வைஃபை ஆன் செய்ததும் மகாவிஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுத்தது பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ அரசுப் பள்ளிகளில் பேசச் சென்றபோது மாற்றுத் திறனாளிகளை கொச்சைப்படுத்தியதாக செப்டம்பர் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 10) மகாவிஷ்ணுவை 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.
இன்று அந்த மனு விசாரணைக்கு வந்ததால், காலை 11.30 வாக்கில் புழல் சிறையில் இருந்து மகாவிஷ்ணுவை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். இன்றைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு பிற்பகல் மகாவிஷ்ணு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அதுவரை போலீஸ் வேனிலேயே அமர்ந்திருந்தார் மகாவிஷ்ணு. பிற்பகலுக்கு மேல் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது மகாவிஷ்ணுவை விசாரிப்பதற்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
நீதிபதி, ‘அன்று கைது செய்தபோதே விசாரித்தீர்களே… பிறகு ஏன் 7 நாட்கள் வேண்டும்?’ என்று கேட்டார்.
அதற்கு போலீஸ் தரப்பில், ‘மகாவிஷ்ணுவை அரசுப் பள்ளிக்கு அனுப்பியது யார் என்று விசாரிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக அவரை பேசத் தூண்டியதில் பின்னணி ஏதும் இருக்கிறதா என விசாரிக்க வேண்டும். அவரது மற்ற நடவடிக்கைகள் பற்றியும் விசாரிக்க வேண்டும். அவரது வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றி விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவரது திருப்பூர் அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும். அதற்காகத்தான் ஏழு நாட்கள் கஸ்டடி வேண்டும்’ என்று கேட்டனர்.
ஆனால் நீதிபதி, ‘3 நாட்கள் கஸ்டடி தருகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று மகாவிஷ்ணுவும் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதன் பின் செப்டம்பர் 11 மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மகாவிஷ்ணு. சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அறையில் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.
போய் கொஞ்ச நேரத்தில், ‘எனக்கு ஒரு ஃபிரஷ் ஜூஸ் வேணும்’ என்று கேட்டுள்ளார் மகாவிஷ்ணு. உடனே அவருக்கு ஜூஸ் வாங்கிவந்து தந்தனர் போலீஸார். கொஞ்ச நேரம் கழித்து டீ சாப்பிட்டுள்ளார். வாட்டர் பாட்டிலும் அவருக்கென வாங்கிக் கொடுத்துள்ளனர் போலீசார்.
இரவு 8 மணி வாக்கில் ஹோட்டலில் இருந்து இட்லி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதை சாப்பிட்டிருக்கிறார் மகாவிஷ்ணு.
சைதாப்பேட்டை போலீஸ் நிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இன்று இரவு 8 மணி வரை மகாவிஷ்ணுவிடம் விசாரணை எதுவும் தொடங்கப்படவில்லை. இன்ஸ்பெக்டர் சேட்டு வேறு சில பணிகளுக்கு சென்றிருக்க்கிறார். அதனால் இன்று இரவோ அல்லது செப்டம்பர் 12 காலையோதான் கஸ்டடி விசாரணை தொடங்கும். போலீஸுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையில் இதுவரை சுமுகமாகவே எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சீக்கியர்கள் குறித்த பேச்சு… ராகுல் வீட்டை முற்றுகையிட்ட பாஜக
எங்கடா அந்த மஞ்ச சேல : அப்டேட் குமாரு