வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“பிப்ரவரி 27, 28 தேதிகளில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நான்கு ஊர்களில், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
பிப்ரவரி 27 ஆம் தேதி பல்லடத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப் பயண நிறைவு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அவ்விழாவில் அதிமுகவின் இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா ஆகிய இருவரையும் போற்றிப் புகழ்ந்தார்.
அதுமட்டுமல்ல, 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவிலும், நெல்லை அரசியல் பொதுக்கூட்டத்திலும் திமுக மீது கடுமையான அட்டாக்கை முன் வைத்தார் மோடி.
திமுக மீது மோடியின் அட்டாக் என்பது தொடர்ந்து நடந்து வருவதுதான். அந்தமான், மத்தியபிரதேசம் போன்ற இடங்களிலேயே திமுகவை விமர்சித்த மோடி, தமிழ்நாட்டில் திமுகவை விமர்சிப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்கதல்ல.
ஆனால், பிப்ரவரி 27 ஆம் தேதியன்று அண்ணாமலையின் பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை நல்லாட்சி என்று மோடி புகழ்ந்ததுதான் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல…நாங்கள் பாஜக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று சொல்லிவந்த ஓபிஎஸ் பல்லடம் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை. அதேபோல பாஜகவோடு அணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிற டிடிவி தினகரனும் அழைக்கப்படவில்லை.
இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்தபோது, ‘ஒவ்வொரு வாரமும் இந்தியாவின் தற்போதைய மக்கள் மனநிலை பற்றிய சர்வே எடுக்கப்பட்டு அதன் ரிசல்ட் ரிப்போர்ட்டாக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ராமர் கோயில் திறக்கப்பட்டதற்குப் பின் இந்தியா முழுதும் பாஜகவுக்கு ஆதரவான எழுச்சி இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்த ஒவ்வொரு வாரமும் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் எழுச்சி வட இந்தியாவில் குறைந்துகொண்டே வருகிறது. பாஜக எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கூட ராமர் கோயில் தொடர்பான எழுச்சி குறைந்திருக்கிறது’ என்பதுதான் மோடிக்கு கொடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்.
இதையடுத்துதான் வட இந்தியாவிலேயே மெஜாரிட்டியை அடைந்துவிடலாம் என்ற கணக்கை மாற்றிக் கொண்டு, தென்னிந்தியா மீதும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார் மோடி.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிமுகவோடு பாஜக கூட்டணி இருந்தால் கணிசமான இடங்களை வெல்ல முடியும். இல்லையென்றால் திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்பதுதான் மோடிக்கு கிடைத்திருக்கிற அடுத்தடுத்த சர்வே முடிவுகள்.
இந்த பின்னணியில்தான் அண்ணாமலையின் பாத யாத்திரை நிறைவு விழாவில் அதிமுகவின் பிதாமகன் எம்.ஜி.ஆர். பற்றியும், அதிமுகவை மூன்று முறை தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய ஜெயலலிதா பற்றியும் புகழ்ந்திருக்கிறார் மோடி.
ஆறு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா ஓர் ஊழல்வாதி என்று அண்ணாமலை பேசினார். அதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தபோது நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று மீண்டும் அதிமுகவினரை கோபப்படுத்தினார். அதன் பிறகுதான் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் அதிகமாகி கூட்டணி முறிந்தது. Modi put brakes on OPS TTV for Edappadi
ஆனால் இப்போது தமிழகம் வந்த மோடி, ‘எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நல்லாட்சி நடத்தினார்கள்’ என்கிறார். அப்படியென்றால் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை சொன்னது பாஜகவின் கருத்தல்ல… பிரதமராகிய தான் சொல்வதே அதிகாரபூர்வ பாஜகவின் கருத்து என்று சொல்லியிருக்கிறார் மோடி.
அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவந்து அதிமுக- பாஜக கூட்டணி மூலமாக திமுகவை வலிமையாக எதிர்ப்பதற்காகத்தான் மோடியே இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
பிரதமர் தமிழ்நாடு வந்த நேற்று கூட எடப்பாடியோடு பாஜக தரப்பில் தொடர்புகொண்டு கூட்டணிக்காக முயற்சி செய்திருக்கிறார்கள். எடப்பாடி அசைந்துகொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் பல்லடம் விழாவுக்கு தனது நெடுநாள் தோழனான ஓபிஎஸ் சையும் மற்றும் டிடிவி தினகரனையும் அழைக்க வில்லை பாஜக.
ஆனால் எடப்பாடியோ பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை தங்களது முயற்சி தொடரும் என்கிறார்கள் பாஜக டெல்லி புள்ளிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது!
10 ஆண்டு காலம்..கட்சி தாவிய எம்.எல்.ஏ-கள்…கவிழ்க்கப்பட்ட மாநில அரசுகள்!
Modi put brakes on OPS TTV for Edappadi
Comments are closed.