டிஜிட்டல் திண்ணை: கூட்டணித் தலைவர்களோடு 40 நிமிடங்கள்… ஸ்டாலின் வீட்டில் நடந்தது என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அவரது இல்லத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்த புகைப்படம் இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் இன்று (அக்டோபர் 26) முற்பகல்  முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தனர்.

இன்று காலை தான் அமைச்சர் எ.வ.வேலு மூலமாக தலைவர்களுக்கு முதல்வரின் சந்திப்பு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் முதல்வர் இல்லத்துக்குச் சென்றனர். திருமாவளவனோடு விசிகவின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வனும் சென்றிருந்தார்.

 

அக்டோபர் முதல் வாரத்தில் காஞ்சி மாவட்டத்தில் சாம்சங் போராட்டம் தீவிரமாக இருந்தபோது, போராட்டக் களத்தில் இருந்த தொழிலாளர்களை கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாளவன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும்,  முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும்  முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தனர். அதன்படியே ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.

இதற்கிடையில், அக்டோபர் 10-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுடைய சகோதரி கணவர் முரசொலி செல்வம் காலமானதால் முதல்வரை இந்த விஷயமாக கூட்டணித் தலைவர்களால் சந்திக்க முடியவில்லை. முரசொலி செல்வத்தின் மறைவுக்கு துக்கம் கேட்கவும், இறுதி நிகழ்விலும் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் அப்போது முதல்வரின் துயரத்தில் பங்குகொண்டார்களே தவிர, வேறு விஷயங்கள் பற்றி பேசும் சூழல் இல்லை.

இந்நிலையில், அக்டோபர் 14, 15 தேதிகளில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பேச்சு நடத்தப்பட்டு, சாம்சங் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்குப் பிறகான் அரசியல் சூழலில் கடந்த ஒரு வாரமாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘திமுக கூட்டணி 2026க்குள் நிச்சயம் உடையும். கூட்டணிக் கட்சிகள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என்று தொடர்ந்து சொல்லிவந்தார்.

‘முதல்வர் ஸ்டாலினும் இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘எடப்பாடி பழனிசாமி ஜோசியம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி. இங்கே விவாதங்கள் நடக்குமே தவிர விரிசல் ஏற்படாது’ என்று  பேசினார். ஆனால் எடப்பாடியோ மீண்டும், ‘ஜோதிடம் பலிக்கும்’ என்று கூறினார்.

இந்த நிலையில்தான் திமுக கூட்டணித் தலைவர்களை சந்திக்க திடீரென இன்று (அக்டோபர் 26)  நேரம் ஒதுக்கினார் முதல்வர்.  கூட்டணித் தலைவர்களை அமைச்சர் எ.வ.வேலுதான் வரவேற்று அழைத்துச் சென்றார்.

வீட்டுக்கு வந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு டீ, காபி அளித்தார் ஸ்டாலின்.  ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர் சொல்ல,  கூட்டணித் தலைவர்கள் ஸ்வீட்  சாப்பிடுவதில்லை என்று மறுத்துவிட்டனர்.

சாம்சங் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவித்த கூட்டணித் தலைவர்கள்… ஆனாலும் போராட்டத்துக்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை என்பதை முதல்வரிடம் தெரிவித்தனர். குறிப்பாக தொழிற்சங்கப் பதிவு தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் வரும்போது… தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிற்சங்கத்துக்கு சாதகமான பதிலை தெரிவிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.  ஸ்டாலினும், இதுபற்றி அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பேசிவிட்டு நல்ல முடிவை எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அப்போது விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் முதல்வரிடம் ஒரு மனுவை அளித்திருக்கிறார். அதில் தமிழ்நாட்டு சுகாதாரத் துறையில் சுமார் 4 ஆயிரம் டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அவற்றை நிரப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட முதல்வர் உடனடியாக தனது செயலாளரை அழைத்து விசாரித்துள்ளார்.  அப்போது  முதல்வரின் செயலாளர்,  ‘விரைவில் 2600 அரசு டாக்டர்களை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’ என்று கூறியிருக்கிறார். விரைவாக செய்யுங்கள் என்று சொன்ன முதல்வர்,  மனுவைக் கொடுத்த சிந்தனைச் செல்வனிடம், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சாம்சங் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கூட்டணித் தலைவர்களிடம் சுமார் 40 நிமிடங்கள் விவாதித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது கூட்டணித் தலைவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் அமைந்திருக்கிறது.

‘பொதுவாகவே ஸ்டாலினைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அதிகபட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் சந்திப்பு முடிந்துவிடும். ஆனால், இந்த முறை 40 நிமிடங்கள் ஒதுக்கி முதல்வர் பொறுமையாகக் கேட்டிருக்கிறார்.

இதன் மூலம் திமுக கூட்டணியில் சலசலப்புகள் என்று எழுந்த செய்திகளுக்கு எல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார் முதல்வர். இதேபோல குறிப்பிட்ட  கால இடைவெளியில் கூட்டணித் தலைவர்களை முதல்வர் தொடர்ந்து சாவகாசமாக சந்திக்க வேண்டும்’ என்கிறார்கள் கூட்டணித் தலைவர்கள் வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெள்ளியங்கிரி கட்டணம் ஆன்மீக பயணத்திற்கு அல்ல: அரசு மறுப்பு!

“அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ செஞ்சிருவோம்” – செல்லூர் ராஜூவிடம் அமைச்சர் மூர்த்தி

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *