டிஜிட்டல்  திண்ணை: ரஜினி போட்ட குண்டு… ஸ்டாலின் சொன்ன பதில்!  வெடிக்கும் துரைமுருகன்-  திமுகவில் சீனியர்ஸ் Vs ஜூனியர்ஸ்!

Published On:

| By Aara

வைஃபை  ஆன் செய்ததும்  ஆகஸ்ட் 24ஆம் தேதி அமைச்சர் வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சும்,  அதற்கு பதிலடி கொடுத்து இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி வேலூரில்  துரைமுருகன் பேசிய பேச்சும் வீடியோ வடிவில் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “ஆகஸ்ட் 24ஆம் தேதி அமைச்சர் எ.வ. வேலு எழுதிய, ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார் ரஜினிகாந்த்.  அப்போது கலைஞர் மறைவுக்கு பின் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்,  கட்சியை வெற்றிகரமாக  நடத்தி வருவது பற்றி குறிப்பிட்டு பாராட்டினார்.

கலைஞர் காலத்தில் இருந்தே திமுகவில் இருக்கும் சீனியர்களை, பழைய ஸ்டூடன்ட்ஸ் என்று வர்ணித்த ரஜினிகாந்த்,  ‘குறிப்பாக துரைமுருகன் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்ட கூடியவர்.   அவர்களையெல்லாம் சமாளித்து சர்வசாதாரணமாக  கட்சியை நடத்தி வருகிறார் ஸ்டாலின்’  என்று  பாராட்டினார் ரஜினிகாந்த். அவர் பேசும்போது மேடையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்து தனது  ஆமோதிப்பையும் வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமல்ல…  ஸ்டாலின் உரையாற்றும் போது ரஜினிகாந்தின் பேச்சு இந்த விழாவுக்கு முத்தாய்ப்பு என்று குறிப்பிட்டவர்,   ‘பயப்பட வேண்டாம்.  நான்  தவறி விடமாட்டேன். உஷாராகவே இருப்பேன்’  என்று  பதில் அளித்தார்.

இந்த விழா முடிந்ததிலிருந்து  ரஜினியின் பேச்சு பற்றியும் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் பற்றியும் தான் திமுக மேல்மட்ட வட்டாரங்களில் விவாதமாக இருக்கிறது.  அதிலும் குறிப்பாக  துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்கள்  ரஜினியின்  பழைய ஸ்டூடன்ட்ஸ் பேச்சையும்  விரும்பவில்லை.  ஸ்டாலினுடைய பதிலையும் ரசிக்கவில்லை.

நேற்று இரவிலிருந்தே துரைமுருகன் தனக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்த தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவருடைய சீனியரான நாவலர் நெடுஞ்செழியனை  தனது  காரின் முன் இருக்கையில் அமர வைத்து, முதல்வரான கலைஞர்  பின் இருக்கையில் அமர்ந்து கொள்வார்.   அது மட்டுமல்ல முதலமைச்சரின் கார் கலைஞரை அவரது வீட்டில் இறக்கி விட்டபின், அதே காரில் நெடுஞ்செழியனை அவருடைய வீட்டில்  இறக்கிவிடச் சொல்லுவார். இப்படி சீனியர்கள் மீது  மரியாதை காட்டியவர்  கலைஞர்.

இந்த சூழ்நிலையில்  ரஜினிகாந்த் பேசிய பேச்சு ஏதோ  ஸ்டாலினுக்கு எதிராக சீனியர்கள்  சதி செய்வது போலவும் அதை ஸ்டாலின்  முறியடித்து கட்சியை வெற்றிகரமாக நடத்தி வருவது போலவும் இருக்கிறது.   ரஜினியின் பேச்சு இப்படி இருக்கிறது என்றால் விழாவின் நிறைவாக  முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு அளித்த பதில்  ரஜினியின் பேச்சை  நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

கட்சியின் உள் விவகாரத்தை  ரஜினி கட்சி மேடையிலேயே  பேசுகிறார்.  அதற்கு முதலமைச்சர்  பாராட்டு தெரிவிக்கிறார் என்றால்  என்ன நடந்து கொண்டிருக்கிறது? கட்சியில் சீனியர்களின் சுயமரியாதையை உரசிப் பார்ப்பது போல இருக்கிறது’ என்று நேற்று இரவு முதலே  திமுகவின் சீனியர்கள் வட்டாரத்தில் விவாதம் ஆகி இருக்கிறது.

இந்த கோபத்தோடு  வேலூர் புறப்பட்டு சென்றார் துரைமுருகன்.  அங்கே இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி செய்தியாளர்கள் ரஜினி பேசிய பேச்சு பற்றி கேட்க, ‘அதே மாதிரிதாங்க…   மூத்த நடிகர்களெல்லாம் வயசாகி போயி பல்லு விழுந்து தாடி வளர்ந்து சாவுற வயசுலையும் நடிக்கிறதால   இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை’ என்று நடிகர் ரஜினியை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார் துரைமுருகன்.

ரஜினி மீது இருக்கும் கோபம் ஒரு பக்கம் என்றால்  அவரது பேச்சை ஆமோதித்த ஸ்டாலின் மீதும் துரைமுருகனுக்கு வருத்தமும்  கோபமும் இருக்கிறது என்கிறார்கள் துரைமுருகனுக்கு  நெருக்கமானவர்கள்.   ரஜினியின் இந்த பேச்சு மூலமாக திமுகவில்  சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையிலான மோதல்  நடந்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது”  என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதர்மக்கதைகள்: விமர்சனம்!

“இளைஞர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel