டிஜிட்டல் திண்ணை: சென்னை மாநகராட்சியை கலைக்கப் போறேன்…வெடித்துச் சீறிய ஸ்டாலின்… அலறிய மேயர்… பீதியில் கவுன்சிலர்கள்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் சென்னை மாநகராட்சி கூட்டம் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. digital thinnai stalin warned

அதிகாரிகளை பந்தாடிய கவுன்சிலர்கள்…

 “ஜனவரி 30 ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையான கோபத்தில் தள்ளியதாகவும், அதனால் அவர் மேயருக்கு கடும் எச்சரிக்கை விட்டிருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.

ஜனவரி 30 ஆம் தேதி மாமன்றம் கூடிய நிலையில் திமுகவின் கவுன்சிலர்கள், நிலைக்குழு தலைவர்கள், துணை மேயர், மேயர் என அனைத்து நிலைகளில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளுக்கு எதிராக புகார் தொனியிலேயே பேசியிருக்கிறார்கள்.

104 ஆவது வார்டு  கவுன்சிலர் டி.வி. செம்மொழி பேசுகையில்,  “நிலைக் குழுக் கூட்டங்களில் சில மாதங்களாக அதிகாரிகள் கலந்துகொள்வதே இல்லை. கூட்டத்தில் சில நேரம் அதிகாரிகள் வந்தாலும் கமிஷனர் கூப்பிடுகிறார் என்று கொஞ்ச நேரத்திலேயே கிளம்பிவிடுகிறார்கள். அதிகாரிகள் இல்லாமல் நிலைக்குழு கூட்டம் நடத்தி என்ன பயன்?” என்று கேட்டார்.

பூங்காக்கள் பராமரிப்பில் ஏன் இந்த நிலை?

துணை மேயர் எம்.மகேஷ் குமார் பேசும்போது, ‘நிலைக் குழு கூட்டங்களின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பும் குறைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். அதிகாரிகள் இல்லாவிட்டால் கூட்டங்களை நிறுத்த வேண்டும்’  என்று  பரிந்துரைத்தார்.

கல்வி நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன் பேசுகையில், “சென்னை மாநகராட்சியின் பூங்காக்கள், பிளேஃபீல்டு எனப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானங்கள் கல்வி நிலைக்குழுவின் பொறுப்பில் இருந்தன. ஆனால், அது இப்போது பணிகள் நிலைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதுபற்றி நிலைக்குழுவினரின் ஆலோசனைகளையே பெறவில்லை’ என்று குற்றம் சாட்டினார். digital thinnai stalin warned

அப்போது பணிகள் நிலைக்குழு தலைவரான சிற்றரசு பேசுகையில்,  “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ், எந்த நிலைக்குழுவிற்கும் எந்த உரிமையும் இல்லை. பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தொடர்பான எந்த கோப்புகளும் அதிகாரிகளால் பணிகள் நிலைக்குழுவுக்கு  வழங்கப்படவில்லை ”என்று கூறினார்.

இதற்கு ஆணையர் குமரகுருபன், “பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பல பராமரிப்பு பணிகள் உள்ளன. கல்வித் துறை பணிகளை கையாள்வது கடினமாக இருந்ததால், அந்த பணிகள் நிலைக்குழு அதிகாரியிடம்  ஒப்படைக்கப்பட்டது.  இதில்  தனிப்பட்ட நோக்கம்  எதுவும் இல்லை என்று பதில் கூறினார்.

இனி இதுபோல நடக்கக் கூடாது…மேயர் பிரியா

மேயர் பிரியா பேசும்போது, ‘இந்த மாமன்றத்தில் தற்போதைய முதல்வர், தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் மேயர்களாக இருந்தார்கள். அவர்கள் மேயர் பதவி வகித்தபோது அதிகாரிகள் நிலைக்குழு கூட்டங்களில் தவறாது கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மாநகராட்சி கமிஷனர்கள்  கவுன்சிலர்களுக்கு நேரம் ஒதுக்கி சந்தித்திருக்கிறார்கள்.  ஆனால், இப்போது அதிகாரிகளின் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது. அவர்கள் இதுபோல் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார்.

மாமன்றக் கூட்டத்தில் அதிகாரிகளை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பந்தாடிய விவகாரம் உடனடியாக முதல்வருக்கு ரிப்போர்ட் ஆக அனுப்பப்பட்டது. இதனால் முதல்வர் ஸ்டாலின்  கடும் கோபம் அடைந்திருக்கிறார்.

ஸ்டாலினை கோபப்படுத்திய ரிப்போர்ட்!

