வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் பற்றி சில சோர்ஸ்கள் அனுப்பிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”கடந்த ஜனவரி 11ஆம் தேதி அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘பொங்கலுக்கு பிறகு 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இப்போதே பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் தங்களது மாவட்டங்களில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்குமாறு என்னிடம் கேட்கிறார்கள். நான் தம்பி வேலுமணியின் மாவட்டத்திலிருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகிறேன்’ என்று பேசியிருந்தார்.
இது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஜனவரி 12ஆம் தேதி தகவலாக வெளியானது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் கோவையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, ‘வருகிற ஜனவரி 31ஆம் தேதி நம்முடைய கோவை மாவட்டத்திலிருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். அன்றைய தினம் அனைவரும் திரண்டு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்..
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண ஏற்பாடுகள் அதிமுகவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்னொரு முக்கியமான விசேஷம் என்னவென்றால் எடப்பாடி சுற்றுப்பயணம் தொடங்குகிற தினத்தன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைகிறார் என்பதுதான்.

கடந்த சில மாதங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு மிக நெருக்கமாக இருந்தபடியே திமுகவை குறிப்பாக துணை முதல்வர் உதயநிதியை கடுமையாக எதிர்த்து வந்தார் ஆதவ்.
டிசம்பர் 6 ஆம் தேதி விஜய்யோடு அவர் பங்கேற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், 2026 இல் மன்னராட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும், பிறப்பால் இனி யாரும் முதலமைச்சர் ஆக கூடாது என்றும் திமுகவுக்கு எதிராக கடுமையாக பேசினார். இது கூட்டணியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்த, ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்தார் திருமா. அடுத்த சில நாட்களில் அதாவது கடந்த டிசம்பர் 15ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுவதுமாக விலகினார் ஆதவ்.
அப்போதே அவர் விஜய் கட்சியில் சேரப் போகிறாரா அதிமுகவில் சேரப் போகிறாரா என்ற யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை அதிமுகவுக்கு கொண்டு வரும் வேலையில் இறங்கினார் ஆதவ் அர்ஜுனா. ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் உத்தி வகுக்கும் பணியாற்றிய ராபின் ஷர்மா தற்போது வரும் சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஏற்கனவே பிரசாந்த் கிஷோரோடு தனக்கு இருக்கும் அறிமுகத்தின் அடிப்படையில் அவரை அதிமுகவுக்கு பணியாற்ற முயற்சி மேற்கொண்டு வந்தார் ஆதவ் அர்ஜுனா.
தற்போது ஆதவ் அதிமுகவில் இணைவதும், அவர் மூலமாக பிரசாந்த் கிஷோர் அதிமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றுவதும் முடிவாகிவிட்டது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். இந்தப் பணிக்காக பிரசாந்த் கிஷோருக்கு 240 கோடி ரூபாய் பேசப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற தொகுதி சுற்றுப்பயணம் தொடங்குகிற அன்று ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் முறைப்படி இணைகிறார். அவருக்கு அதிமுகவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளர் பதவி வழங்கப்படும் என்கிறார்கள்.
திமுகவில் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு… அதிமுகவில் இந்த பொறுப்பை ஆதவ் அர்ஜுனா விரும்பிக் கேட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் முறைப்படி சேர்ந்த பிறகு திமுகவுக்கு எதிராகவும் குறிப்பாக உதயநிதிக்கு எதிராகவும் அவரது கூர்மையான விமர்சனங்கள் மீண்டும் தொடங்கும் என்கிறார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்றத் தொகுதி சுற்றுப்பயணத்திலும் ஆதவ் அர்ஜுனாவின் பங்கு கணிசமாக இருக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.