வைஃபை ஆன் செய்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட கொளத்தூர் விழாவின் வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் அதன் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சியை மிக கடுமையாக விமர்சித்தார். பாஜகவை தனது கொள்கை எதிரி என்றும் திமுகவை அரசியல் எதிரி என்றும் அறிவித்தார் விஜய்.
இதையடுத்து விஜய் பாஜகவின் சி டீம் என்று அமைச்சர் ரகுபதியும் மேலும் சில அமைச்சர்களும் விமர்சிக்க தொடங்கினார்கள். உடனடியாக விஜய் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்களுக்கு திமுக தலைமை உத்தரவு பிறப்பித்தது.
விஜய் மாநாட்டுக்கு மறுநாள், அக்டோபர் 28ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசினார். ‘புதிதாக மாநாடு நடத்தியிருப்பவர்களை பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். யார் புதிதாக வந்தாலும் திமுகவை தான் விமர்சிப்பார்கள். இது ஒன்றும் புதிதல்ல. நீங்கள் உங்களுடைய வேலையை சரியாக பாருங்கள் அது போதும். ஏதேனும் பதில் கூற வேண்டும் என்றால் அதை தலைமை கழகம் கூறும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதன் பிறகு விஜய்யை பற்றி திமுக தரப்பிலிருந்து யாரும் விமர்சிக்கவில்லை. திமுக ஆதரவு போக்கு கொண்ட பத்திரிக்கையாளர்கள் யூட்யூபர்கள் கூட விஜய் பற்றி பேட்டிகளில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார்கள்.
இந்த பின்னணியில் தான் இன்று நவம்பர் 4 ஆம் தேதி சென்னை கொளத்தூரில் நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘வர்றவன் எல்லாம் புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுகவை அழிக்கணும், ஒழிக்கணும் என்ற போக்கில் இருக்காங்க. அவர்களுக்கு பதில் சொல்ல நமக்கு நேரமில்லை. மக்கள் பணி செய்யவே நேரம் போதாமல் இருக்கிறது. வாழ்க வசவாளர்கள் என்ற அண்ணாவின் வார்த்தையைத்தான் இப்போது நாம் சொல்ல முடியும்’ என்று விமர்சித்தார்.
விஜய்யின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் புது கட்சி தொடங்குறவன் எல்லாம் என்று ‘ன்’ விகுதி போட்டு விஜயை கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.
திமுக தரப்பிலிருந்து தான் விமர்சிக்கப்பட வேண்டும் என்று தான் விஜய் விரும்புகிறார். இதை உணர்ந்த திமுக தலைமை, விஜயை விமர்சித்தால் அவருக்கு திமுக மதிப்பளிக்கிறது என்றும், அவரை ஒரு பொருட்டாக கருதுகிறது என்றும் தோற்றம் உருவாக்கப்படும். இதை தனக்கு அட்வான்ட்டேஜ் ஆக விஜய் எடுத்துக் கொள்வார் என்று கருதி அவரைப் பற்றிய விமர்சனங்களை தொடர்ந்து தவிர்த்தது.
இதற்கிடையில் நவம்பர் 3 ஆம் தேதி நடந்த தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் தான் இன்று நடந்த தனது தொகுதி விழாவில் விஜய் பெயர் குறிப்பிடாமல் அதே நேரம் திமுகவின் நிலையையும் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
இப்படி ஒரு பக்கம் விஜய் பற்றி திமுக அலட்டிக் கொள்ளாதது போல காட்டிக் கொண்டாலும்… இன்னொரு பக்கம் விஜயை நோக்கி இளைஞர்கள்- பெண்கள் வாக்குகள் எந்த அளவுக்கு செல்ல முடியும், அது சாத்தியமா என்ற ஆய்வையும் அது தொடர்பான செயல் திட்டங்களையும் திமுக உள்ளுக்குள் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுதும் அமைக்கப்பட்டிருக்கும் திமுகவின் பூத் கமிட்டிகளில், இளைஞர் அணியினர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் அவ்வாறு இதுவரை இடம்பெறவில்லை எனில் இளைஞர் அணியினரின் பெயர்களை சேர்த்து பூத் கமிட்டிகளில் உள்ள இளைஞர் அணியினரின் பட்டியலை அன்பகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வரும் நிலையில்… வரும் நவம்பர் 27ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முழுக்க முழுக்க இளைஞர் அணியை வைத்து தமிழக முழுவதும் மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர் என அனைத்து நிலைகளிலும் ஆங்காங்கே உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து கொண்டாட வேண்டும் என மா.செக்களுக்கும் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் திமுகவுக்கு இளைஞர்கள் எந்த அளவுக்கு ஆதரவோடு இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிற வகையில் உதயநிதி பிறந்தநாள் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இப்போதே ஏற்பாடுகளில் இறங்கி விட்டார்கள். விஜய் பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு செயல்பாடுகள் மூலம் பதில் தர வேண்டும் என்று இளைஞரணிக்கு உத்தரவிட்டுள்ளார் உதயநிதி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
எனக்கு வேற வழி தெரியல ஆத்தா… அப்டேட் குமாரு
தென்னிந்தியாவின் எஃகு கோட்டை… இந்தியா டுடே பட்டியலில் இடம்பிடித்த ஸ்டாலின்