வைஃபை ஆன் செய்ததும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் பற்றிய ஆங்கில செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு முக்கியமான ஆதரவு கட்சிகளாக இருப்பவை பிகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம். இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று ஜூன் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
முக்கியமான காலகட்டத்தில் நடைபெற்று இருக்கிற இந்தக் கூட்டம், பிகார் மாநில அரசியலில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
வருகிற 2025-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது பிகார் மாநிலம். இப்போது பிகாரில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார்.
அவரது 12 எம்பி-க்கள் ஆதரவோடு டெல்லியில் மோடி பிரதமராக இருக்கிறார். இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கூடுவதற்கு முன்பாகவே பிகார் மாநில பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஒரு அதிரடியான கருத்தை வெளிப்படையாக எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.
நிதிஷ் குமார் தலைமையில் அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடப்பதற்கு இரண்டு நாள் முன்பாக பிகார் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வின் சவுபே, ‘வருகிற 2025 சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவின் தலைமையில் சந்திக்க வேண்டும். பாஜகவை சேர்ந்தவரே பிகாரின் முதல்வராக வேண்டும். யார் முதல்வர் என்பதை சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசிய தலைமை முடிவு செய்யட்டும். ஆனால், முதல்வர் பாஜகவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று பொதுவெளியில் கருத்து வெளியிட்டார்.
இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. பாஜக மீண்டும் தனது வேலையை ஆரம்பித்து விட்டது என்று ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் காரசாரமாக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தனர்.
அதாவது 2020 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து தான் நிதிஷ்குமார் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கூட இருந்தே பாஜக, ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு குழி பறித்தது என்று நிதிஷ்குமார் கட்சியினரே குற்றம் சாட்டினர்.
அந்த தேர்தலில் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நிதிஷ் குமாரோ 45 இடங்களில் தான் வெற்றி பெற்றார்.
ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட பல்வேறு தொகுதிகளில் பாஸ்வானின் கட்சியை தூண்டிவிட்டு தனியாக நிற்க வைத்தது பாஜக. இதன் காரணமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் தொகுதிகள் வெகுவாக குறைந்தன.
இத்தனையையும் பொறுத்துக் கொண்டு, 2020 முதல் 2022 வரை பாஜகவின் ஆதரவோடும் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், ஒரு கட்டத்தில் எனது கட்சியை உடைக்க முயற்சி செய்கிறது பாஜக என்று வெளிப்படையாக குற்றம் சாட்டி அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
உடனடியாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவோடு இணைந்து மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
அதன்பிறகு மீண்டும் 2024 ஜனவரி மாதம் அதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக பாஜக அணிக்கு திரும்பி ஒன்பதாவது முறையாக பிகார் முதலமைச்சர் ஆனார்.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் தொடர்வதை இரண்டு கட்சியினருமே விரும்பவில்லை என்பதுதான் பிகார் அரசியல் நிலவரமாக இருக்கிறது.
இந்த சூழலில் தான் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர் ஆன அஸ்வின் சவுபே வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் என்று நிதிஷ் குமாருக்கு எதிராக வெளிப்படையாக கருத்து வெளியிட்டார். இதனை பாஜக மாநில தலைமை கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. இந்த நிலையில் தான் டெல்லியில் கூடிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அதாவது பிகாரின் நீண்ட கால கோரிக்கையான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும்,. பிகாருக்கு சிறப்புப் பொருளாதார நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், மூன்றாவது தீர்மானமாக அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோரின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத்தின் முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிகார் அரசின் நடவடிக்கையை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்துதான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல… பிகாரில் 2025 சட்டமன்றத் தேர்தலை நிதிஷ் குமார் தலைமையில் சந்திப்பது என்றும் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிதிஷ்குமார் தலைமையில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களுமே பிகாருக்கான முக்கியமான தீர்மானங்கள். இவற்றை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடிக்கு பெரும் சவால்கள் இருக்கின்றன.
ஏற்கனவே இதேபோன்ற கோரிக்கையை ஆந்திர முதல்வரும் கூட்டணியின் இன்னொரு முக்கிய தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிகாருக்கு செய்தால் ஆந்திராவுக்கு செய்யவில்லையே என்ற கேள்வி வரும்.
இந்த நிலையில், ‘வருகிற 2025 சட்டமன்றத் தேர்தலை பாஜகவோடு சேர்ந்து சந்திப்பதில் நிதிஷ்குமாருக்கு தயக்கம் ஏற்பட்டிருக்கிறது. கூட்டணியை விட்டு விலகும் நோக்கத்தோடுதான் மோடியால் நிறைவேற்ற முடியாத இந்த கோரிக்கைகளை டெல்லியில் தேசிய செயற்குழுவை கூட்டி நிறைவேற்றி மோடிக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் நிதிஷ்குமார். ஜூன் 9 இல் மோடி பிரதமராக பதவியேற்றார். ஜூன் 29 இல் அதாவது இருபது நாட்களிலேயே மோடிக்கு நெருக்கடியைத் தொடங்கிவிட்டார் நிதிஷ்குமார்’ என்கிறார்கள் பிகார் நிலவரத்தை கவனிக்கும் டெல்லி பத்திரிகையாளர்கள்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய இரு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுமே இரு கட்சிகளும் கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை. நிதிஷ்குமாரின் இந்த முக்கியமான தீர்மானங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றினால் அந்த புகழை ஏன் நிதிஷுக்கு தரவேண்டும், பாஜக தலைமையிலேயே கூட்டணி அமைத்து மிகப்பெரிய வெற்றி பெறலாமே என்று பிகார் பாஜக நிர்வாகிகள் டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
பிகார் அரசியலில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் இதன் தாக்கம் வெகுவாக இருக்கும். மோடி அரசுக்கு முக்கியமான ஆதரவு கட்சிகளாக ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசமும் இருக்கும் நிலையில்… ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த நகர்வை இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்வமாக கவனித்து வருகின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து … நிதிஷ் குமார் தீர்மானம்!
“மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா பயனற்றது” – காரணம் சொல்லும் சசிகலா
நிதிஷ்பாய், உங்க எம்பிக்களை பத்திரமா பாத்துக்குங்க, திடீர்னு மஹாராஷ்ட்ரா மாதிரி எதும் நடந்துறப் போகுது…