டிஜிட்டல் திண்ணை: ராஜ்நாத் சிங் வருகை…பாஜக கேட்ட 100 சீட்… திமுகவின் ரியாக்‌ஷன்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் நாளை  (ஆகஸ்டு 18) சென்னையில் நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா தொடர்பான சில போட்டோக்கள், வீடியோக்கள்  இன்பாக்சில் வந்து விழுந்தன.

“கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

‘இதை ஒட்டி  கலைவாணர் அரங்கத்தில்  இன்று ஆகஸ்ட்  17ஆம் தேதி  அமைச்சர் எ.வ.வேலு,  அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர்  ஆய்வு செய்தனர். அதாவது விஐபி சீட்டுகள், யார் யார் எங்கே அமர வேண்டும் என்பது குறித்து விவாதித்து முடிவு செய்திருக்கிறார்கள்.

மேடையில்  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,  முதலமைச்சர் ஸ்டாலின்,   மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேடைக்கு எதிரே இருக்கிற முன் இருக்கையில்  5  சீனியர் அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் முருகன்,  கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  மற்றும்  முதலமைச்சரின் குடும்பத்தினர் ஆகியோர் அமர  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது வரிசையில்  தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர்கள்  சக்கரவர்த்தி,   வி.பி.துரைசாமி,  கரு.நாகராஜன்,  நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோருக்கும்  பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனுக்கும் சீட்  ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்களில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக இருக்கை ஏற்பாடுகளும், வெளியே எல்.இ.டி. திரையில் கூட்டத்தினர் விழாவை பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் அமைச்சர்களால் ஆய்வு செய்யப்பட்டன.

இதற்கிடையே  தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள்  அறிவாலயத்தில் இருக்கும்  திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு,‘இந்த விழாவுக்கு  பாஜக நிர்வாகிகள்,  மூத்த தலைவர்கள் பலர் வர இருக்கிறார்கள்.  எனவே  எங்களுக்கு  70 முதல் 100 இடங்கள் வரை வேண்டும்’  என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆளுங்கட்சியான திமுக தரப்பிலும்  அதன்படியே அவர்களுக்கு 100 சீட்டுகள் வரை  தருவதற்கு  ஏற்பாடு செய்வதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதுபற்றி  அறிவாலயத்தில் சுவையான விவாதம்  நடந்திருக்கிறது.

‘நம்ம  தலைவரே  அண்ணாமலைக்கு  ஃபோன் போட்டு கூப்பிட்டாரு… ஆளுநரோட டீ சாப்பிட்டாரு. இதையெல்லாம் வச்சு பாஜகவோடு திமுக இணக்கமாக இருக்குனு சிலர் பேசிக்கிட்டிருக்காங்க. இந்த நிலைமையில பிஜேபி காரங்க  வேற  100 சீட்டு குடுங்கன்னு  கேக்குறாங்க… கலைவாணர் அரங்கத்தில் தான்  அவங்களுக்கு நம்ம சீட்டு கொடுக்க முடியும். தேர்தல் அரங்கத்துல எல்லாம்  கிடையாது’  என்று  திமுக நிர்வாகிகள்  சிரித்து பேசி இருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சி நிரலில் அவர்  கலைவாணர் அரங்கத்திற்கு வருவதற்கு முன்பாக மெரினாவில் இருக்கிற கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அங்கு மரியாதை செலுத்துவதாக  திட்டமிடப்பட்டுள்ளது.  அப்படி அவர் அங்கே செல்லும்போது  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  உள்ளிட்ட மாநில பாஜக நிர்வாகிகள்  கலைஞர் நினைவிடத்திற்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே  இந்த நாணய வெளியீட்டு விழாவிற்காக  அண்ணாமலைக்கு  முதலமைச்சர் ஸ்டாலின்  தொலைபேசி செய்து அன்போடு அழைத்திருக்கிறார்.  இதை அண்ணாமலையே பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.  கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எல்லாம்  அமைச்சர் வேலு  தொலைபேசியில் பேசி முதலமைச்சர் சார்பாக அழைப்பு விடுத்திருந்தார்.   அதே நேரம்  அண்ணாமலைக்கு முதலமைச்சரே  தொடர்பு கொண்டு  அழைத்திருப்பது  கூட்டணி கட்சிகள் இடையே  விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால், மத்திய அமைச்சர் ராஜ்நாத்  சிங்  கலைஞர்  நினைவு நாணயத்தை வெளியிட வருகை தரும் நிலையில்,  அவர் சார்ந்த கட்சியின் மாநில  தலைவர் என்பதால் தான்  முதலமைச்சர்  தொலைபேசியில் அழைத்தார் என்று திமுக தரப்பில் கூறுகிறார்கள்.

கலைவாணர் அரங்கத்திற்கு  முதலமைச்சர் வரும் வழி எல்லாம்  திமுகவினர் கொடி,  தோரணங்கள் என  பலமான ஏற்பாடுகளை  செய்யும் நிலையில்…. மத்திய அமைச்சர் ராஜ்நாத்  சிங்கை வரவேற்க  பாஜகவினரும்  கொடிகள் தோரணங்களுக்கு  ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், நாளை ராஜ் நாத் சிங் கலைஞர் பற்றி பேசும் பேச்சு அரசியல் அரங்கில்  பேசுபொருளாகப் போவது உறுதி”  என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து  ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆவணி மாத நட்சத்திர பலன் – விசாகம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

சிப்காட் மெகா குடியிருப்பு… “தொழில் வளர்ச்சியில் தனிக்கவனம்” – ஸ்டாலின் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share