வைஃபை ஆன் செய்ததும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி பற்றிய விவாதங்களும், அதிமுகவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“அதிமுக-பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு அதிமுக தனி அணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் அதிமுக-பாஜக கூட்டணி நாடகம் என்றும், திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக -பாஜக கூட்டணி முறிந்த நிலையில் ஏற்கனவே அந்த அணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் தங்களின் ஆதரவு அதிமுகவுக்கா, பாஜகவுக்கா என்று இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுக கூட்டணியிலும் குழப்பமே நிலவி வருகிறது.
இதேநேரம் திமுக கூட்டணி தலைவர்கள் வரிசையாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள். கடந்த 25 ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஸ்டாலினை சந்தித்தார்.
27ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஸ்டாலினை சந்தித்தார். இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் ஸ்டாலினை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. காய்ச்சல் காரணமாக சிகிச்சையில் இருப்பதால் அவரால் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை.
ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில், கூட்டணிக் கட்சிகளின் உண்மை பலம்- தொகுதிப் பங்கீட்டைத் தொடங்கிய ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தனது கூட்டணி கட்சி தலைமைகளிடம் தாங்கள் போட்டியிட விரும்பும் அல்லது அந்த கட்சிகளுக்கு சாதகமான தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து அதன் விவரங்களை தருமாறு கேட்டிருந்தது என்பதை செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.
அதன்படியே திமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் பூத் கமிட்டி ரிப்போர்ட்டுகளை தயாரித்து வருகின்றன.
இதற்கிடையே 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிகபட்சம் 30 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். அடுத்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் அமையப்போகும் ஆட்சியில்… திமுக முக்கிய பங்காற்றும் என்பதால் 30 இடங்கள் நமக்கு அவசியம் தேவை என்கிறார்கள் அவர்கள்.
ஒருவேளை மீண்டும் மோடியே பிரதமராக வந்து விட்டாலும் திமுக 30 இடங்களோடு பலமாக இருந்தால் தான் இங்கே தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மாநில அரசை சுமுகமாக நடத்த முடியும் என்றும் அவர்கள் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த அடிப்படையிலோ என்னவோ கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளிடம் இந்த முறை ஒரு இடத்தில் போட்டியிட சம்மதமா என்று சில நாட்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருக்கிறது.
இந்த தகவலை அறிந்த திருமாவளவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். வைகோவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மதிமுக கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றது. இன்னொரு இடம் வைகோவுக்கு ராஜ்யசபா உறுப்பினராக வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் திமுக அதிகபட்சமாக போட்டியிட வேண்டிய நிலை இருப்பதாலும்… கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாலும் கூட்டணி கட்சிகளிடம் ஒரே ஒரு இடத்தில் போட்டியிட முடியுமா என்று ஆழம் பார்த்தது திமுக.
இந்த பின்னணியில்தான்… 27ஆம் தேதி ஸ்டாலினை சந்தித்த வைகோ வருகிற மக்களவைத் தேர்தலில் நான்கு இடங்கள் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லாமல் பூத் கமிட்டி ரிப்போர்ட்டுகள் தயாரித்து விட்டீர்களா என்று கேட்டுள்ளார்.
ஸ்டாலினை வைகோ சந்தித்த மறுநாள் 28ஆம் தேதி மதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில் ஈரோடு, திருச்சி, விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் அக்டோபர் ஏழு, எட்டு தேதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.
ஒரே ஒரு இடம் தான் என்று தெரிவிக்கப்பட்டதால் வைகோ, திருமாவளவன் போன்றோர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து திமுக தரப்பில் விசாரித்த போது… ‘ஆரம்ப கட்டத்துக்கு முந்தைய பூர்வாங்க பேச்சுகள் தான் இப்போது தொடங்கி இருக்கின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டதோ அத்தனை இடங்களில் மீண்டும் போட்டியிடுவது தான் சுமூகமாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து கருதி வருகிறார்.
அதே நேரம் கூட்டணி கட்சிகளோ கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தங்களுக்கு வேண்டிய திமுக நிர்வாகிகள் மூலம் ஸ்டாலினுக்கு தகவல்களை தெரிவித்தனர்.
உதாரணத்துக்கு வைகோ நான்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார். கடந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிட்டவர்கள் இப்போது நான்கு இடங்கள்தான் கேட்பார்கள். அது அவர்களது உரிமை.
ஆனால் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிற திமுக ஒரு சீட்டு என்பதில் ஆரம்பித்தால் தான் பேச்சுவார்த்தை நடந்து சரி பழையபடி இரண்டு இடங்களே போதும் என்ற புள்ளிக்கு கூட்டணி கட்சிகள் வருவார்கள். அதன் அடிப்படையிலான ஒரு உத்தி தான் ஒரே ஒரு இடத்தில் போட்டியிட முடியுமா என்று கேட்கப்பட்டதும்’ என்கிறார்கள் திமுக தரப்பில்.
அதிமுக இதுவரை எந்த கூட்டணியும் அமைக்கவில்லை. பாஜக தேசிய தலைமையின் கோபத்துக்கு ஆளானால் அதிமுகவே என்ன ஆகும் என்பதும் தெரியவில்லை. எனவே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுக பக்கம் போவதற்கு பெரிய அளவு வாய்ப்புகள் இல்லை. இதை பயன்படுத்தி திமுகவும் தனது கூட்டணி கட்சிகளிடம் சற்று கெடுபிடி காட்டுவது உண்மைதான்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து : ஒருவர் பலி!
நிக்கானின் புதிய மிரர்லெஸ் கேமரா : விலை இவ்வளவு தானா?