வைஃபை ஆன் செய்ததும் மதுரையில் அண்ணாமலை கூட்டம், அமைச்சர் பிடிஆர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் பற்றிய வீடியோக்கள் வந்து விழுந்தன..
“மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் விவாதப் பொருளாகி இருக்கிறார் அமைச்சர் பிடிஆர். கடந்த ஏப்ரல் கடைசி வாரங்களில் பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ தமிழ்நாட்டு அரசியலை கடுமையாக உலுக்கியது.
உதயநிதி, சபரீசன் ஆகியோர் சேர்ந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார்கள் என்றும் பாஜகவிடம் பிடித்த விஷயமே ஒருவருக்கு ஒரு பதவி தான் என்றும் பிடிஆர் அந்த ஆடியோவில் பேசியிருந்தார். இட்டுக்கட்டப்பட்டது என்று மறுப்பு தெரிவித்த பிடிஆர், அதை வெளியிட்டவர்கள் மீது இன்றுவரை எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் மே மாதம் அமைச்சரவை மாற்றப்பட்ட சூழலில் பிடிஆர் கவனித்து வந்த நிதித்துறை அவரிடம் இருந்து மாற்றப்பட்டு தங்கம் தென்னரசுவிடம் அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பிடிஆர் நியமிக்கப்பட்டார்.
இந்த பின்னணியில் நேற்று முன் தினம், மோடி அரசின் ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்காக மதுரை சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது…’முதலமைச்சரின் முதல் குடும்பத்தை பற்றி பிடிஆர் விமர்சித்ததால் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பிடிஆர் மீது எந்த தவறும் இல்லை. நிதித்துறை அமைச்சராக இருந்த அவரை துறைமாற்றம் செய்தது மதுரை மண்ணுக்கு திமுக செய்த மன்னிக்க முடியாத துரோகம்’ என்று மீண்டும் பிடிஆர் பிரச்சினையை பற்ற வைத்தார் அண்ணாமலை.
இதற்குப் பிறகு ஜூன் 1ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பிடிஆர் அண்ணாமலைக்கு பதில் அளிப்பது போல சில விளக்கங்களை கொடுத்திருந்தார்.
‘வெற்றி தோல்வி எதுவுமே நிரந்தரமானது அல்ல தற்காலிகமானது தான். நமக்கு ஏற்படும் நெருக்கடிகளை கடந்து வரும் மன தைரியம் தான் முக்கியம்’ என்றெல்லாம் பிடிஆர் அந்த விழாவிலே பேசியிருந்தார்.
ஏற்கனவே தனது துறை மாற்றப்பட்டு அமைச்சரவையில் தனக்குள்ள முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் பிடிஆர் வேதனையில் உள்ளதாகவும்… இதனால் அரசியலில் இருந்தே ஒதுங்கி ஐநா சபையில் நிதி நிர்வாக அதிகாரியாக பிடிஆர் பொறுப்பேற்க இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பினர்.
இது குறித்து பிடிஆருக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள். அப்போது பிடிஆர், ‘நிதித்துறை என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையில் இருந்து நான் மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதில் எனக்கு வருத்தம் தான். ஆனால் அதற்காக நான் இந்தியாவை விட்டு போகிறேன், அரசியலை விட்டு போகிறேன் என்றெல்லாம் தென் மாவட்ட திமுக அமைச்சர்கள் சிலரே கிளப்பி விட்டு வருகிறார்கள்.
நான் நிதி அமைச்சராக இருந்தபோது பல அமைச்சர்களின் கோப்புகளை திட்ட செலவுகளை குறைக்குமாறு வலியுறுத்தி திருப்பி அனுப்பி உள்ளேன். அந்தக் கோபத்தில் அவர்கள் இப்போது நான் அமைச்சரவையிலேயே இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார்கள்.
அதனால் திமுகவில் இருந்தே இதுபோல கிளப்பி விட்டு செய்திகளை வர வைக்கிறார்கள். எனக்கு எந்த ஆசையும் இல்லை. மனம் துன்பமடையும்போதெல்லாம் அப்பாவின் நினைவுதான் எனக்கு ஆறுதல் தருகிறது. என் அப்பா வகித்து வந்த அறநிலையத் துறை அமைச்சர் பதவி கொடுத்தாலே போதும். கோயில், குளங்களைச் சுற்றிக் கொண்டு நிம்மதியாக இருந்துவிடுவேன்’ என்று தன்னிடம் கேள்வி கேட்டவர்களிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார் அமைச்சர் பிடிஆர்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் என்று பிடிஆர் குறிப்பிடுவது மதுரை மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களை தான். மதுரையில் இப்போது பிடிஆருக்கு ஆதரவாக இருப்பது மேயர் மட்டும்தான். மற்ற பெரும்பான்மை திமுக கவுன்சிலர்களை அமைச்சர் மூர்த்தி தன் பக்கம் இழுத்து விட்டார்.
நிதி அமைச்சர் ஆக இருந்தபோது மதுரைக்கு வரவே நேரமில்லாமல் இருந்தார் பிடிஆர். ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஆன பிறகு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் மதுரையில் தான் இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் வீட்டு விசேஷங்களில் சென்று கலந்து கொள்கிறார்.
இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது தான் தனது மனக்குமுறலை தனக்கு நெருக்கமான நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிடிஆர்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது!
கொலை: இரண்டே நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த போலீஸ்!