டிஜிட்டல் திண்ணை: விஜய் மாநாடு… அறிவாலயக் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டப் புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்டோபர் 27 ஆம் தேதி நடத்திய முதல் மாநாட்டில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

திராவிட மாடல் என்பது மக்கள் விரோத மாடல் என்றும், பாஜகவோடு டீலிங் வைத்திருக்கிறது திமுக என்றும் விமர்சித்தார்.  தனது ஐடியாலஜிக்கல் எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்றும் கூறினார்.

இந்த நிலையில், திமுகவின் சில அமைச்சர்கள் இதற்கு பதில் சொன்னார்களே தவிர அதிகாரபூர்வமாக திமுகவிடம் இது தொடர்பாக கண்டனமோ பதிலோ வெளிவரவில்லை.

ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில்  விஜய் மாநாடு பற்றியும் அதில் திமுக குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் நேற்று (அக்டோபர் 28) அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில்  முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ரியாக்ட் செய்திருக்கிறார்.

திமுகவின் 234 தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 28)  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விஜய் தலைமையில் நடைபெற்ற மறுநாள்தான், திமுகவின் இந்த கட்சி ரீதியான கூட்டம் நடைபெற்றது.

காலை 11.10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.  மேடையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்,  பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி,  முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்புத் துறை செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்  கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

தொடக்கத்தில் அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

“கடந்த எம்பி தேர்தலில் 40 தொகுதி வெற்றி பெற்றோம். இதில் சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களாகிய உங்கள் பங்கும் முக்கியம். முன்பு சூம் மீட்டிங் வழியே  தலைவர் உங்களுடன் பேசினர்.  இப்போது நேரடியாகவே உங்களை சந்திக்க விரும்பிதான் இந்தக் கூட்டம்.

6 மாதத்துக்கு ஒரு முறை ஒன்றிய, நகர, செயல்வீரர்கள்  கூட்டம் நடக்கணும். இதை நீங்க கண்காணிக்கணும்.  3 மாதத்துக்கு ஒரு முறை செயற்குழு கூட்டம் நடத்தணும். தலைமை சொல்லும் நிர்வாக உத்தரவுகள்,  பொதுக்கூட்ட நிகழ்வுகள், ஆர்பாட்ட நிகழ்வுகள் எல்லாம் சரியாக நடத்தப்படுகிறதா என்பதையும் நீங்கள்தான் பார்க்கணும்” என்று குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சை நிறைவு செய்யும்போது, ‘எதிரே அமர்ந்திருக்கும் துணை முதலமைச்சர்  சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை சந்தித்தபோது குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி விருந்து அளித்தார். இது தலைவர் ஏற்பாடு செய்திருக்கிற நிகழ்ச்சி. அதனால் சைவ சாப்பாடுதான் போடப்படுகிறது. சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘இது நான் நடத்துற நிகழ்ச்சி இல்ல. தலைமை நடத்துற நிகழ்ச்சி’ என்று பதிலளிக்க, அரங்கம் கலகலப்பாகத் தொடங்கியது. தொகுதிப் பார்வையாளர்களாக பணியாற்றிய சிலர் தங்கள் அனுபவத்தை  பகிர்ந்துகொண்டனர்.

ஏற்கனவே  ஊட்டி சட்டமன்றத் தொகுதியில் பொறுப்பாளராக பணியாற்றி இப்போது வானூருக்கு மாற்றப்பட்டிருக்கிற பொறியாளர் அணி செயலாளரான எஸ்.கே.பி. கருணா பேசும்போது…

“நான் ஊட்டியில வேலை பார்த்தேன். நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளித்தார்கள். இதன் மூலம்  கட்சியில் பல அனுபவங்கள் கிடைத்தன. ஊட்டியை போன்றே வானூரிலும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.

ஐ.டி.விங் ஆலோசகரும் தற்போது மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவி. லெனின் பேசும்போது,  ‘சென்னையில்  வாக்குப் பதிவு சதவிகிதம் குறைவு என்பது பலரின் பொதுக் கருத்தாக இருக்கிறது. ஆனால், முக்கியமான விஷயம், சென்னை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வேண்டிய பல பெயர்கள் நீக்கப்படவே இல்லை. வாடகைக்கு ஓரிடத்தில் குடியிருப்பவர்கள், அடுத்த தேர்தலுக்குள் சென்னையிலேயே வேறு ஒரு தொகுதிக்கோ அல்லது வெளியூருக்கோ குடிபெயர்ந்துவிடுகிறார்கள்.

