வைஃபை ஆன் செய்ததும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பது பற்றிய வீடியோ தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக அமைச்சர்கள் யார் மீது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ரெய்டுகளை ஏவலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூட ஸ்டாலின் இது தொடர்பாக அமைச்சர்களிடம் நேரடியாக எச்சரிக்கை செய்திருந்தார். இதுகுறித்து நவம்பர் 1 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
’ஒவ்வொரு இரவும் எனக்கு ரெய்டு குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் அது தள்ளிப் போகிறது, சில நேரங்களில் அது நடந்துவிடுகிறது. சில வாரம் முன்பு அண்ணன் துரைமுருகனை கூட நான் ரெய்டு வரலாம் என்று எச்சரித்தேன்’ என்று ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
மேலும், ‘திமுகவின் அமைச்சர்களை வேவு பார்ப்பதற்கும் வேட்டையாடுவதற்கும் மத்திய விசாரணை அமைப்புகள் தயாராக இருக்கின்றன. அதனால் நீங்களும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் கிட்டத்தட்ட அலாரம் அடித்திருந்தார்.
அதன்படியே அமைச்சர்கள் பலரும் வருமானவரி துறையாக இருந்தாலும் அமலாக்க துறையாக இருந்தாலும் எப்போது ரெய்டு வரும் என்ற முன் ஜாக்கிரதை உணர்வோடு தான் தங்களைச் சுற்றி உள்ள சூழலை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐந்தாறு நாட்கள் நடந்த ரெய்டுக்கு பிறகு கிட்டத்தட்ட அனைத்து அமைச்சர்களுமே தங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்று தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு வகுப்புகள் நடத்தாத குறையாக சொல்லி வருகிறார்கள்.
இந்த பின்னணியில் தான் நேற்று இரவு அமைச்சர் வேலுவை தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ’நாளை உங்கள் வீட்டுக்கு ரெய்டு வந்தாலும் ஆச்சரியம் இல்லை. தயாராக இருங்கள்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். வேலு உடனடியாக திருவண்ணாமலையில் இருக்கும் தனது மாவட்ட திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, ’நாளைக்கு நம் தொடர்புடைய இடங்களில் ரெய்டுகள் வரலாம். அப்படி வந்தால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என கூட்டம் கூடாமல் அவரவர் அவரவர் வேலையை பார்க்க வேண்டும். ரெய்டுக்கு வரும் அதிகாரிகள் அவர்கள் வேலையை பார்த்துவிட்டு செல்லட்டும். ஏற்கனவே கரூரில் நடந்தது போல எந்த சம்பவமும் நடந்து விடக்கூடாது’ என்று திட்டவட்டமாக அறிவுறுத்தி இருக்கிறார்.
அதன்படியே இன்று அதிகாலை வேலு எதிர்பார்த்தபடியே ஐடி அதிகாரிகள் ரெய்டுக்கு வந்திருக்கிறார்கள். சென்னை, திருவண்ணாமலை, கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வேலு தொடர்பான இடங்கள், பொதுப்பணித்துறை- நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களை குறி வைத்து ரெய்டு தொடங்கியது.
இதற்கிடையே ரெய்டு வரலாம் என்ற எச்சரிக்கை தகவல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நேற்று இரவு கிடைத்திருக்கிறது. அவரும் அலர்ட் ஆகி தனக்கு நெருக்கமானவர்களிடம் எச்சரிக்கை செய்திருக்கிறார். திமுகவை மட்டுமே மத்திய பாஜக அரசின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்து குறி வைத்து வருகின்றன என்ற முத்திரையை மாற்றுவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்கள் மீதும் ரெய்டு வரலாம் என்ற தகவல் நேற்று இரவு அதிமுக வட்டாரங்களில் உலவியது.
ஆனால் அதற்கான தெளிவு இன்று காலை ரெய்டு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கிடைத்தது. அதாவது தற்போது அமைச்சர் வேலு வகிக்கும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைகளை கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆட்சியில் அரசு ஒப்பந்ததாரர்களாக இருந்தவர்கள் சிலர் இந்த ஆட்சியிலும் அரசு ஒப்பந்ததாரர்களாக நீடித்து வருகிறார்கள். எனவே ரெய்டுக்கு உட்பட்ட ஒப்பந்ததாரர்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்களும் இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் நேற்று இரவே ரெய்டு தகவல் எடப்பாடி பழனிசாமிக்கும் கிடைத்திருக்கிறது.
அமைச்சர் வேலு வீடு, அலுவலகங்கள், அவரது குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்கள் என ரெய்டு தொடர்கின்ற நிலையில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் தங்கள் வீட்டுக்கு ரெய்டு வருவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வரப்போகிறார்கள் வரப்போகிறார்கள் என்று பதற்றமாக இருப்பதை விட ஒருமுறை வந்து விட்டு போய்விட்டால் நிம்மதி என்ற அளவுக்கு தயாராகிவிட்டார்கள் அமைச்சர்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!