டிஜிட்டல் திண்ணை: சென்னையில் இருந்தே இந்தியாவை முடிவு செய்யும் ஸ்டாலின்- ஆச்சரிய அகிலேஷ்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ஆடியோ மூலம் வெளியிட்டு வரும் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பற்றிய அப்டேட் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதை பார்த்துக் கொண்டே வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

”செப்டம்பர் மாதம் முதல் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும் தேசிய அளவிலான பிரச்சனைகளை எழுப்பி பாஜகவுக்கு எதிரான ஆடியோ பாட்காஸ்ட் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் டிசம்பர் மாதம் 1ம் தேதி காலை 7 மணிக்கு ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா ஆடியோ பாட்காஸ்ட் வெளியாகும் என்று திமுக தரப்பிலிருந்து முதல் நாளே சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல இந்த முறை ஸ்டாலினோடு சேர்ந்து மேலும் இரண்டு மாநில முதலமைச்சர்கள் பேசுகிறார்கள் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் டிசம்பர் 1ஆம் தேதி ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா ஆடியோ வெளியாகவில்லை. இது குறித்து திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களை விசாரித்த போது,  டிசம்பர் 1ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக மீண்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் இந்த மாத ஆடியோ பாட்காஸ்டில் ஆளுநர்கள் விவகாரம் பற்றி தான் ஸ்டாலின் விரிவாக பேசியிருந்தார். அதனால் உச்சநீதிமன்றத்தின் லேட்டஸ்ட் கண்டனத்தையும் சேர்த்து இதை கொண்டு வரலாம் என்பதால் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டது என்றனர்.

அது மட்டுமல்ல இந்த மாத ’ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’வில் ஸ்டாலினுடன் மேலும் 2 மாநில முதல்வர்கள் பேசுகிறார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர்தான் அவர்கள்.   டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் தவிர்த்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் நிலையில் அந்த அப்டேட்டையும் சேர்த்து ஸ்பீக்கிங் ஃபார் இந்தியாவில் ஸ்டாலின் பேச திட்டமிட்டதாகவும் திமுக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், பாஜக தோல்வியடைய வேண்டும் என்கிற முனைப்பில் தான் ஸ்டாலின் இவ்வளவு தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்கு கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடந்த ஒரு சம்பவத்தையும் சாட்சியாக கூறுகிறார்கள் திமுக உயர்மட்ட பிரமுகர்கள்.

உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவை வி.பி.சிங் சிலை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார் ஸ்டாலின். சிலை திறப்பு விழா முடிவடைந்த பிறகு அகிலேஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஸ்டாலின் அவரிடம் சில முக்கியமான விஷயங்களை தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி இருக்கிறார்.

அதாவது, ‘வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதில் பெரும் பங்கு உங்கள் உத்தரப்பிரதேசத்திற்கு இருக்கிறது. உங்கள் மாநிலத்தில் இருந்து 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே அவர்களில் 40 முதல் 50 பேர் பாஜகவுக்கு எதிரானவர்களாக இருந்தால் தான் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க முடியும். அது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் காங்கிரசோடு சற்று நெருடலான போக்கை கடைபிடிக்கிறீர்கள் என்று தெரிகிறது. காங்கிரசுடன் கொஞ்சம் இணக்கமாக செல்லலாமே?’ என்று அகிலேஷிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். அதற்கு அகிலேஷ் யாதவ், ’உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தோம். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு அங்கே களத்தில் எந்த பலமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மாநிலம் முழுவதும் நிறுத்துவதற்கு அவர்களிடம் வேட்பாளர்கள் கூட இல்லை என்பது தான் உண்மையான நிலவரம். அதற்கு கூட அவர்கள் எங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இப்படி இருக்கும்போது நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டுமா… அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமா என்று நீங்களே சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார் அகிலேஷ்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ’நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் உத்தரப்பிரதேசம் போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று விட்டால் அது நாட்டுக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே காங்கிரசோடு சற்று அனுசரித்து செல்லுங்களேன்’ என்று மீண்டும் வேண்டுகோள் வைக்க அதற்காக உறுதியளித்துவிட்டு சென்றிருக்கிறார் அகிலேஷ்.

இவ்வாறு பரப்புரை மூலமாக மட்டுமல்ல ஒவ்வொரு தனிப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட ’இந்தியா’ கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

அதனால்தான் இனி வரும் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட் காஸ்ட் ஆடியோ பிரச்சாரத்தில் தன்னுடன் இந்தியா கூட்டணி தலைவர்களையும் இணைத்துக் கொண்டுள்ளார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

நெருங்கும் புயல்: வேகம் என்ன?… தூரம் என்ன?

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்தின் புதிய போட்டோ!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *