வைஃபை ஆன் செய்ததும், இன்பாக்சில் மத்திய அரசின் விசாரணை அமைப்பு ஒன்றின் இணைய முகவரியை பகிர்ந்திருந்தார் சோர்ஸ். அதற்குள் சென்று பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“இலாகா இல்லாத அமைச்சரான செந்தில்பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை எட்டு நாட்களுக்கு அமலாக்கத்துறை கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
இந்த விசாரணைக்கு பல வரம்புகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. அதாவது கஸ்டடியின் போது செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லக் கூடாது, விசாரணையின் போது செந்தில்பாலாஜியின் மருத்துவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்,
கஸ்டடியின் போது மூன்றாம் தர ட்ரீட்மென்ட் செய்யக் கூடாது, கஸ்டடியின் போது செந்தில்பாலாஜியின் குடும்ப உறுப்பினர்கள் அவரைக் காண அனுமதிக்க வேண்டும், செந்தில்பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளை விதித்துதான் உத்தரவே போட்டிருக்கிறார் நீதிபதி அல்லி.
இந்த நிபந்தனைகள் அமலாக்கத் துறைக்கு கடிவாளம் போடுபவையாக இருக்கின்றன என்று வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள். அதேநேரம் கஸ்டடி கொடுக்கும்போது நீதிமன்றங்கள் பொதுவாகவே இப்படித்தான் வரையறைகள், கட்டுப்பாடுகள் விதிப்பார்கள் என்றும், ஆனால் அவற்றை எந்த விசாரணை அமைப்புகளும் 100 சதவீதம் நிறைவேற்றுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
16 ஆம் தேதி முதலே செந்தில்பாலாஜியின் அமலாக்கத்துறை கஸ்டடி ஆரம்பித்துவிட்டது என்றாலும், இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு நகல் செந்தில்பாலாஜியிடம் இன்று (ஜூன் 17) தான் கொடுக்கப்பட்டது.
மருத்துவமனையில் செந்தில்பாலாஜி இருக்கும் தளத்தின் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்று பகல் வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜியை தங்கள் முழுமையான கஸ்டடிக்குள் கொண்டுவரவில்லை என்று மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக் உள்ளிட்டோரின் போன் டேப் மூலம் சில தகவல்களைப் பெற்றிருக்கும் அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியின் தேர்தல் நிதி, கட்சி நிதி தொடர்பான விசாரணைகளை வேகப்படுத்தி அதன் மறுமுனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரை கொண்டு போகத்தான் திட்டமிட்டுள்ளனர்.
அமலாக்கத் துறை செல்லும் திசை பற்றி அவ்வப்போது அரசியல் மேடைகளில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை… உதயநிதி ஃபவுண்டேஷன் என்பது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஒரு அமைப்பு என்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
செந்தில்பாலாஜி தேர்தல் நிதி, கட்சி நிதி திரட்டி தலைமைக்குக் கொடுப்பதாகவும் அது உதயநிதி வழியாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று செந்தில்பாலாஜியிடம் கஸ்டடி வாக்குமூலம் வாங்கி… அடுத்து உதயநிதியை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவது என்பதுதான் டெல்லியின் பக்கா திட்டம். இதை அண்ணாமலையே வெளிப்படையாக பொது மேடைகளில் கூறி வருகிறார்.
ஆனால் செந்தில்பாலாஜியை மையமாக வைத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டில் கிடைத்த தரவுகளின் படி அவர் டாஸ்மாக் வருவாய் மூலம் நிதி திரட்டியதை கண்டுபிடித்தாலும்… அது மேலிடத்துக்கு குறிப்பாக உதயநிதிக்கு சென்றிருக்கிறது என்பதற்கான துல்லியமான ஆதாரத்தை அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால்தான் கஸ்டடியில் செந்தில்பாலாஜியிடம் பல்வேறு கிடுக்கிப் பிடி கேள்விகளை போட்டு உதயநிதியை இதில் கொண்டுவருவதற்கு முயற்சிக்கிறார்கள்.
இந்த விசாரணைப் படலத்தில் அமலாக்கத்துறைக்கு உதவுவதற்காக மத்திய அரசின் இன்னொரு விசாரணை ஏஜென்சியான Serious Fraud Investigation Office என்ற விசாரணை அமைப்பையும் இப்போது ஈடுபடுத்தியிருப்பதாக டெல்லி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
அமலாக்கத்துறை என்பது நிதி அமைச்சகத்தின் கீழ் வருவது. இந்த SFIO என்ற தீவிர குற்ற புலனாய்வு அமைப்பு 2015 ஆம் ஆண்டு மோடி அரசால் ஏற்படுத்தப்பட்டது.
இது கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக நடக்கும் வொயிட் காலர் மோசடிக் குற்றங்களை கண்காணித்துத் தடுப்பது, அந்த குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் அல்லது வழக்குத் தொடர பரிந்துரைக்கும் அதிகாரம் பெற்றது இந்த அமைப்பு.
இது தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்காது. நிறுவனங்கள் தொடர்பான புகார்களை மட்டுமே விசாரிக்கும். அந்த வகையில் செந்தில்பாலாஜி, உதயநிதி தொடர்பான நிறுவனங்கள் வகையிலான தகவல்களை தீவிரமாக திரட்ட ஆரம்பித்திருக்கிறது Serious Fraud Investigation Office.
எப்படியாவது செந்தில்பாலாஜி மூலமாக உதயநிதியைத் தொட வேண்டும் என்பதுதான் இந்த இரட்டை ஏஜென்சிகளின் இப்போதைய இன்ச் பை இன்ச் நகர்வு என்கின்றன டெல்லி வட்டாரங்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பணக்கார மாணவர்களுக்கே சாதகமான ’நீட்’: ஆய்வில் அம்பலம்!
யூடியூப் டிரெண்டிங்கில் மாமன்னன் டிரெய்லர்!
இதெல்லாம் கிடையாது… கொங்கு மண்டலத்தில் dmk க்கு அதிக வாக்கு வங்கி உருவாக்கி கொடுத்தவர் பாலாஜி அவரை அடக்கி வைத்து விட்டால் பிஜேபி வெற்றி பெரும் என்பது இவர்களது நினைப்பு