வைஃபை ஆன் செய்ததும் மகாவிஷ்ணு விவகாரம் பற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் விசாரணை நடத்திய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளி ஆகியவற்றில் சர்ச்சையாக பேசி தற்போது சிறையில் இருக்கிறார் பரம்பொருள் ஃபவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு.
தற்போது பள்ளிக்கல்வித் துறைக்குள் ஆசிரியர்கள் மற்றும் மாண்வர்களிடையே முக்கியமான பேசுபொருள், ‘அந்த மகாவிஷ்ணுவை பள்ளிக்கு அழைத்து வந்தது யார்? அவர் பேச அனுமதி கொடுத்தது யார்? பரிந்துரைத்தது யார்?’ என்பதுதான்.
செப்டம்பர் 6 ஆம் தேதி சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் பள்ளி வாசலில் போராட்டம் நடத்தினார்கள். அங்கே சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘இன்னும் நான்கு நாட்களில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதன் பின் செப்டம்பர் 7 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அதேநேரம் மகாவிஷ்ணுவை அரசுப் பள்ளிக்கு அழைத்து வந்தது யார் என்ற விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் இந்த விசாரணையை நடத்தி வருகிறார், செப்டம்பர் 9 ஆம் தேதி தலைமைச் செயலாளார் முருகானந்தம், தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக ஒரு ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது துறை இயக்குனர் கண்ணப்பனிடம், ‘‘அந்த மகாவிஷ்ணுவை பள்ளிக்கு அழைத்து வந்தது யார்? அவர் பேச அனுமதி கொடுத்தது யார்? பரிந்துரைத்தது யார்? பள்ளிக்கு அவரை அழைத்து வந்தது யார்?’ என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் கேட்டிருக்கிறார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ், மாவட்டக் கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் இதுகுறித்து தங்களுக்கு தகவல் தெரியவில்லை விசாரித்து வருகிறோம் என்று கூறிய நிலையில்… துறை இயக்குனர் கண்ணப்பன் இன்று (செப்டம்பர் 9) மீண்டும் அசோக் நகர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் செப்டம்பர் 10 காலைக்குள் எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதித்துள்ளார் கண்ணப்பன்.
இது தொடர்பாக கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இடமாறுதல் செய்யப்பட்ட இரு தலைமை ஆசிரியர்களும் இன்னும் தாங்கள் எங்கே பணியமர்த்தப்பட்டார்களோ அங்கே சென்று சேரவில்லை. தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர், இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனவே அவர்களது இட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் வரை கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது சமுதாய ரீதியிலான விவகாரமாகவும் உருவெடுத்து வருகிறது.
தலைமை ஆசிரியர் தமிழரசி அன்றைக்கே மீடியாக்களிடம் பேசியபோது அனுமதி வாங்கிவிட்டுதான் நிகழ்ச்சி நடத்தினோம் என்று சொல்லியிருந்தார்.
என்ன நடந்திருக்கிறது என்றால் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஓர் அலுவலர் தலைமை ஆசிரியருக்கு போன் செய்துள்ளார். ‘மகாவிஷ்ணு என்பவர் மோட்டிவேட் ஸ்பீச் கொடுக்க உங்களது பள்ளிக்கு வர்றார், மேலேர்ந்து சொன்னாங்க. சிறப்பா ஏற்பாடு பண்ணுங்க’ என்று இரு பள்ளிகளுக்கும் சி.இ.ஓ. அலுவலகத்தில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படியேதான் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடே செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சி.இ.ஓ. ஆபிசில் இருந்து போனில் சொன்னதற்கான உரையாடல் பதிவும் பள்ளிகளிடம் இருக்கிறது என்று விசாரணையில் அதிகாரி சொல்லியிருக்கிறார்.
பொதுவாக சி.இ.ஓ. ஆபீசில் இருந்து தகவல்கள், அறிவுறுத்தல்கள் என்றால் அந்த ஆபிசின் அலுவலர்தான் போனில் தலைமை ஆசிரியருக்கு சொல்லுவார். இந்த விஷயத்திலும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் சி.இ.ஓ. சொல்லித்தான் இந்த அறிவுறுத்தலை வழங்கினாரா, அல்லது சி.இ.ஓ.வுக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட அறிவுறுத்தலை வழங்கினாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், சி.இ.ஓ. அலுவலகத்தில் இருந்து, ‘மேலேர்ந்து சொன்னாங்க. சிறப்பா ஏற்பாடு செய்யுங்க’ என்று சொன்னதன் பொருள் மேல் அதிகாரிகளா அல்லது அமைச்சகமா என்பதும் கேள்விக்குரியதாக இருக்கிறது. இதையெல்லாம் சில அதிகாரிகளே விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது சென்னை சி.இ.ஓ.வாக இருக்கும் மார்க்ஸ் இன்னும் சில மாதங்களில் இணை இயக்குனராக பதவி உயர்வு பெறும் பட்டியலில் இருக்கிறார்.
இந்த நிலையில் ஆசிரியர்களை பலிகடா ஆக்கிவிட்டு அதிகாரிகள் தப்பிக்கப் பார்க்கிறாரக்ள் என்ற விவாதம் தமிழ்நாடு முழுதும் ஆசிரியர்களிடமும் ஆசிரியர் சங்கத்தினரிடமும் விவாதமாக வெடித்து வருகிறது.
இதையெல்லாம் கவனமாக கையாண்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் விசாரணையை முடித்து துறைச் செயலாளர் மதுமதி ஐ..ஏ.எஸ்.சிடம் அளிக்க இருக்கிறார். அந்த விசாரணை அறிக்கை தலைமைச் செயலாளரிடம் வழங்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் இதே துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். பள்ளிக் கல்வித் துறைக்குள் இருக்கும் நீக்கு போக்குகள், ஆழ அகலங்களை அறிந்தவர். எனவே இந்த விவகாரத்தில் கண்ணப்பனின் அனுபவமும் ஆழங்காற்பட்ட அறிவும் வெளிப்படும் என்கிறார்கள் ஆசிரியர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டீங்களே? – அப்டேட் குமாரு
திமுக முப்பெரும் விழா: ‘ஸ்டாலின் விருது’ யாருக்கு?