டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாட்டுக்கும் ஒரு ரேவந்த் ரெட்டி… கார்த்தி சிதம்பரத்துக்கு ராகுல் மெசேஜ் – ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சத்தியமூர்த்தி பவனில் இருந்து சிலர் அனுப்பிய மெசேஜ்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அதைப் பார்த்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான அருள் பெத்தையா சென்று, ‘அடுத்து கார்த்தி சிதம்பரம் தான் மாநிலத் தலைவர்’ என்று சொன்னதோடு புதிய நிர்வாகிகள் யார் யார்? எங்கெங்கே அமரவேண்டும், யாருக்கு என்ன அறைகள் ஒதுக்க வேண்டும் என்று ஆலோசித்திருக்கிறார்.

இந்த அளவுக்கு கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவர் தான் அடுத்த தலைவர் என்று அவர்களாகவே முடிவெடுத்து தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மாதம் நடந்த தனது பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டிவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், ‘எனக்கு இருக்கும் ஒரே ஆசை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்பது தான்’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.

இப்படி வெளிப்படையாக தெரிவித்த நிலையிலும் டெல்லி வரைக்கும் தனது முயற்சிகளையும் இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

இந்த முயற்சிகளின் ஒரு அம்சமாக டிசம்பர் 11-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியை சந்தித்து பேசி இருக்கிறார் கார்த்தி. கடந்த வாரம் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து கார்த்தி சிதம்பரம் விவகாரம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அந்த அறைக்கு வெளியே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி காத்துக் கொண்டிருந்தார் என்கிறார்கள் டெல்லி விவரம் அறிந்தவர்கள்.

கார்த்தி சிதம்பரம் மாநில தலைவர் ஆவதற்கு ராகுல் காந்தி விரும்பவில்லை என்று  சில மாதங்களாகவே தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வரும்போது அவருக்கு கை கொடுக்க கார்த்தி சிதம்பரம் முயன்றார்.

ஆனால் அதை பார்க்காமல் ராகுல் காந்தி சென்று விட்டார். இந்த ஒரு வீடியோ காட்சியும் இதற்கு வலுவான சாட்சியாக பரப்பப்பட்டது.

இந்த பின்னணியில் தனக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தருமாறும்… அப்படி தந்தால் கர்நாடகா, தெலங்கானா போல தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான ஒரு எழுச்சியை தன்னால் ஏற்படுத்த முடியும் என்றும் கார்த்தி, ராகுலிடம் தெரிவித்திருக்கிறார்.

அப்போது. ராகுல், ’உங்களை மாநில காங்கிரஸ் தலைவர் ஆக்குவதற்கு நான் எப்போதும் யாரிடமும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது தொடர்பான விவாதம் காங்கிரஸ் காரிய கமிட்டியில் நடக்கும் போது நான் உங்களை நிச்சயம் பரிந்துரைப்பேன்’ என்று கூறியிருக்கிறார்

சமீபத்தில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைத்த நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவித்து கார்த்தி சிதம்பரம் ராகுல் காந்திக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அப்போது இதேபோல தமிழ்நாட்டிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் கார்த்தி. இதற்கு முன் தான் நேரில் சொன்ன அதே விளக்கத்தை மீண்டும் செல்போனிலும் கார்த்திக்கு  பதிலாக அனுப்பி வைத்திருக்கிறார் ராகுல் காந்தி என்கிறார்கள் கார்த்திக்கு நெருக்கமானவர்கள்.

ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக டாக்டர் செல்லகுமார் வரப்போகிறார் என்று ஒரு தகவல் பரவியது.  அதற்குப் பிறகு தற்போதைய சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை வரப்போகிறார் என்று ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டங்களை காங்கிரஸ் தலைமை கைவிட்டது. அதேபோல இப்போது கார்த்தி சிதம்பரம் தலைவராக நியமிக்கப்படலாமா என்பது பற்றி ஆலோசனை வந்தபோது தமிழ்நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களை அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை கருத்து கேட்டுள்ளது,

அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக உங்களை நியமிக்காவிட்டால், யாரை நியமிக்க நீங்கள் பரிந்துரைப்பீர்கள் என்பதுதான் தலைமையின் கேள்வி. ஈவிகேஎஸ் இளங்கோவன், ’எனக்கு மாநில தலைவர் பதவி வேண்டாம். என்னுடைய ஆப்ஷன் கார்த்தி சிதம்பரம்’ என்று சொல்லி இருக்கிறார். அதே நேரம் தங்கபாலுவிடம் கேட்கப்பட்டபோது, ’மாநிலத் தலைவர் பதவியை எனக்குக் கொடுங்கள் அல்லது கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் அகில இந்திய தலைமை கேட்டபோது அவர் தனக்கு தருமாறும் அப்படி இல்லை என்றால் கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்குமாறு கேட்டதாக சொல்கிறார்கள். மேலும் முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமியிடம் இதே கேள்வியை கேட்டபோது தனது மகன் விஷ்ணு பிரசாத் எம் பி க்கு மாநில தலைவர் பதவி தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர் மாற்று நபராக கார்த்தி சிதம்பரத்தை தான் குறிப்பிட்டு இருக்கிறார்.

இவ்வாறு தங்களுக்கோ அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கோ மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கேட்கும் முக்கிய தலைவர்கள் அனைவருமே அதற்கு மாற்றாக கார்த்தி சிதம்பரம் பெயரைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் ரேவந்த் ரெட்டி தலைமையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் உந்தப்பட்டதால் அங்கே ஆட்சி அமைத்தோம்.

அதேபோல தமிழ்நாட்டிலும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு காங்கிரஸ் கட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில் இருக்கும் ராகுல்… இந்த பின்னணியில் கார்த்தி சிதம்பரம் பெயரை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம்  முடிந்து வந்த பிறகு இந்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்ற மெசேஜை போஸ்ட் செய்தது வாட்ஸ் அப்.

இதைப் பார்த்த ஃபேஸ்புக் மெசஞ்சர், இதை தனது சுவரில் பகிர்ந்து ஒரு கருத்தை இட்டது.
“ இப்படித்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் தேர்தல் முடியும் வரை நான் தான் தலைவர் என்று தேசிய தலைமையே சொல்லிவிட்டது என்று தனது வட்டாரத்தில் கூறி வந்தார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக அதாவது 2019 பிப்ரவரியில்  கே.எஸ் அழகிரியை புதிய தலைவராக டெல்லி நியமித்தது. அதனால் அறிவிப்பு வரும் வரை காங்கிரஸ் கட்சியில் எதுவுமே நிச்சயம் இல்லை” என்று ஒரு கமெண்ட்டை போட்டு ஒரு ஸ்மைலியையும் கூடவே கோர்த்துவிட்டது.

மீண்டும் ஒரு மெசேஜை டைப் செய்த வாட்ஸ்அப் “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் ஏற்படலாம் என்கிற தகவல் அதன் கூட்டணி கட்சியான திமுகவிலும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. கார்த்தி சிதம்பரம் எதையுமே வெளிப்படையாக உடைத்து பேசக்கூடியவர்.

ஒருவேளை அவர் காங்கிரஸ் மாநிலத் தலைவரானால் திமுகவை விமர்சிப்பதற்கும் தயங்க மாட்டார். அதெல்லாம் அவர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் இப்போது இருக்கும் கூட்டணியில் எந்த பிரச்சனையும் சலசலப்பும் இல்லாமல் இப்படியே எடுத்துச் செல்வதுதான் ஸ்டாலினுடைய விருப்பம் என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜை மீண்டும் வந்து சொல்லிவிட்டு ஆப்லைன் போனது வாட்ஸ் அப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்கள் இதோ!

கேரள ஆளுநர் மீது தாக்குதல்?: எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் 7 பேர் கைது!

+1
1
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *