digital thinnai modi tamilnadu visit third front alliance
வைஃபை ஆன் செய்ததும் திருச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட அரசு விழா வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“திருச்சி அரசு விழாவில் தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடுமையான இயற்கை பேரிடராக கருதி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
அவருக்குப் பின்நிறைவுரையாற்றிய பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரலாறு காணாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு எதையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை நிர்வாக ரீதியாக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்ற பிறகு விமான நிலையத்தில் லைன் அப் என்ற வகையில் வரிசையாக அரசியல் பிரமுகர்கள் நின்று வரவேற்றனர்.
அவர்களில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் இருந்தார்கள்.
ஏற்கனவே அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது மேற்குறிப்பிட்ட கட்சிகளும் இருந்தன. 2023 செப்டம்பரில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது.
அதன் பின் அதிமுக தலைமையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்றும், பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையின் போது ஏற்கனவே தேஜகூவில் இருந்த வாசன், ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் ஆகியோர் இன்று மோடியை வரவேற்றிருக்கிறார்கள்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்சும் மோடியை வரவேற்றுள்ளார். அப்படியென்றால் இவர்களில் எடப்பாடி தலைமையிலான அணிக்கு யாரும் செல்வார்களா? அல்லது பாஜக தலைமையிலான மூன்றாவது அணியில் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடியை ஓபிஎஸ் உள்ளிட்ட இந்த தலைவர்கள் வரவேற்ற நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விமான நிலையத்துக்கு வர வைக்க சில முயற்சிகள் நடைபெற்றதாக அதிமுக தரப்பில் சொல்கிறார்கள்.
இப்போதைய நிலையில் திமுகவுக்கான எதிர்ப்பை ஒருங்கிணைத்து தேர்தல் களத்தில் அதிமுகவும் பாஜகவும் இணைந்தால் வெற்றியை அறுவடை செய்யலாம் என்ற கருத்து எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ பாஜக கூட்டணி இல்லை என்ற முடிவில் இருந்து பின் வாங்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவர் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தமிழகம், புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 30 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள் அதிமுக தரப்பில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தளபதி நடிக்கும் ஹாலிவுட் படம்: அப்டேட் குமாரு
வடமாநிலங்களில் லாரி ஸ்டிரைக் : உரிமையாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!
digital thinnai modi tamilnadu visit third front alliance