டிஜிட்டல் திண்ணை: அதிமுக பொதுக்குழுவுக்கு ரெட் அலர்ட்?
வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு அதிமுக நிர்வாகிகள் சிலரிடமும் பேசிவிட்டு, வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடக்க இருக்கிறது. இதற்கான முறைப்படியான அறிவிப்பை அதிமுக நவம்பர் மாத இறுதியிலேயே வெளியிட்டுவிட்டது.
பொதுக்குழு கூட்டம் நடக்கும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
டிசம்பர் 15 காலை 10 மணிக்கு செயற்குழு, அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் பல பொதுக்குழுக்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சர்ச்சைகளை சந்தித்தன.
அதன் பிறகு இப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளரான நிலையில், சிறப்பு அழைப்பாளர்களோடு கூட்டப்படும் பொதுக்குழுவாக இது நடைபெறுகிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் 3,500 பேரில் இருந்து 4 ஆயிரம் பேர் என்றால், சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே சுமார் ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். மொத்தம் 5 ஆயிரம் பேருக்கு மேல் இந்த பொதுக்குழுவில் கலந்துகொள்வார்கள் என்று அதிமுக தரப்பில் கூறுகிறார்கள்.
பொதுக்குழு நடக்கும் மண்டபத்தின் டைனிங் ஹாலில் இவ்வளவு பேர் அமர்ந்து சாப்பிட கடினமாக இருக்கும் என்பதால், மண்டப வளாகத்தில் சுமார் 1,800 பேர் அமர்ந்து, சாப்பிடும் அளவுக்கு உணவு சமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார்கள்.
மண்டப வளாகத்தில் மழையால் தண்ணீர் தேங்கினால் என்ன செய்வது என்று பார்வையிட்ட பெஞ்சமினும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆலோசித்தார்கள். அதன் பின் டைனிங் டேபிள் போடும் இடத்தில் மட்டும் அரை அடிக்கு பலகையிட்டு, அதன் மேல் நாற்காலிகளை போட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான்… தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இந்த பொதுக் குழுவில் கலந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வானிலை ஆராய்ச்சி மையம் திருநெல்வேலிக்கு ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடுமையான மழை பெய்தால், பொதுக்குழுக்கு வர முடியுமா என்று தென் மாவட்ட குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இன்னும் சிலரோ தமிழகம் முழுதும் பரவலாக மழைபெய்யும் நேரத்தில், நாம் பொதுக் குழுவை நடத்த வேண்டுமா, அதை சில நாட்கள் தள்ளிப் போட்டால்தான் என்ன?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் அதிமுக தலைமையில் இருந்து தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ‘பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டதால், அதை தள்ளிப் போட சாத்தியம் மிக குறைவு. எனவே கொஞ்சம் முன்கூட்டியே புறப்பட்டு சென்னைக்கு வந்துவிடுங்கள்.
பொதுக்குழுவிலேயே தமிழகம் முழுதும் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், நிவாரணம் வழங்குவதில் திமுக அரசின் குளறுபடிகள் பற்றியும் விவாதிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
எனினும் கடும் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் இருந்து முழுமையான அளவில் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக பொதுக் குழுவில் கலந்துகொள்வார்களா என்பது கேள்விக் குறிதான் என்கிறார்கள்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக் குழுவை ஒட்டி சென்னைக்கு வந்துவிட்டார். பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்யும் பணிகளில் எடப்பாடி இருக்கிறார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தீர்மானங்கள், சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்டவை பற்றிய தீர்மானங்கள், வெள்ள நிவாரணம் வழங்குவதில் பல முறைகேடுகள் நடைபெற்றுவதாக தீர்மானம் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்படக் கூடும் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
இதற்கிடையே சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் குறித்து பதிலளிக்குமாறு எடப்பாடி, பன்னீர் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அடுத்த வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதற்கு முன் கூடும் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து நிறைவேற்றப்படும் தீர்மானம் தேர்தல் ஆணையத்துக்கும் வலிமையான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
All We Imagine As Light : விமர்சனம்!
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு… தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது ஏன்? – நாசர் கேள்வி!