வைஃபை ஆன் செய்ததும் விழுப்புரத்தில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சின் வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“விழுப்புரத்தில் இன்று (அக்டோபர் 17) விழுப்புரம் தெற்கு மாவட்ட பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொள்ள கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பொன்முடி பேசிய பேச்சு தான் இன்று திமுகவின் வாட்ஸ்அப் குரூப்புகளில் துண்டு வீடியோக்களாக இறக்கை கட்டி பறந்து வருகிறது.
’வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். இப்போது நான், லட்சுமணன், செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி அன்னியூர் சிவா ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த முறை நாம் வெற்றி பெறாமல் விட்ட திண்டிவனம், மயிலம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
இந்த தொகுதிகளில் திமுக போட்டியிடலாம் அல்லது கூட்டணி கட்சிகளுக்கு கூட போகலாம். யார் வேட்பாளர் என்பதை தலைவர் முடிவு செய்வார், உதயா முடிவு செய்வார். யார் வேட்பாளராக நின்றாலும் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். ஏன் எனக்கே கூட வாய்ப்பு இல்லாமல் போகலாம். யார் நின்றாலும் வெற்றி பெற வைக்க நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்’ என்று பேசி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.
யார் வேட்பாளராக நின்றாலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது பொதுவாகவே கட்சி நிகழ்ச்சிகளில் அனைவரும் பேசக்கூடியது தான். ஆனால் அதையும் தாண்டி, ‘எனக்கே கூட இல்லாமல் போகலாம்’ என சீனியர் அமைச்சரான பொன்முடி பேசியதுதான் விழுப்புரம் திமுக தாண்டி தமிழகம் முழுதும் திமுகவில் விவாதமாகியிருக்கிறது.
பொன்முடியின் இந்த வார்த்தைகளுக்கு பின்னால் சில சம்பவங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.
சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் சீனியர் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் பொதுச்செயலாளர் துரைமுருகனின் வசம் இருக்கும் கனிம வளத்துறை உட்பட சீனியர்களிடமிருந்து சில முக்கியமான துறைகளை மாற்றம் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் உதயநிதி துணை முதலமைச்சர் என்பது பற்றிய கேள்விக்கு காட்பாடியில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் சடாரென எழுந்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவை முதல்வர் ஸ்டாலின் திரும்பத் திரும்ப போட்டு பார்த்தார்.
அதன் பிறகுதான்… உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிற நேரத்தில் சீனியர்களின் மீது கை வைக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தார் முதல்வர். அதே நேரம் சீனியர்கள் எதைச் செய்தாலும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன், அவர்கள் மீதும் என்னால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையிலேயே சீனியர் அமைச்சரான பொன்முடியின் உயர்கல்வி துறையை அவரிடம் இருந்து பறித்து அவருக்கு வனத்துறையை வழங்கினார். முதல் முறை அமைச்சரான கோவை செழியனுக்கு உயர் கல்வித் துறை வழங்கப்பட்டது. இதுவே பொன்முடிக்கு கடுமையான மெசேஜ்தான்.
இதுபற்றி ஏற்கனவே டிஜிட்டல் திண்ணை சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் – பொன்முடியோடு முடிந்த பின்னணி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் விரிவாக வெளியாகியிருக்கிறது.
ஸ்டாலின் தனது உயர் கல்வித் துறையைப் பறித்ததில் இருந்தே பொன்முடி வருத்தத்தில் தான் இருக்கிறார். மேலும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் தானும், இப்போது- தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய திருக்கோவலூர் தொகுதியில் தனது மகன் மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணியும் போட்டியிட வேண்டும் என பொன்முடி சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையறிந்து ஒரே நேரத்தில் அப்பாவுக்கும் சீட், பையனுக்கும் சீட்டா என்ற கேள்வி விழுப்புரம் திமுக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது. இது பொன்முடியின் காதுகளுக்கும் போனது. அப்போது, ‘திண்டுக்கல் மாவட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமிக்கும், அவரது மகனான மாவட்ட செயலாளர் ஐ பி செந்தில்குமாருக்கும் எம் எல் ஏ சீட் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் விழுப்புரத்திலும் துணைப் பொதுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் இருவருக்கும் வாய்ப்பு வழங்கலாமே..’ என்று பொன்முடி பதிலளித்ததாக அவரது வட்டாரத்தில் பேச்சுகள் உலவின. இந்த தகவல் தலைமைக்கும், உதயநிதிக்கும் தெரிந்து பொன்முடி மீது முதல்வர் ஸ்டாலின் மேலும் கோபமாக இருப்பதாக அறிவாலயத்திலேயே பேசப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் பொன்முடி இன்று நடந்த திமுக பாக உறுப்பினர்கள் கூட்டத்தில், ’எனக்கே கூட இல்லாமல் போகலாம்’ என்ற வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார். அதாவது வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிடும் வாய்ப்பு ஒருவேளை வழங்கப்படாவிட்டாலும் தனது மகன் மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணிக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பொன்முடியின் இப்போதைய முயற்சி. அதைத்தான் இன்றைய அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்னம்மா யோசிக்கிறாங்க: அப்டேட் குமாரு
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் : உயர் நீதிமன்றம்!