இதனால் இரு இடங்களில்  டபுள் என்ட்ரியாக பல வாக்காளர்கள் பெயர்கள் உள்ளன. இறந்தவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. நமது கழகத்தின் மறைந்த செயல்வீரர் சைதை கிட்டுவின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. இதுபோல் பல கிட்டுகள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள். எனவே வாக்காளர் பட்டியலில் இருக்கும் டபுள் என்ட்ரி,  இறந்தவர்களின் பெயர்கள் நீக்குவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

தஞ்சை துணை மேயரும் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி பேசும்போது, ‘விராலிமலை தொகுதியில் தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அவரது கல்லூரிகளும் முக்கிய காரணம். அவருக்கு சொந்தமான கல்லூரி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் அவர் நல்ல தொடர்பில் இருக்கிறார். இது தேர்தலில் அவருக்கு கை கொடுக்கிறது. இப்படிப்பட்ட தொகுதி எதிர்க்கட்சியிடம் இருக்கிறது என்பதற்காக விட்டுவிடாமல் நாம் ஒரு அரசுக் கல்லூரியைத் தொடங்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசுகையில்,  “நீங்க போயிட்டு தொகுதியில் இருக்கும் கட்சிப்  பிரச்சினைகளையும் மக்கள் பிரச்சினைகளையும் தீர்க்க உதவணும். நீங்க போய் அந்தத் தொகுதி உட்கட்சி அரசியலில் சிக்கிக் கொள்ளக் கூடாது.  பெண்களுக்காக நமது அரசு செய்த அத்தனை நலத்திட்டங்களையும் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமது கட்சி நிர்வாகிகளுக்கு இருக்கிறது. அதை நீங்கள் கண்காணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி பேசுகையில்,  “இளைஞர்கள்  திமுகவுக்கு ஆர்வமாக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று பேசினார்.

அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான நேரு பேசுகையில்,  “வாக்காளர் பட்டியலில் செய்ய வேண்டிய திருத்தங்களை நாம் வேகமாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும். வருகிற 2026 தேர்தலில் நாம்தான் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். இது உறுதி” என்றார்.

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும்  முதலமைச்சருமான ஸ்டாலின் பேசும்போது  முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

‘சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களான நீங்கள்  மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களிடம் கட்சிப் பிரச்சினைகள், தொகுதிப் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் தீர்க்கவில்லை என்றால் தலைமையிடம் சொல்லுங்கள்.

கட்சியில் சிறு சிறு பூசல்கள் இருக்கத்தான் செய்யும், இது ஜனநாயகக் கட்சி. அதை முடிந்த அளவுக்கு சரி செய்யுங்க. அப்படி சரி செய்ய  முடியலைன்னா தலைமைக்கு எடுத்துட்டு வாங்க. அதுக்காக  நீங்களே ஊதி பெரிசாக்கிடாதீங்க

ஒன்றிய செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களை வேலை  வாங்குங்க. அவங்களோடு கூட்டு சேர்ந்துடாதீங்க.  தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியானதுமே… அந்த பட்டியல்ல இடம்பெற்றிருப்பவர்கள்கிட்ட சில நிர்வாகிகள், ‘இனிமே உங்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு இல்லை. உங்களைத்தான் வேற தொகுதிக்கு பார்வையாளராக போட்டுட்டாங்களே’ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். அப்படி யாரும் பயப்பட வேண்டாம். பார்வையாளராக இருக்கும் நீங்களும் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கும் அந்த வாய்ப்பு உண்டு.

தலைவர் கலைஞருக்கு பிடித்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில்  எப்போதும் வென்றான். அந்த பெயர்தான் இப்ப என் நினைவுக்கு வருகிறது. நாம் எப்போதும் வென்றான் தான்’. 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே நான் அறிவுறுத்தியிருக்கிறேன். எனவே அதை மனதில் கொண்டு பணியாற்றிங்கள்’ என்று சொல்லி நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின், மீண்டும் மைக் அருகே வந்து, ‘நேத்து நடந்த மாநாட்டைப் பத்தியெல்லாம் ரொம்ப கவலைப்பட வேணாம். அந்தக் கட்சி இந்தக் கட்சினு எந்தக் கட்சி வந்தாலும் நம்மைதான் விமர்சிப்பாங்க. இது புதுசு இல்லை. அதனால நாம யார் பேரையும் சொல்லி பதில் சொல்ல வேண்டியதில்லை, தேவைப்பட்டா தலைமைக் கழகம் பதில் சொல்லும். நாம நம்ம வேலையப் பாப்போம்’ என்று ஸ்டாலின் சொன்னதும் அரங்கமே கைதட்டியது.

விஜய் மாநாட்டுக்கு திமுக தலைவரின் ரியாக்‌ஷன் இதுதான்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

ஜெயலலிதா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தால்… எஸ்.பி.வேலுமணி ரிப்பீட்!

24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அலைபாயுதே கார்த்திக் -சக்தி

+1
0
+1
0
+1
0
+1
8
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *