டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் ஆன்லைனில் சிக்கிய அமைச்சர்கள்!

அரசியல்

வைஃபை ஆன் செய்த நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நடத்திய ஜூம் மீட்டிங் பற்றிய போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”அமைச்சரவை மாற்றம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இன்று (மே 14) பகல் 11 மணி முதல் 12.15 மணி வரை மாவட்டச் செயலாளர்கள், தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் கூட்டத்தை ஆன்லைனில் ஜூம் வழியாக நடத்தினார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தை ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரையாற்றி தொடங்கினார். அதன் பிறகு பேசத் தொடங்கிய ஸ்டாலின், ‘ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம். இதைக் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்களையும் நியமித்திருக்கிறோம். ஆனால் இப்போது என் கையில் 17 மாவட்டங்களில் இன்னும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் மந்தமாக இருப்பதாக பட்டியல் இருக்கிறது என்று சொல்லி அந்த 17 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் இன்று பதிலளித்தால் போதும் என்று கூட்டத்தைத் தொடங்கினார்.
முதலில் திருவள்ளூர் வடக்கு மாசெ.கோவிந்தராஜைதான் அழைத்தார் ஸ்டாலின்,
‘என்ன கோவிந்தராஜ் பூத் கமிட்டிகள் எல்லாம் போட்டாச்சா?
‘இன்னும் கொஞ்சம் இருக்குண்ணே…’

‘அணி நிர்வாகிகள் எல்லாம் கொடுத்துட்டீங்களா?

‘அண்ணே இன்னும் ஒரு வாரத்துல கொடுத்துடறேன்னே…’

உறுப்பினர் சேர்க்கை முழுசா முடிச்சிட்டீங்களா?’

‘இன்னும் பத்து நாள்ல முடிச்சிடுவேண்ணே’

இந்த பதில்களை கேட்ட திமுக தலைவர் ஸ்டாலின், ‘சொன்னபடி முடிக்கலைன்னா நான் மாத்திடுவேன் ஆமா’ என்றார். எடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின் இப்படி கூறியதைக் கேட்டு மற்ற மாசெக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே பதில் தந்தனர்.

அடுத்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டார். வேகமா நடந்துக்கிட்டிருக்கு தலைவரே முடிச்சிடறேன் என்றார் சேகர்பாபு. அடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரை ஸ்டாலின் உச்சரிக்க, அவர் ஆன் லைன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. வெளிநாட்டுப் பயணம் சென்றிருப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை.
அடுத்து சென்னை மாவட்டச் செயலாளர்களான மயிலை வேலு, சிற்றரசு ஆகியோரிடமும் கேள்விகள் கேட்டார் ஸ்டாலின். அவர்களும் அதே பதில்களைச் சொன்னார்கள்.


கிருஷ்ணகிரி மேற்கு ஒய்.பிரகாஷ், தர்மபுரி கிழக்கு தடங்கம் சுப்ரமணி, கள்ளக்குறிச்சி உதயசூரியன், காதர்பாட்சா முத்துராமலிங்கன், மணிமாறன், துரை.சந்திரசேகர், ஈரோடு நல்லசிவம், மணிமாறன் ஆகியோர் மற்றும் ஈரோடு முத்துசாமி, மதுரை மூர்த்தி, தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய அமைச்சர்களிடமும் பூத் கமிட்டி, அணி நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை தாமதம் பற்றி ஸ்டாலின் கேள்வி கேட்டிருக்கிறார். அனைவருமே, ‘இதோ முடிச்சுடறோம்’ என்றே பதிலளித்துள்ளனர்.

17 பேரிடமும் தனித்தனியாக விசாரித்த பிறகு தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ’ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் அணி நிர்வாகிகள் நியமனத்தை முடிக்கச் சொன்னோம். இன்னும் முடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? விரைவாக செயல்படுங்கள்,
ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. ஜூன் 5 ஆம் தேதி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் வருகிறார். ஜூன் 15 ஆம் தேதி திருவாரூர் கலைஞர் கோட்ட விழா இருக்கிறது. இதற்கெல்லாம் தீவிரமாக தயாராக வேண்டும்” என்ற ஸ்டாலின் வழக்கமான தனது வேண்டுகோளையும் வைக்க தவறவில்லை.
‘கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு செய்துகொடுங்கள். உங்களுக்கு கீழே இருக்கும் நிர்வாகிகளிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்’ என்று அறிவுரை வழங்கினார்.
கூட்டம் முடிந்ததும் நம்மிடம் பேசிய சில மாசெக்கள், ‘மொத்தம் 17 மாவட்டங்களில் மட்டும்தான் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக நடப்பதைப் போல ஸ்டாலின் பேசினார். மற்ற பல மாவட்டங்களிலும் இதுதான் நிலைமை. இரண்டு வருட ஆட்சியில் எவ்வித பலன்களையும் அடையாதது மட்டுமல்ல, மரியாதையும் இல்லாமல் நடத்தப்படுகிறார்கள் நிர்வாகிகள். அதனால் பல நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில் முழுமையான ஆர்வம் காட்டவில்லை. இஷ்டத்துக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் சொல்வதை எல்லாம் அதிகாரிகள் கேட்பதே இல்லை. அதிகாரிகள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. எம்.எல்.ஏ. சொல்வதை வி.ஏ.ஓ. கூட கேட்பதில்லை.

ஸ்டாலின் இதையெல்லாம் ஆராய வேண்டும். அப்போதுதான் மக்களவைத் தேர்தலுக்கு மாசெவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகள் முழுமையாக தயாராவார்கள். இந்த அதிருப்தி நீடித்தால் மெத்தனமும் நீடிக்கும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே” : ஆளுநர் உருக்கம்!

சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா?: டி.கே.சிவக்குமார் பதில்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *