வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடியின் சென்னை ரோடு ஷோ மற்றும் வேலூர், மேட்டுப்பாளையம் பிரச்சார வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“பிரதமர் மோடி சென்னையில் ஏப்ரல் 9 ஆம் தேதி தி.நகர் பனகல் பார்க் முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரையிலும் ரோடு ஷோ நடத்தினார்.
மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் மோடி 9, 10 தேதிகளில் சென்னை, வேலூர், மேட்டுப் பாளையம் சென்றுவிட்டு மீண்டும் 13, 14 தேதிகளில் வருகிறார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு முறை எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அது தேர்தல் சமயமாக இருந்தாலும், தேர்தல் சமயமாக இல்லாவிட்டாலும் அவர் அந்த மாநிலத்துக்கு செல்வதற்கு முன்பு ஒரு ஆய்வு, சென்று வந்த பிறகு ஓர் ஆய்வு என இரு மதிப்பீடுகள் எடுக்கப்பட்டு அந்த அறிக்கை அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதெல்லாம் மத்திய உளவுத்துறை மற்றும் பாஜகவின் பிரத்யேக சில ஏஜென்சிகள் நடத்துவது. இதையெல்லாம் தாண்டி மோடி ஓர் கூட்டத்துக்குச் செல்கிறார் என்றால், அந்த கூட்டத்தின் எழுச்சியை வைத்தே… அதாவது அந்த கூட்டம் தனக்கு ரெஸ்பான்ஸ் செய்கிறதா என்பதை வைத்தே அந்த கூட்டம் பற்றிய முடிவுக்கு வந்துவிடுவார்.
மூன்று முறை முதலமைச்சர், இரு முறை பிரதமர் என அவர் இந்திய நாட்டின் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறார்.
மோடியின் அனுபவத்தின் அடிப்படையிலான அவரது அனுமானத்தில் எவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது, வந்திருப்பவர்களில் கட்சிக்காரர்கள் கூட்டம் அதிகமா, அல்லது அழைத்துவரப்பட்டவர்கள் அதிகமா என்பதையெல்லாம் அவரே கண்டுபிடித்துவிடுவார்.
இந்த நிலையில் நேற்றைய ரோடு ஷோவுக்கு வந்த பிரதமர் மோடி இரண்டு புறமும் பார்த்தபடியே வந்தார். இது தானா சேர்ந்தா கூட்டமா? கட்சி உணர்வோடு இருக்கிறார்களா… என்பதையெல்லாம் இரு பக்கமும் பார்த்தபடியே எடைபோட்டு வந்தார் மோடி.
மோடி ரோடு ஷோ புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அவரது வாகனத்தில் மத்திய சென்னை வேட்பாளார் வினோஜ், வடசென்னை வேட்பாளார் பால் கனகராஜ் ஆகியோர் ஏற்றப்படுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. பலத்த முயற்சிக்குப் பிறகுதான் அவர்களும் மோடி வாகனத்தில் அனுமதிக்கப்பட்டார்கள்.
பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னலுக்கு ஒருமணி நேரம் என்று திட்டமிட்டிருந்த நிலையில், போதிய கூட்டம், வரவேற்பு இல்லாததால் மோடியின் ரோடு ஷோ திட்டமிட்ட நேரத்துக்கு இருபது நிமிடங்கள் முன்னதாக அதாவது 40 நிமிடங்களில் முடிந்துவிட்டது.
ரோடு ஷோ முடிந்ததும் சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குசென்றுவிட்டார் பிரதமர் மோடி. அதன் பிறகு ட்விட்டரில் இந்த நாள் சிறப்பான நாளாக இருந்தது. சென்னை என் மனதை வென்றது! இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன’ என்று பதிவிட்டார் மோடி.
தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக மகிழ்ச்சி அடைந்தது போல காட்டிக் கொள்வது தலைவர்களுக்கு வழக்கம்தான் என்றாலும், மோடியின் நிஜ ரியாக்ஷன் நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் வெளிப்பட்டது.
ரோடு ஷோவுக்கு ஒரு மணி நேரம் என திட்டமிடப்பட்ட நிலையில் 40 நிமிடங்களில் முடிந்தற்குக் காரணம் போதிய கூட்டம் இல்லாமைதான் என்பதை அறிந்திருந்தார் மோடி.
மோடி இன்னும் கொஞ்ச நேரம் செலவிடமாட்டாரா என்று பல மாநிலங்களிலும் பாஜகவினர் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மோடி கொடுத்த 60 நிமிடங்களில் 20 நிமிடத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் தமிழக பாஜகவினர் என்பதில் அவருக்கு வருத்தம்தான். மேலும் மொத்தமே 15 ஆயிரம் பேர் அளவுக்குத்தான் கூட்டம் வந்திருப்பார்கள் என்றும் மோடிக்கு ரிப்போர்ட் நேற்று இரவே போய்விட்டது. அதனால் நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை.
இதற்கிடையே தென் சென்னை வேட்பாளர் தமிழிசை, ‘மோடியின் ரோடு ஷோவுக்கு அபரிமிதமான கூட்டம் வந்தது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் பதற்றம் அடைந்திருக்கிறார். மேலும் பல பேரை ரோடுஷோவுக்கு வராமல் தடுத்து நிறுத்திவிட்டார்கள்’ என்கிறார்.
இதுகுறித்து சென்னை போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘பாஜக சார்பில் என்னென்ன லொக்கேஷன்களில் மக்கள் நிற்க அனுமதி வேண்டும் என கேட்டிருந்தார்களோ, அதை அப்படியே அனுமதி அளித்துவிட்டோம். ஏற்கனவே ஜே.பி. நட்டா ரோடு ஷோவுக்கு நீதிமன்றம் வரை சென்று சர்ச்சையான நிலையில், இந்த முறை பிரதமர் ரோடு ஷோவுக்கு போலீஸ் பாதுகாப்பு மட்டும்தான் வழங்கியது. வேறு எந்த தடையும் செய்யவில்லை’ என்கிறார்கள்.
மோடியின் வருத்தத்தை உணர்ந்தோ என்னவோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ரோடு ஷோ முடிந்ததும், அடுத்த நாள் மோடி பொதுக்கூட்டம் மேட்டுப் பாளையத்தில் இருப்பதை காரணம் காட்டி உடனடியாக கோவைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
குஜராத்தில் 50 கிலோ மீட்டர் ரோடு ஷோ, பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் ரோடு ஷோ, சமீபத்தில் அயோத்தியில் மெகா ரோடு ஷோ என்றெல்லாம் பிரம்மாண்ட ரோடு ஷோக்களை பார்த்த மோடிக்கு சென்னை ரோடு ஷோவில் வருத்தம்தான்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஊழல் யூனிவர்சிட்டியின் வேந்தர் மோடி : ஸ்டாலின் அட்டாக்!
”இளையராஜா எல்லோருக்கும் மேலானவரா?” : இசையுரிமை வழக்கில் எழுந்த காரசார வாதம்!