டிஜிட்டல் திண்ணை: கைதான மகா விஷ்ணு… அடுத்தது செக்ஸ் வழக்கு! ஏர்போர்ட் முதல் கோர்ட் வரை நடந்தது என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சென்னை அரசு பள்ளிகளில் மூடநம்பிக்கையை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“சென்னை அரசுப் பள்ளிகளில் தன்னம்பிக்கை பேச்சுக்காக அழைக்கப்பட்ட மகாவிஷ்ணு அங்கே மூட நம்பிக்கைகளை பரப்பியதாகவும் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தியதாகவும் சர்ச்சை வெடித்தது.
இந்தப் பிறவியில் ஊனமுற்று இருப்பவர்கள் கடந்த பிறவியில் பாவம் செய்தவர்கள் என்று மகாவிஷ்ணு பேச… அப்போதே இதை தமிழ் ஆசிரியர் சங்கர் எதிர்த்து தட்டிக் கேட்க அவருக்கும் மகாவிஷ்ணுவுக்குமான உரையாடல் வாக்குவாதமாக மாறியது.

இந்த காட்சிகளை மகாவிஷ்ணுவே தனது யூடியூப் சேனலில் வெளியிட்டதால் அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன. மாற்றுத் திறனாளிகளை இழிவு படுத்தியதாகவும் அவமதித்ததாகவும் மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் சங்கத்தால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீது மாற்று திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்த மகாவிஷ்ணு செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்து அடைந்தார்.

சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தடைந்த மகாவிஷ்ணுவை கைது செய்வதற்காக விமான நிலைய வளாகத்தில் சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அடையாறு டி.சி. பொன் கார்த்திக் குமார் தலைமையில் இந்த ஆபரேஷன் திட்டமிடப்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் இன்டர்நேஷனல் முனைய வாசலிலும் விஐபி வாசலிலும் செய்தியாளர்களும் மகாவிஷ்ணுவின் ஆதரவாளர்களும் அவருக்காக காத்திருந்தனர்.

ஆனால் மகாவிஷ்ணு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் இருந்து கீழே இறங்கியதுமே இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டிலேயே வைத்து அவரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வழக்கமாக அழைத்து வரும் வழியாக அழைத்து வரவில்லை. அங்கே செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில், மகாவிஷ்ணு கேமராக்கள் முன்பு ஏதாவது பேசுவார் என்பதால் அதை தவிர்க்க திட்டமிட்டனர் போலீஸார்.

மகாவிஷ்ணுவிடம், ‘வெளியே உங்களுக்கு எதிராக பலர் திரண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் நாங்கள் சொல்றபடி கேளுங்க’ என்று சொல்லி… அவரை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இருந்து டொமஸ்டிக் ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்ற போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து காவல்துறை அல்லாத தனி வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்தை விட்டு புறப்பட்டனர்.அப்போது சுமார் 2.30 மணி இருக்கும் என்கிறார்கள் விமான நிலைய வட்டாரத்தில்.

வாகனத்திலேயே மகாவிஷ்ணுவிடம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். அப்போது அவர் தான் எந்த உள்நோக்கத்தோடும் அந்தப் பள்ளியில் பேசவில்லை அந்த நேரத்தில் வெளிப்பட்ட கருத்துக்களை தான் தெரிவித்தேன் என்று கூறியதாகவும் தெரிகிறது.

அதன் பிறகு இன்று மாலை அவரை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் இருக்கும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினார்கள், அவர் செப்டம்பர் 20ஆம் தேதி வரை மகாவிஷ்ணுவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி இன்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது மட்டுமல்ல நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இந்த விவகாரம் குறித்து முக்கியமான ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் தஞ்சாவூர் புறப்பட்டு சென்று விட்டார்,

இந்த நிலையில் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேஷன் யூ ட்யூப் சேனலில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் டவுன்லோட் செய்தனர் போலீசார். ஒருவேளை இப்போது போடப்பட்டிருக்கும் வழக்கில் அவருக்கு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்து விட்டால் கூட, அவர் மீது வேறு என்னென்ன வழக்குகள் போடுவதற்கு முகாந்திரங்கள் இருக்கின்றன என்று அந்த வீடியோக்களை வைத்து ஒரு டீம் சட்ட நிபுணர்களிடமும் ஆலோசித்து வருகிறது.

அதன்படி மகாவிஷ்ணு செக்ஸ் எஜுகேஷன் தொடர்பான வகுப்புகளை நடத்தி இருப்பதும் அவரது யூடியூப் சேனலிலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் மகாவிஷ்ணு எப்படி பாலியல் கல்வியை உபதேசிக்கலாம்? இது சட்ட விரோதம் என்ற அடிப்படையில் அவர் மீது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் மூலமாகவே புகார்கள் பெறுவதற்கான ஆப்ரேஷனும் போலீஸ் வட்டாரத்தில் தொடங்கிவிட்டது.  எனவே அடுத்தது மகாவிஷ்ணு மீது செக்ஸ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அதாவது இப்போது மகாவிஷ்ணுவை ஆதரிப்பவர்கள் அவர் பாவம், புண்ணியம் போன்ற இந்து மத கோட்பாடுகளை பேசியதாக தான் கைது செய்யப்பட்டு விட்டார் என்று திமுக அரசு மீது புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் மீது பாலியல் கல்வி தொடர்பான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் இப்படிப்பட்ட கருத்துருவாக்கங்களை மாற்றலாம் என்ற அடிப்படையில் மகாவிஷ்ணு மீது அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்வது பற்றிய ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘35’ – ‘சின்ன கத காது’: விமர்சனம்!

நிதிஷ்குமார் கட்சிக்குள் அதிகரிக்கும் மோடி எதிர்ப்பு! தியாகி பற்ற வைத்த தீப்பொறி! பிகார் அரசியலில் பூகம்பம்!

+1
1
+1
1
+1
0
+1
7
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *