டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக  மோடியின் கே.கே. பிளான்… அதிர்ச்சியில் ஆர்.என்.ரவி

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் நாடாளுமன்ற  நேரலை லிங்க் இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு சில எம்.பி.க்களிடம் சில உரையாடல்களை நிகழ்த்திவிட்டு, வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கடந்த  ஜுலை 27 ஆம் தேதி புதிய ஆளுநர்கள் பட்டியலை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படவில்லை.

மற்ற 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். தனது பதவி நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைத்ததாக  தகவல்கள் வந்தன. ஆயினும் அவரால் அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க முடியவில்லை.

இந்த நிலையில் புதிதாக  அறிவிக்கப்பட்ட ஆளுநர் நியமனங்களை வைத்து அடுத்தகட்ட அரசியல் பரபரப்பு டெல்லியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரை குஜராத் முதல்வர் அலுவலகத்தில் முதல்வரின் தலைமை முதன்மைச் செயலாளாராக இருந்து வந்த ஐ.ஏ.எஸ், அதிகாரி கே.கைலாசநாதன் அப்பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் இந்த கே.கே. என்கிற கைலாசநாதன்.

கேரளாவைச் சேர்ந்தவரான கே.கே. தமிழ்நாட்டின் ஊட்டியில் வளர்ந்தவர். சென்னை பல்கலைக் கழகத்தில் படித்தவர். தமிழ்நாட்டில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர். நன்றாக தமிழ் அறிந்தவர். அதன் பின் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி 1979 இல் குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி பெற்றார்.

2006 இல் மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது இவரைப் பற்றி அறிந்து முதல்வர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக சேர்த்துக்கொண்டார்.  2013ஆம் ஆண்டு குஜராத் முதல்வருக்கு தலைமை முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் அமர்த்தப்பட்டார் கே.கே.

2006 இல் மோடியின் முதல்வர் அலுவலகத்தில் நுழைந்த கே.கே. 18 வருடங்களாக குஜராத் முதல்வர் அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றி  கடந்த ஜூன் 30 இல் தானாகவே முன் வந்து விலகினார். அரசின் ஓய்வு பெறும் வயதை  12 வருடங்களுக்கு முன்பே  கடந்த கே.கே. குஜராத் அரசால் தொடர்ந்து பணி நீட்டிப்பு பெற்று வந்தார். இப்போது அவருக்கு வயது 71.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது கனவுத் திட்டங்களை நிறைவேற்ற உதவியர் கே.கே. அதன் பின் மோடி பிரதமரான பிறகும் கூட மோடியின் கண்ணும் காதுமாக குஜராத் முதல்வர் அலுவலகத்திலேயே இருந்தவர்.

மோடிக்கு பின் குஜராத் முதல்வர்களாக வந்த அனந்தி பென் பட்டேல், ரூபானி போன்றவர்களுக்கும் கே.கே.வுக்கும் கருத்துவேறுபாடுகள் வந்தபோதும், இவர் மோடியின் ஆள் என்பதால் இவரை வெளிப்படையாக எதிர்க்க அவர்கள் துணிந்ததில்லை.

இப்படிப்பட்ட மோடியின் கண்ணும் காதுமான அதிகாரி கே.கே.வுக்கு தேசிய அளவில் மிக உயர்ந்த பொறுப்பு அளிக்கப்படும் என்றுதான் அதிகாரிகள் வட்டாரத்தில் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவருக்கு சிறு யூனியன் பிரதேசமான புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது அதிகாரிகள் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவாதங்களில்தான்,   மோடியின்  கே.கே. பிளான்  என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

‘தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவிக்கு பதிலாக வேறு ஒரு ஆளுநரை நியமிக்க முதலில் திட்டம் இருந்தது. ஆனால் ரவியின் லாபிகள் காரணமாக அது சற்று தள்ளிப் போகிறது. நிர்வாக விஷயங்களில் மட்டுமல்ல அரசியல் விஷயங்களிலும் கே.கே. கூர்மையானவர்.  குஜராத் அரசில் மட்டுமல்ல அரசியலிலும் மோடிக்காக அவர் பல வேலைகளை செய்துள்ளார். அந்த வகையில் நன்றாக தமிழ் தெரிந்த கே.கே.வைதான் தமிழ்நாடு ஆளுநராக  ஆக்க மோடி விரும்பினார்.

ஆனால் அதற்கு முன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக  சிறிது காலம் பணியாற்றி அங்கிருந்தபடியே தமிழ்நாட்டின் அரசியலை ஸ்டடி செய்யுமாறு மோடி கே.கே.வை அறிவுறுத்தியுள்ளார்.  2026 தேர்தலுக்குள் கே.கே. தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டால் கூட ஆச்சரியமில்லை ’என்று டெல்லி தரப்பில் கூறுகிறார்கள். இது ஆர்.என்.ரவிக்கும் அதிர்ச்சியளித்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பணிகளைத் தொடங்கிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்  221 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் திமுக கூட்டணி தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது. இந்நிலையில்… மோடியும் தமிழ்நாட்டில் கே.கே. மூலமாக சில ராஜ தந்திரப் பணிகளை துவங்கிவிட்டார் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

 

தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி எழைகளிடம் அபராதம் வசூலிப்பதா?: ராகுல் காட்டம்!

வயநாடு நிலச்சரிவு : நீலகிரியை சேர்ந்தவர் பலி!

 

+1
0
+1
12
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *