ramadoss meets stalin what happened

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினை தேடி வந்த ராமதாஸ்… திருமாவுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி: திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்த படம், வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினை டிசம்பர் 29-ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை விரைவாக நிறைவேற்றவும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தியதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ramadoss meets stalin what happened

தொடர்ந்து வெளிப்படையாகவே ராமதாஸ் இந்த கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும், இதே கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சில முறை அன்புமணியும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.

இந்த நிலையில், தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் ராமதாஸே ஸ்டாலினை தேடி வந்து சந்திக்கிறார் என்றால், இதில் இந்த விவகாரங்களைத் தாண்டிய கூட்டணிக் கணக்கும் இருக்கிறது என்ற பேச்சு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

பாமகவோ, பாஜகவோ இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற நிலைப்பாடு கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த சந்திப்பு தொடர்பாக சற்றே பரபரப்பாகியிருக்கிறது.

பாமக இப்போது அதிமுக கூட்டணியிலோ, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ இல்லை. இந்த நிலையில் வரும் எம்பி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் அதன் மூலம் மாம்பழம் சின்னத்தைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமானால் திமுக கூட்டணி பரவாயில்லை என்ற கருத்து அக்கட்சி தலைமையிடம் உருவாகி வருகிறது. சமீபத்தில்  அதிகனமழை விவகாரத்தில் வானிலை ஆய்வு மையம் பற்றிய திமுகவின் கருத்தை பாமக தலைவர் அன்புமணியும் எதிரொலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ‘திமுக கூட்டணி இங்கே ஜெயித்தாலும் மத்தியில் மீண்டும் மோடி தான் வருவார். அதனால் என்ன பயன்?’ என்றும் ஒரு கேள்வி பாமகவுக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு பதில் கேள்வியாக, ‘இத்தனை ஆண்டுகளாய் பாஜக கூட்டணியில் தானே இருந்தோம். அப்போது நம் அன்புமணியை மோடி மத்திய அமைச்சர் ஆக்கினாரா? அதனால் இப்போது நமது வெற்றி மட்டுமே குறிக்கோள்’ என்றும் பாமக தலைமைக்குள் கலவையான விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த பின்னணியில் தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

திமுக தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, ‘10..5 சதவிகித இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுமாறு தொடர்ந்து பாமக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஒரு முறை கலந்துரையாடல் நடந்தபோது வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒர் இளம் அமைச்சர் முதல்வர் ஸ்டாலினிடம், ‘இந்த 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை கடந்த எடப்பாடி ஆட்சியில் அவசர அவசரமாக கொண்டுவந்தார்கள். நீதிமன்றம் மூலம் இப்போது அது தடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதை நாம் உரிய முறையில் நிறைவேற்றினால் கூட இதன் அரசியல் ரீதியான உரிமையை பாமகவே கொண்டாடும். மேலும் அதில் அதிமுகவும் சொந்தம் கொண்டாடும்.   அப்படியிருக்க இதனால் திமுகவுக்கு எவ்வித கூடுதல் ஆதாயமும் இல்லை.  நமக்கு வாக்களிக்கும் வன்னியர்களில் மாற்றம் வரப் போவதில்லை.

அதேநேரம் வன்னியர் அல்லாத பிற சமுதாயத்தினரின் அதிருப்தியை நாம் எதிர்கொண்டாக வேண்டும். அந்த இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நாம் நிறைவேற்றாவிட்டால் இப்போது வந்துகொண்டிருக்கும் விமர்சனங்கள் அப்படியே தொடரும், அவ்வளவுதான்’ என்று கூறியிருக்கிறார்.  இதை முதலமைச்சர் ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார். அதனால் தான் அந்த விவகாரத்தை அப்படியே வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட நிலையில், மூத்த தலைவர் ஒருவர் நேரம் கேட்கும்போது மறுக்க வேண்டாமே என்பதற்காகத் தான் சந்திப்புக்கு ஒப்புக் கொண்டார்.

ramadoss meets stalin what happened

கூட்டணி விவகாரத்தில் இப்போதைய திமுக கூட்டணி அப்படியே சிந்தாமல் சிதறாமல் தொடரவேண்டும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலின் விருப்பம், வியூகம் எல்லாமே. அதேநேரம் கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வரும் எம்.பி. தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதை நிபந்தனையாகவே திமுகவிடம் வைத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, விடுதலைச் சிறுத்தைகளும் அதிமுகவில் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களும் தொடர்பில் இருப்பதாக உதயநிதிக்கு சேலத்தில் உள்ளவர்கள் மூலம் நம்பகமான தகவல் கிடைத்தது. அதை முதல்வரிடமும் தெரியப்படுத்தியுள்ளார் உதயநிதி.

இந்த பின்னணியில் டாக்டர் ராமதாசை சந்தித்தால் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நிபந்தனைகளுக்கு செக் வைக்கலாமே என்ற அடிப்படையிலும்…. ராமதாஸ் நேரம் கேட்டவுடன் முதல்வர் கொடுத்திருக்கிறார்.

இதுதான் இந்த விவகாரத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மாநில அரசுக்கு ஆதரவு: ஆளுநர் ரவி உறுதி!

2023 தமிழ் சினிமா சிறப்பு பார்வை 2 : வசூலை குவித்த படங்கள் எது?

+1
1
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *