டிஜிட்டல் திண்ணை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? புதிய ஆலோசனை!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஊரக உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை, நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே. என். நேரு ஆகியோர் ஆற்றிய உரையின் வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்து கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்ததும், அடுத்தது ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிர்கொள்ள வேண்டும் என்று திமுக தலைமையில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வந்தன.

கடந்த 2019 டிசம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பிரிவினைக்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நிர்வாக காரணங்களுக்காக நடைபெறவில்லை.

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021 இல் திமுக ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்றது.

இந்த பின்னணியில் 2019-ல் தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகளுக்கும், இன்னமும் இரண்டு வருடங்கள் பதவி காலம் பெற்றிருக்கிற ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து 2024 டிசம்பரில் தேர்தல் நடைபெறலாம் என்ற விவாதம் திமுக தலைமையில் கடந்த மாதம் தொடங்கியது.

இதையடுத்து 2021 இல் தேர்தல் நடைபெற்று பதவிக்கு வந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி நிர்வாகிகள் தங்களுக்கு பதவிக்காலம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும் போது ஏன் இப்போதே அவர்களோடு சேர்த்து எங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்? என கேள்வி கேட்டு எங்களுக்கு இப்போது தேர்தல் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த சூழலில் தான் சட்டமன்ற கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதங்களில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியசாமியும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவும் பேசினார்கள்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமியின் பேச்சில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான எந்த சிக்னலும் இல்லை அதே நேரம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது சில விஷயங்களை பட்டியலிட்டார்.

அதாவது பத்தாயிரம் மக்கள் தொகை, ஆண்டு வருமானம் 30 லட்சம் மேல் இருந்தாலே அந்த ஊராட்சியை அதாவது கிராமப் பஞ்சாயத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்தலாம். 50 லட்சம் வருமானம் 30 ஆயிரம் மக்கள் தொகை இருந்தால் நகராட்சியாகவும், 3 லட்சம் மக்கள் தொகை 30 கோடி வருமானம் இருந்தால் மாநகராட்சியாகவும் தரமுயர்த்தலாம் என்று சட்டம் இருக்கிறது.

இப்போது 7 மாவட்ட கலெக்டர் ஆபீஸ் கிராம பகுதிகளில் இருக்கிறது. அதேபோல கோயில்கள், சுற்றுலா தளங்களையும் தரமுயர்த்த கோரிக்கை வந்திருக்கிறது.

10 ஆயிரம் பாப்புலேஷனுக்கு மேல் 177 கிராம பஞ்சாயத்துகள் இப்போது உள்ளன. மொத்தம் 726 உள்ளாட்சி அமைப்புகளை தரமுயர்த்த வேண்டும் என்று எம்.பி, எம்..எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இதற்கான மக்கள் கருத்துகளை கேட்டு கலெக்டர்களிடம் இருந்து அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேசினார் அமைச்சர் நேரு.

இந்த நிலையில்தான் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்த சில திமுக நிர்வாகிகள், ‘ஊராட்சிகளை பேரூராட்சியாக்க வேண்டியிருக்கு… சென்னையை சுற்றியே சில ஊராட்சிகள் பல கோடி வருமானம் கொண்டவையாக இருக்கு. அவற்றை மாநகராட்சியோடு சேர்க்க வேண்டியிருக்கு. இதெல்லாம் ஆறு மாசத்துக்குள்ள செஞ்சு முடிச்சிட முடியுமா? அதனால இப்ப தேர்தல் வராது.

வரும் மழை காலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதும் சிக்கலாக இருக்கும். அதனால எல்லா மாவட்டங்களுக்கும் சேர்த்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடத்தலாமா என்பது பற்றி யோசித்து வருகிறார்கள்.

அதுவரை கடந்த ஆட்சியில் நடைபெற்றதைப் போல ஸ்பெஷல் ஆபீசர்களை நியமிக்கலாமா என்றும் ஆலோசனை நடக்கிறது. எனினும் முதல்வர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவு?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் : குஷ்பு தலைமையில் விசாரணை குழு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share