வைஃபை ஆன் செய்ததும் டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த என்டிஏ கூட்ட லைவ் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத்தொடங்கியது. “ நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 மற்றும் கூட்டணி கட்சியினர் 50-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சேர்ந்து பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கூட்டம் இன்று ஜூன் 7 நடைபெற்றது.
இதில் என்டிஏ தலைவராக அதாவது பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அவர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஜூன் 9 மாலை 7.15 மணிக்கு மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.
இந்த பரபரப்புக்கிடையே என்டிஏ கூட்டத்தில் நடந்த சில சம்பவங்கள் பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய மோடி அமைச்சரவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருக்கிற மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியின் எம்பியான நிதின் கட்கரியை மையமாக வைத்து வெளியான வீடியோக்கள் தான் பாஜகவுக்குள் உட்கட்சி பூசல் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது முதல் வரிசையில் மத்திய அமைச்சர்கள் சகிதம் அமர்ந்திருந்த நிதின் கட்கரி எழுந்து நின்று கைதட்டாமல் அமர்ந்தே இருந்தார் என்பது தான் அந்த வீடியோ காட்சி.
இதை வைத்துக்கொண்டு பாஜகவில் ஆர்எஸ்எஸ் ஆதரவோடு நிதின் கட்கரி இருக்கிறார் என்றும் அவர் மோடி, அமித்ஷா ஆதிக்கத்திற்கு எதிராக இருப்பதற்கான வெளிப்பாடு தான் இந்த ஓரிரு நிமிட காட்சிகள் என்றும் அரசியல் வட்டாரங்கள் சூடாகியுள்ளன. அதே நேரம் இந்த கூட்டத்தில் பேசிய நிதின் கட்கரி, நரேந்திர மோடியால் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பெருமை என்ற ரீதியில் புகழ்ந்து பேசினார்.
ஆனால், சபை நாகரீகம் கருதி இப்படி நிதின் கட்கரி பேசினார் என்று அவரது முகம் மற்றும் உடல் மொழி ஆகியவை அவ்வாறு பேசவில்லை என்கிறார்கள் நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் சார்ந்த எம்.பிக்கள்.
இதற்கு ஒரு பின்னணியையும் சொல்கிறார்கள். நிதின் கட்கரி ஆர்எஸ்எஸின் செல்லப்பிள்ளை. ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரின் எம்பியாக மூன்றாவது முறை இப்போது வெற்றி பெற்றிருப்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு அள்ளி அள்ளி கொடுக்கும் தொழில் அதிபரும் கூட இவர்.
தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காது என்று ஆர்எஸ்எஸ் கணித்தது. அந்த அடிப்படையில் ஒருவேளை பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், பிரதமர் பதவியை ஏற்க மோடியே விரும்ப மாட்டார். அப்படியே அவர் முன்வந்தாலும் அதை ஏற்காமல் வேறு ஒருவரை பிரதமராக முன்னிருத்த வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸின் செயல்திட்டம். அப்படி ஆர்எஸ்எஸின் பிரதமர் தேர்வு வரிசையில் நிதின் கட்கரி கர்நாடகாவின் தார்வார்ட் எம்பி பிரகலாத் ஜோஷி ஆகியோர் இருந்தனர்.
ஆர்எஸ்எஸின் இந்த செயல்திட்டம் குறித்து முன்கூட்டியே உணர்ந்த மோடி, அமித்ஷா தரப்பினர் கடந்த தேர்தலில் கட்கரிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூட மறுத்தனர். ஆனால், ஆர்எஸ்எஸின் செல்வாக்கோடு அந்த வாய்ப்பை பெற்றார் கட்கரி. அதுமட்டுமல்ல மகாராஷ்டிராவில் பாஜக சுவரொட்டிகளில் கட்கரியின் படங்கள் இடம்பெறவில்லை. இதையெல்லாம் தாண்டி அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
ஆர்எஸ்எஸ் எதிர்பார்த்தபடியே மோடியை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்ட நிலையில், 240 இடங்கள் தான் கிடைத்தன. இதையடுத்து ஆர்எஸ்எஸோடு மிக நெருக்கமான உறவுகொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ‘பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், மோடி மீண்டும் பிரதமர் பதவி ஏற்க கூடாது. அவராகவே பிரதமர் பதவி ரேஸில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை காத்திருக்காமல் மோடி ஒதுங்கி கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், பாஜகவிலேயே மோடி அல்லாத இன்னொருவர் பிரதமராக பதவியேற்கும் பட்சத்தில் உங்கள் ஆதரவு வேண்டும் என மம்தா பானர்ஜியிடமும் சுப்பிரமணியன் சுவாமி பேசி வந்தார். இப்போதைய பாஜக எம்பிக்களில் சுமார் 40 பேருக்கு மேல் தீவிர ஆர்எஸ்எஸ்காரர்கள். அவர்கள் மத்தியிலும் மோடிக்கு மாற்றாக யார் என்ற விவாதம் எழுந்தது.
இந்தநிலையில், மோடிக்கு எதிராக நடக்கும் முயற்சிகளை அறிந்த அமித்ஷா, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளிடம் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள் மீதே பல வில்லங்கமான புகார்கள் இருக்கின்றன. அதெல்லாம் வெளியே வந்தால் அசிங்கமாகி விடும் என்று எச்சரிக்கை தொனியில் பேசி மோடிக்கு எதிரான ஆர்எஸ்எஸின் ஆபரேஷனை முறியடித்தார்.
இவ்வளவுக்கும் பிறகுதான் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் தான் நிதின் கட்கரி மோடிக்காக எழுந்து நிற்காமல் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் விரைவில் பூதாகரமாக ல வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான் முதல்வன்… ரயில்வே, வங்கி பணிகளுக்கு இலவச பயிற்சி… முழு விவரம் இதோ!
நரேந்திர மோடிக்கு தார்மீக தோல்வி: ப.சிதம்பரம் விளாசல்!
Comments are closed.