகிறார் ஸ்டாலின்.
உதயநிதியிடம் உரையாடும் போது அரசுப் பணிகள் மட்டுமின்றி கட்சிப் பணிகள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். இருந்தாலும் இதை அதிகாரபூர்வமாக நடத்த வேண்டுமென்பதற்காகத்தான் செப்டம்பர் 8 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்தபடியே சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினரோடு காணொளி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின்.
இந்த ஆலோசனையில் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
உதயநிதி மதுரை பயணத்தோடு பரபரப்பாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆர்.எஸ்.பாரதி தென்காசியில் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தவர், கூட்டத்தின் பாதியில் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் இருந்து கலந்துகொண்டனர்.
முதலில் அனைவரையும் ஸ்டாலின் நலம் விசாரித்தார். முதல்வரின் நலனையும் ஒருங்கிணப்புக் குழுவினர் கேட்டறிந்தனர்.
அமெரிக்கப் பயணத்தில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.
மேலும், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். சிகாகோவில் நேற்று நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு பற்றியும் சில நிமிடங்கள் மனம் விட்டுப் பேசினார் ஸ்டாலின்.
செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் பொது உறுப்பினர் கூட்டங்கள் பற்றியும் கேட்டறிந்தார் ஸ்டாலின்.’
அதற்குப் பின் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகள் குறித்து உதயநிதி சில நிமிடங்கள் ஸ்டாலினுக்கு எடுத்துரைத்திருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக திமுகவின் அணி நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு அணியிலும் மாவட்ட அளவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகள் நியமனப் பட்டியல் பற்றி முதல்வர் கேட்டறிந்தார்.
அதுமட்டுமல்ல… கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள்தான் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் மக்கள் பிரச்சினைகள், கட்சிப் பிரச்சினைகளை கட்சியின் தலைமைக்குக் கொண்டு சென்றனர். அதன்படி உடனுக்குடன் அறிவாலயத்தில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த சிஸ்டம் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதும் பயன்பட்டது.
இதனால்தான் கடந்த ஜூலை 23 ஆம் தேதி அமைச்சர் உதயநிதி தனது குறிஞ்சி இல்லத்தில் 234 சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து விருந்து வைத்து பாராட்டினார். அந்த நிகழ்வில் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
234 சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களில் யார் யாரை தொடர அனுமதிக்கலாம், யார்யாரை மாற்றலாம் என்று ஒரு பட்டியலை ஒருங்கிணைப்புக் குழு தயாரித்துள்ளது. குறிஞ்சி இல்லத்தில் நடந்த பாராட்டு விழாவில் பேசும்போது உதயநிதி, ‘பலர் சரியாக பணியாற்றியுள்ளீர்கள். சிலர் அப்படி இப்படி இருந்திருகிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்,.
இந்த நிலையில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
ஸ்டாலின் சென்னை வந்த சில நாட்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
50 மணி நேரம் ‘பாட்காஸ்ட்’… ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உலக சாதனை!
69% இட ஒதுக்கீடு… திமுக அரசு மீது தொங்கும் கத்தி! அன்புமணி பகீர்!