டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் – திருமா… தன்னந்தனியே உரையாடிய பத்து நிமிடங்கள்!
வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் இன்று ஜூலை 12ஆம் தேதி சந்தித்த போட்டோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை ஒரு பார்வை பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக கூட்டணியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினை அந்தக் கூட்டணியின் முக்கிய கட்சி தலைவரான திருமாவளவன் ஜூலை 12 காலை பத்தே முக்கால் மணி வாக்கில் சந்தித்தார்.
சில தினங்களுக்கு முன்பே முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இன்று காலை சந்திக்க நேரம் அளித்தார் ஸ்டாலின்.
கடந்த வாரம் தமிழகத்தை மட்டும் இன்றி தேசிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்.
அந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று ஒரே குரலில் குற்றம் சாட்டினார்கள். அதே நேரம் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ’தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற ஒரு கேள்வி எழுகிறது. இது சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது’ என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
திருமாவின் நடவடிக்கைகள் ஆம்ஸ்ட்ராங் கொலையை தலித் அரசியலுக்கு எதிரான, தலித் அரசியலை ஒடுக்கும் நிகழ்வாக சித்திரிக்கும் வகையில் இருப்பதாக ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் சென்றது. திருமாவின் இந்த நடவடிக்கை முதல்வர் ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள் திமுக சீனியர்கள்.
இந்த நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை, அவர் அரசியலில் ஈடுபட்டிருந்த நிலையிலும் சிலரோடு தகராறு இருந்திருக்கிறது என்று அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனர் ரத்தோர் பதிலளித்தார்.
இந்த பின்னணியில் தான் இன்று முதலமைச்சரை சந்தித்தார் திருமாவளவன். அப்போது முதலமைச்சரிடம் அவர் கொடுத்த மனுவில் ’நீட் எதிர்ப்பு போராட்டத்தை தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டும்’, ’மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தன.
மனு கொடுக்கும் சம்பிரதாய நிகழ்வு முடிந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் சுமார் 10 நிமிடங்கள் தனியாக உரையாடி இருக்கிறார்கள். இந்த உரையாடலில் ஆம்ஸ்ட்ராங் விவகாரம் பற்றி தான் அதிகமாக பேசப்பட்டிருக்கிறது என்று கோட்டை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
’அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தரப்பிலிருந்து இரண்டு மூன்று முறை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கு. ஆனால் அவர் அதை அலட்சியமாக விட்டுருக்காரு’ என்று திருமாவிடம் முதலமைச்சர் தன்னுடைய கவலையை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதே நேரம் இந்த படுகொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எதிர்க்கட்சிகளுக்கு சற்றும் குறையாத தொனியில் திருமாவளவன் பேசிய சில கருத்துக்களுக்கு தன்னுடைய வருத்தத்தையும் விளக்கத்தையும் அவரிடமே தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
அப்போது திருமாவளவன் தான் எவ்வித உள்நோக்கத்தோடும் அந்த கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று விளக்கியிருக்கிறார். அதோடு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆருத்ரா கோல்டு கம்பெனி விவகாரம் அதனோடு நெருங்கிய தொடர்புடைய பாஜக புள்ளிகள் இவர்களை மையப்படுத்தி பல ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டுள்ளன, எனவே அந்த திசையில் விசாரணையை தீவிரப்படுத்த கோரிக்கை வைத்திருக்கிறார்.
மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கிற நிலையில் திமுக அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான நிகழ்வுகளை திட்டமிட்டு உருவாக்க பாஜக செயல் திட்டம் வைத்திருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. எனவே பாஜக மீதான பாஜகவினர் மீதான அணுகுமுறையை கடுமையாக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் திருமாவளவன். இதனை செய்தியாளர் சந்திப்பிலும் திருமாவளவன் அங்கேயே வெளிப்படுத்தினார்.
திமுக வட்டாரத்தில் பேசும்போது, ’திருமாவிடம் ஸ்டாலின் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கியிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் சமூக விரோதிகள் எந்த கட்சியில் இருந்தாலும் அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் திமுக கூட்டணி கட்சியாக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் உத்தரவு பறந்திருக்கிறது’ என்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அம்பானி வீட்டில் ஆட்டம் போட்ட ரஜினி : வைரல் வீடியோ!
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது : சித்தராமையா