வைஃபை ஆன் செய்ததும், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் பற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேட்டியும், இன்று பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் முதல்வர் பேசிய பேச்சும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நேற்று (அக்டோபர் 31) மாலை தலைமைச் செயலகத்தில் நடந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி விளக்கினார்.
’தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிற வகையில் ரூ.7,108 கோடி மதிப்பில் மேலும் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முன்வந்துள்ள 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை – 2023-க்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் திருச்சி, சேலம் மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்குவதில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு நிலம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்று பத்து நிமிடங்கள் விளக்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அப்போது செய்தியாளர்கள், ‘ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பியபோது, ‘அமைச்சரவைக் கூட்டத்தில் எவை விவாதிக்கப்பட்டதோ அதுகுறித்து உங்களிடம் சொல்லிவிட்டேன்’ என்று புன்னகை பூத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
இதேநேரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக தளப் பக்கத்தில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் ஒரு பதிவிட்டார். அதில், ‘ 8 தொழில் நிறுவனங்களுக்கு அமைப்பு முறைகளுக்கான தொகுப்புச் சலுகைகள், மாநில துறைமுகக் கொள்கை பற்றி குறிப்பிட்டதோடு, ‘மேலும் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள், அவற்றின் தற்போதைய நிலை – மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் – மழைக்கால முன்னேற்பாட்டு பணிகள் உள்ளிட்டவை குறித்து நம் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள் என்று சில கூடுதல் தகவல்களை வழக்கத்துக்கு மாறாக வெளியிட்டிருந்தார்.
நிதியமைச்சர் குறிப்பிட்டது என்பது அமைச்சரவை கூட்டத்தின் அஜெண்டா. அதாவது ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட படி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட அரசு நிர்வாக ரீதியான விஷயங்களைப் பற்றி மட்டுமே தங்கம் தென்னரசு கூறினார்.
ஆனால் வழக்கம்போல இந்த அஜெண்டா பணிகள் முடிந்ததும் சாதாரணமாக அமைச்சர்களிடம் முதலமைச்சர் உரையாடுவதும் அறிவுறுத்தல்கள் வழங்குவதும் ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் நடக்கும்.
அதுபோல நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அஜெண்டா பணிகள் முடிந்த பிறகு அமைச்சர்களுக்கு சில முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர்.,
‘நான் ஏற்கனவே உங்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையிலே எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளேன். பாஜக அரசின் விசாரணை அமைப்புகள் நம்மை வேவு பார்ப்பதிலும், வேட்டையாடுவதிலும் குறியாக உள்ளன. இன்றைக்கு ரெய்டு வரலாம், நாளைக்கு ரெய்டு வரலாமென்று இரவு வந்தால் தகவல்கள் எனக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
நாம் நடத்தக் கூடிய முக்கியமான சில ஆலோசனைகள் பாஜகவுக்கும், ஆளுநருக்கும் செல்கின்றன. இதை வைத்து அவர்கள் நமக்கு எதிராக செயல்படுவதற்கான ஏற்பாடுகளை வேகப்படுத்துகிறார்கள். அதனால் ஒவ்வொரு அமைச்சரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது அரசின் மீது பொதுமக்களிடம் தவறான அபிப்ராயத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் நாம் வழங்கிவிடக் கூடாது. ஜாக்கிரதையா இருங்க… ஜாக்கிரதையா இருங்க’ என்று அறிவுறுத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என்கிறார்கள்.
கூட்டத்துக்கு பிறகு, ‘அரசின் சில முக்கிய முடிவுகள் ஆலோசனையின்போதே ஆளுநருக்கு போகின்றன என்றால் அதற்கு காரணம் சில அதிகாரிகள்தான். அதிகாரிகளை மனதில் வைத்துதான் முதல்வர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். மத்திய அரசு சில முக்கியமான அதிகாரிகளை தன் கையிலெடுத்துவிட்டது. அவர்கள் மூலமாக மாநில அரசுக்குள்ளேயே மத்திய அரசு ஒரு நிழல் அரசை நடத்திக் கொண்டிருக்கிறது.
அதிகாரிகள் மீது இவ்வளவு நம்பிக்கை வைக்காதீர்கள் என்று ஆரம்பத்திலேயே சொன்னோம். ஆனால் அதிகாரிகளுக்கு அமைச்சர்களை விட அதிக சுதந்திரம் கொடுத்தார் முதலமைச்சர். இப்போது சில அதிகாரிகளே மத்திய அரசின் கைகளுக்குள் சென்றுவிட்டதை மறைமுகமாக குறிப்பிட்டு எச்சரிக்கை செய்திருக்கிறார்’ என்றும் கோட்டை வட்டாரத்தில் விவாதம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் இன்று பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து பேசிய ஸ்டாலின், ‘இன்றைக்கு நாட்டின் நிலைமை உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் சூழல் அமைந்திருக்கிறது’ என்று பேசியுள்ளார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…