அவரது கோபத்துக்கு இந்த சம்பவத்தோடு இன்னொரு பின்னணியும் இருக்கிறது. “சென்னை மாநகரில் இருக்கும் சுமார் 800 பூங்காக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று கடந்த நவம்பர் மாதம் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

அப்போதே முதல்வர் இதுகுறித்து தலைமைச் செயலாளார், தனது செயலாளர்கள் ஆகியோரிடம் விசாரித்தார்.  மேலும், ‘சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனம் பராமரிக்கும் பூங்காவெல்லாம் நல்லா இருக்கு. ஆனா கார்ப்பரேஷன் பூங்காக்கள் ஏன் இப்படி இருக்கின்றன? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர். அப்போது முதல்வருக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பப்பட்டது.

மிடில் கிளாஸ் அதிருப்தி!

அதில், ‘சென்னை மாநகரை பொறுத்தவரை அடித்தட்டு மக்களை திருப்தியடைய வைப்பதற்கு குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் முக்கியமானவை. அதேபோல மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் பெருமளவில் பூங்காக்களை பயன்படுத்துகிறார்கள். பூங்காக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதால் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் அரசின் மீது அதிருப்தி கொள்ள வாய்ப்புள்ளது.  அதை களைவதற்கு  பூங்காக்களை பராமரிக்கும் பொறுப்பை பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாம்’ என்று பரிந்துரைத்தனர்.

அதன் பேரில் ஒன் சிட்டி-ஒன் கான்ட்ராக்ட் என்ற திட்டமும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் கவுன்சிலர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். பூங்காக்கள் பராமரிப்பை பெரு நிறுவனங்களிடம் கொடுத்தால், மக்களின் குறைகளை அவர்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியாது என்று கவுன்சிலர்கள் கூறினர். ஆனால், இதை அதிகாரிகள் ஏற்கவில்லை. அதன் பின் சென்னையை மூன்றாக பிரித்து பூங்காக்களை பராமரிக்க டெண்டர் விடுவது என முடிவு செய்யப்பட்டது. அது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், பூங்காக்கள் விஷயத்தில் திமுகவின் பல கவுன்சிலர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே இதுபோல சில முக்கியமான வேலைகள் வெளியாட்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.  

அதனால் கவுன்சிலர்களுக்கு துளியும் பலன் இல்லை. அதேபோல பூங்கா- விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பும் பெரு நிறுவனங்களுக்கு சென்றுவிடக் கூடாது என்று கவுன்சிலர்கள் கருதுகின்றனர்.

இந்த சூழலில்தான் இந்த கோபத்தை எல்லாம் அதிகாரிகளுக்கு எதிராக மாமன்றத்தில் கொட்டியிருக்கிறார்கள். அமைச்சர் சேகர்பாபுவும் கூட மாநகராட்சி கமிஷனர் மீது வருத்தத்தில் இருக்கிறார் என்கிறார்கள் சில கவுன்சிலர்களே.

எச்சரித்த முதல்வர்…

நேற்று மாநகராட்சியில் நடந்தது குறித்து முதல்வருக்கு ரிப்போர்ட்  சென்றதும் இன்று மேயர் உள்ளிட்டோரை கடுமையாக முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார் என்கிறார்கள் மாநகராட்சி வட்டாரங்களில்.

அதாவது, ‘பூங்காக்கள் பராமரிப்பின்றி இருப்பதால் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் மக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதை போக்குவதற்காக பூங்காக்கள் பராமரிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்களிடம் ஆலோசித்து அதன்படியே மாநகராட்சி ஆணையருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படிதான் கமிஷனர் குமரகுருபன் செயல்பட்டு வருகிறார்.

ஆனால், கவுன்சிலர்கள் முதல் மேயர் வரை மாநகராட்சி கமிஷனரை பந்தாடியது முதல்வரை கோபப்படுத்தியது. அதனால் முதல்வரே மேயரிடம் பேசி, ‘நான் அதிகாரிகளிடம் சொல்லி நல்லது பண்ணச் சொன்னால், அதை கவுன்சிலர்கள் தடுக்கிறார்களா? என்ன நடக்குது?  இப்படியே போனால் மாநகராட்சியை கலைக்கப்போறேன்’ என்று எச்சரித்துள்ளார்.

மேலும், கமிஷனர் குமரகுருபனைத் தொடர்புகொண்டு பேசி தொடர்ந்து செயல்பட ஊக்குவித்திருக்கிறார்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். digital thinnai stalin warned

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share